விதவைகளின் மறுமணம்

ஊர் கூடி முடிவெடுத்து
ஜாதகம் பொருத்தம் பார்த்து
சம்பிரதாயங்களுடன்
சடங்குகளும் செய்வித்து
கனாக்கண்டு கைத்தலம் பற்றினேன் ...!
அன்புடன் கலந்து
காதல் பேசி
உடல்கூடலுடன்
உருவம் பெற்று மகவாய் உதித்தது நம் காதல்...!
ஊழிப் பேரலையாய்
உள்ளம் அதிர
உதிரம் கசியும் உன் உடல்
சிதறி கிடைக்கும் செய்தி வந்து சேர்ந்தது...!
என் கனவெல்லாம் தகர்ந்து போக
கடைசித்தடவையாய்
உன் முகம் பார்த்துக் கொள்ள பணிக்கப்பட்டேன்...!
உன்னை கேட்டு அழும்
நம் மகளிடம்
நீ தெய்வமாகிச் சென்றதாய்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என் கண்ணில் வழியும்
நீரைத் துடைத்துக்கொள்ள மறந்து..!
திருமணத்தில் வந்து பார்த்த சமூகம்
உன் இறப்பிற்கு பின்
அனாதையாய்
என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது ...!
பரிதாபத்துடன் சிலவும்....
போலியுடன் சிலவும்..
வக்கிரமான சில கண்களும்
மேயத் துவங்குகின்றன..!
உன் மகளைக் காக்கும் பணியில்
என்னையமர்த்திவிட்டு
மறித்து போனாய் அன்பே ..!
பணி தேடித் தேடி களைத்த
எனக்கு விதவைப் பட்டத்தால்
ஒரு வேலை கிடைத்தது...!
அலுவலகத்தில் அனைவரையும் போலத்தான்
பணி புரிகிறேன்..!
அப்படிகூட இல்லை அனைவரையும்விட
அதிகமாய் தான் பணி புரிகிறேன்..!
பணி முடித்து வீடு திரும்பும் வழியெங்கும்
தனித்திருக்கும் எட்டு வயது
பிஞ்சுவின் நினைவுகள்
பயமாய் வந்து மொய்க்கும்..!
கசக்கி எறியப்படும் காகிதமாய் சிக்கி
முண்டியடித்த்து பேருந்திலேறி
முட்டி மோதி நிற்பதற்கு
இடம் கிடைத்ததும்
ஆசுவாசப்படும் மனதில்
சமைக்க வேண்டுமேயென்ற அவசரம் நிரம்பும் .!
உரசல்களாலும் உடல்பித்தன்களாலும்
நெருக்கப்படும் எனதுடலை
முடிந்தவரை சுருக்கி
ஒடுங்கி கிடந்து
வீடடைந்து,
சமையல் முடித்து
சற்றே சாயும் நேரத்தில்
என் பிஞ்சு மழலை
உறங்கிப் போயிருப்பாள் ...!
பனியின் அலுப்பு தட்ட
சற்றே இமைமூடி உறக்கம் தலைப்பட
உள்ளிருந்து உன் குரல் கேட்டு
திடுக்கிட்டு விழித்துத் தேடுவேன் உன்னை..!
கடைசியில் திவ்யமாய்
சிரித்து கொண்டிருப்பாய்
மாலையிடப்பட்ட புகைப்படத்திலிருந்து நீ..!
என் அநேக இரவுகளின் அதிகபட்ச நேரங்கள்
உன் புகைப்படத்தினருகே
கண்ணீருடன் கரைந்து போகின்றன...!
அடித்துப் பிடித்து ஆனமட்டும்
சிறுகச் சிறுகச் சேர்ப்பித்த
பணம் பள்ளிக்கும் மருத்துவத்திற்கும்
பாழாய்ப் போன வயிற்றிற்க்குமே
எட்டியும் எட்டாமலும்
போகின்றது..!
அக்கம் பக்கத்து வீட்டு கழுகுகளும்
அலுவலகத்துப் பிணந்தின்னிகளும்
உதவிக்கரம் நீட்டுவதாய் சொல்லிக்கொண்டு
வலைவிரிக்கப் பார்க்கின்றன...!
நாம் வாழ்ந்த காலத்தில்
திரண்டு வந்த கூட்டமும்
உறவுகளென ஆதரவளிப்பதாக
சொன்ன நரிகளும்
இருக்கும் இடம் தெரியாமலே
பார்த்தும் பாராமல்
கடந்து போகின்றன..!
ஒற்றை ஆளாய் நின்று
நம் மகவை
ஆளாக்கி கொண்டிருக்கிறேன்...!
ஊர் வாய்க்கு அவலாகவும்
சமூகத்தில் காட்சி பொருளாகவும்
வேட்டையாடத் துடிக்கும்
வல்லூறுகளுக்கு மத்தியில்
வால்வதைக் காட்டிலும்
மறுகல்யாணம் செய்து கொள்வதென்று
முடிவெடுத்துள்ளேன்...!
அவன் எனக்கும் என் மகளுக்கும்
பாதுகாப்பளிப்பான்
என்ற நம்பிக்கையில் மட்டுமல்ல..
சில குரூர கண்களுக்கு
திரையிட வேண்டியும்..!
இம்முடிவை நீயும்
விரும்புவாய் மற்றும்
விரும்பியேதான் ஆகவேண்டிய சூழலில்தான் நான் ..!