விநாயகரும் விளாம்பழமும்

ஒவ்வொரு விழாவையும் அதனதன் வழக்கப்படி கொண்டாட வேண்டும் என்பது என் மனைவியின் வழக்கம்; அது அவரது தாயாரிடமிருந்து கற்றுக் கொண்டது; எங்கள் திருமணமாகி 48 வருடங்கள் கழிந்த பின்னும், ஒவ்வொரு ஆண்டும் செய்யும் விழாவுக்கான பழக்கங்களையும், இறைவனுக்குப் படைக்கப்படும் பொருட்களையும் மறப்பதில்லை.

இந்த வருடம் விநாயக சதுர்த்திக்கு அவல், பொரி, கடலை, விளாம்பழம், பேரிக்காய், தேங்காய், மல்லிகைப் பூ, கதம்பம், வெற்றிலை, பாக்கு வாங்கி வரப் பணித்தார். கீழேயுள்ள பாடலை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலும், அரச மர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

அவல் பொரிகடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார் (பிள்ளையார்)

கலியுகத்து விந்தைகளைக் காணவே அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார் (பிள்ளையார்)

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கிவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

விநாயகருக்கு விளாம்பழம் படைப்பதன் தத்துவம் என்னவென்று வலைத்தளத்தில் தேடினேன். விநாயகர் சதுர்த்தி வரும் போது கூடவே கடைத் தெருவில் விளாம்பழமும் விற்பனைக்கு வந்து விடுகிறதே! மனிதன் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளாம்பழம் குறிக்கிறது.

விளாங்காயாக இருக்கும் போது, ஓடு பச்சையாக இருக்கும். உள்ளே இருக்கும் சதையும் ஓடோடு இறுக ஒட்டிக்கொண்டிருக்கும். அது போல் பக்குவமில்லாத நிலையில் மனிதன் உலக ஆசைகளோடு ஒட்டியிருப்பான். அவனைப் பிரித்தெடுப்பது கடினம்!

விளாங்காய், பழமாக மாறியபின் ஓடு மஞ்சள் கலந்த நிறமாக மாறி விடும். உள்ளே இருக்கும் சதையும் ஓட்டை விட்டுப் பிரிந்து தனியாக வந்து விடும். அது மட்டுமல்ல. பழத்தின் நறுமணமும் கூடிவிடும். ஞான நிலையைப் பற்றிக் குறிக்கும் விளாம்பழத்தை ஞானக் கொழுந்தாய் விளங்கும் விநாயகனுக்கு அளிப்பதுவே சிறப்பு ஆகும்.

பக்குவப்பட்ட மனிதன் இறையனுபவத்தை நாட ஆரம்பித்தவுடன் உலக ஆசைகளை விட்டு விலக ஆரம்பித்து விடுவான். காயாய் இருந்த அவன், கனியாய்க் கனிந்து விடுவான். கனிந்த பழத்தை அதன் மணம் காட்டி கொடுத்து விடும். அது போல் ஞான மார்க்கத்தின் வழியில் செல்லும் அவரை அவருடைய ஞானம் காட்டிக் கொடுத்துவிடும்.

விளா இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து பழங்களைத் தரும் ஒரு மரம். இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

விளாம்பழத்தில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன. விளாம்பழம் Wood Apple, Elephant Apple, Monkey Fruit or Curd Fruit என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது..

இதன் வேறு பெயர்கள் கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளில் போன்றவை.

இரு விகற்ப நேரிசை வெண்பா

எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்,
வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்
என்றாகி லுங்கனிமேல் இச்சைவைத்துத் தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின்.

என்கிறது அகத்தியர் குணபாடம்.

பொருளுரை:

உடம்புக்கு இதமான விளாம்பழம் ஈளை, இருமல், கபம், தணியாத தாகம் போக்கும். பசியை உண்டாக்கும். இந்தவுலகத்தில் என்றாவது பழத்தின் மேல் விருப்பம் கொண்டு தின்ன ஆசைப்பட்டால், கனிகளிலேயே முதன்மையான விளாங்கனியைத் தின்ன ஆசை கொள் என்கிறார் அகத்தியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-16, 1:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே