மறதி கொல்ல வழி தேடுகிறேன்
இனியவளே
மறதிக்கொல்ல வழி தேடுகிறேன்.
மறந்துபோனதடி உன்முகம்.
உன் முகத்தை
மனதில் மாட்டிவைக்க
ஒரு நிழற்படம் தந்தாயா?
கடற்கரையில் நீயும் நானும்
கைகோர்த்து நடக்கும்போது
காற்றுமணல் உன் அழகு முகத்தை
தீண்டும்போது
கடலை காவு கேட்டதை மறவேனா!
புன்னை மர நிழலில்
அமர்ந்திருந்த போது இலை ஒதுங்கி
வெயில் விழுந்ததில்
நீ பிரிந்தமர்ந்தாய்.
புன்னை மீது கோபம் கொண்டதை
மறவேனா!
பூக்காரிக்கு தெரியாமல்
பூத்திருடி உன் கூந்தலில் சூட்டியபோது
திருட்டு பயலே என்று
செல்லமாய் அடித்ததை மறவேனா!
நேரம் மறந்து பேசும்போது
ஆலயமணியின் ஓசை தொந்தரவில்
சாமியை சாடியதை மறவேனா!
திரையரங்கில் நம் இருக்கையருகில்
அமர்ந்தவனை எரிச்சலோடு
பார்த்ததை மறவேனா!
எச்சில் துடைக்க தாவணி தந்தபோது
ஏக்கம்
எச்சமாய் நின்றதை மறவேனா!
சந்தித்து பிரியும்போதெல்லாம்
மனதில் விழுமே மரணஅடி
மறவேனா!
ஒரு வரிகூட இல்லாத
உன் வாழ்த்து அட்டையை
ஓராயிரம் முறை படித்தேனே
மறவேனா!
நினைவுகள் எல்லாமே
நிரம்பி வருகுதடி. உன்
முகம் மட்டும் மறந்து போனதடி.
மறதியைக்கொல்ல வழி தேடுகிறேன்.