நெல்லை டாக்கீஸ்

சின்னத்தாயின் அம்மாவை
நெப்போலியன் கத்தியால் குத்திய போதும்
பொன்னுமணியின் மாமா மகள்
சிந்தாமணி பைத்தியமான போதும் அழுத
லெட்சுமி தியேட்டர்
லக்ஷ்மி மஹாலாகி விட்டது
.
கோவைசரளாவின் சேலையைப் பிடித்து இழுத்து
வாடி பொட்டப்புள்ள வெளிய என்று
வடிவேலு குடித்து விட்டு ஆடிய
பார்வதி தியேட்டர்
பார்வதி ஷேஷ மஹாலாகி விட்டது
.
நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்குயிலே என்று
தட்டை உருட்டி விட்டு பாடிய
பெரிய வீட்டு பண்னைக்காரனை பார்த்த
ராயல் தியேட்டர் போத்தீஸின் சூப்பர் மார்கெட்டாகி விட்டது
.
கனேஷ் என பெயர் மாற்றியிருக்கும்
பாப்புலர் தியேட்டரோ ஏதோ பெயருக்கு
துவைக்காத அழுக்கு வேட்டியில்
மங்கலான படம் ஓட்டுகிறது
.
தாராள தரிசனம் கண்ட பக்தனே புகாரளிக்க
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த
கேரள ஷகிலாவை பாளையங்"கோர்ட்டுக்கு" இழுத்த
கலைவாணி தியேட்டர் காணாமல் போய்விட்டது
.
அடிதடி சண்டைக்கு ஆசைப்பட்டு
ஆனஸ்ட் ராஜ், அசுரன் பார்த்த
அந்த சென்டிரல் தியேட்டர்
அடைத்தே கிடக்கிறது இப்போது
.
முன் இருக்கையில் தெரிந்தவர் இருக்க
வசனமாடா முக்கியம் படத்தில்
வசனத்தை மட்டுமே கேட்டு
கடைசி வரை தலை நிமிராமல் வந்த
சிவசக்தி தியேட்டர் இரும்பு குடோனாகிவிட்டது
.
அழகிய லைலாவாக ஆட்டிப்படைத்து
உள்ளத்தை அள்ளித் தந்த
ரம்பாவை முதலில் பார்த்த செல்வம் தியேட்டர்
அடுக்குமாடியாக அடையாளம் மாற்றிக் கொண்டது
.
ம்ம்ம்ம்... என்ன செய்ய.?
கவலைபட்டுக் கொண்டே
கைப்பேசியில் பதிவிறக்கி கொண்டிருக்கிறேன்
மிச்சமிருக்கும் நாலு தியேட்டர்களில்
நாளை வெளியாகவிருக்கும் புதிய படங்களை

எழுதியவர் : மணி அமரன் (9-Sep-16, 3:58 pm)
பார்வை : 133

மேலே