நீரும் எரிக்கும்

(1991-ல் பற்றி எரிந்த காவேரி என்னுள் பற்ற வைத்த வார்த்தைகள் இவை)


நீரால்
பற்றி எரியும்
எந்த நெருப்பும்
அணைவதுதானே இயற்கை...?

நீரால்
காவேரி நீரால்
அன்னைத் தமிழகமே
பற்றி எரிகிறதே
இதென்ன விந்தை...?

நாவிற்கு நீர் கேட்டால்
சாவிற்கு வழி சொல்கிறான்
கன்னடத்துச் சகோதரன்...!

அங்கே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நம் உறவுகளின்
கண்ணீரையும் செந்நீரையும்
காவிரியென அனுப்புகிறான்...!

'தோட்டங்களின் நகரிலே' துப்பாக்கித்
தோட்டாக்களின் தொடரோட்டம்.
அத்தனையும் அப்பாவித் தமிழர்களை நோக்கி...

நம்
கன்னியர்கள் கூட கண்ணீரையும்
கனலாக்கிக் காத்திருக்கிறார்கள்
கொடிய அவர்களைச் சுட்டெரிக்க...

நம்
முதியவர்கள் விடும்மூச்சுக் காத்து கூட
முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
தீயவர்களை ஊதித்தள்ள...

அன்புக் கட்டளையிடுவோம்
அவர்களையெல்லாம் காத்திருக்கச் சொல்லி.

என்ன செய்வது..
எதிரில் நிற்பது எம் சோதரனல்லவா..!
காத்திருப்போம்...

அன்புத் தாயின் மடு
ஊறும் உயிர் வெள்ளம்
அவள் பிள்ளைகள் எவர்க்கும்
பொதுவென்ற உண்மையைச்
சகோதரனவனும், நம்மால் வாழும்
அரசியல்வாதிகளும் ஒத்துக் கொண்டு
திருத்தியெழுதும் காலம் வந்துவிட்டது.
காத்திருப்போம்....

எழுதியவர் : சுடரோன் (10-Sep-16, 12:43 pm)
Tanglish : neerum erikkum
பார்வை : 97

மேலே