மனதாலும் நினைக்கக் கூடாதது

ரங்கசாமி ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார்.அந்த ஊர் சற்றுப் பெரிய ஊரானதால் வியாபாரம் நல்ல முறையில் நடந்து வந்தது.அவருக்கு மாதேஷ் என்று ஒரே மகன் இருந்தான்.பள்ளி கூடத்தில் பத்தாம் வகுப்பில் படித்து வந்தான்.தன் மகனை வியாபாரத்தில் பழக்குவதற்காக ரங்கசாமி விடுமுறையின் போது கடையில் வந்து அமரச் சொல்வார்.

சில நாட்கள் யாரேனும் மாளிகைப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து தரும்படி சொன்னால் ஒரு வேலையாள் மூலம் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்.உடன் தன் மகனையும் வேலையாளுக்குக் காவலாக அனுப்புவார்.அத்துடன் பணத்தையும் வசூல் செய்து கொண்டு வரச் சொல்வார்.அப்போது தான் அவனுக்குப் பணத்தின் அருமை தெரியும் என்பது அவரின் கருத்து.

ஒருநாள் அவ்வூரிலுள்ள பள்ளி ஆசிரியர் அவரது கடைக்கு வந்தார்.ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வீட்டில் தரும்படியும் தான் வெளியே செல்வதால் ரூபாயை வீட்டு அம்மாவிடம் வாங்கி கொள்ளும்படியும் சொல்லிவிட்டுச் சென்றார்.

அதேபோல வீட்டுக்குப் பொருட்களை அனுப்பினார் ரங்கசாமி. பணத்தை வசூல் செய்யும் பொருட்டு தன் மகனையும் உடன் அனுப்பினார்.ஆசிரியரின் வீட்டுக்குள் நுழைந்த மாதேஷும் அம்மா என அழைத்தான். சமையலறையில் வேலையாக இருந்த அம்மாள் இதோ வரேன் என்ற படியே புடவைத் தலைப்பில் கையைத் துடைத்தவாறே வந்தார்.

"சாமானெல்லாம் சரியாகக் கொண்டு வந்தாயா ? எதுவும் விட்டுப் போகலியே "என்றவாறே அங்கிருந்த ஒரு மேசையிலிருந்த இழுப்பறையைத் திறந்து எவ்வளவு என்று கேட்டு பணத்தைக் கொடுத்தார். மீதிப் பணத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு சில சாமான்களைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வைக்கச் சென்றார்.

அப்போது மாதேஷ் தன் வேலையாளிடம் "வேலு, , அந்தப் பணத்திலேயிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கலாமா?"என்றான் மெதுவாக."

"வேண்டாம் தம்பி அது தப்பு வந்திடுங்க" என்று சொல்லி அவனை வேகமாக வெளியே அழைத்து வந்தான்.

இரண்டு நாட்கள் கழிந்தன.அதே ஆசிரியர் கடைக்கு வந்தார்."கடைக்காரரே, இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு மளிகை சாமான் போடவந்தது யார்?"என்றார்.

"ஏன் நான் தான்."என்றான் மாதேஷ்.ஏன் பொருள் ஏதும் குறைந்திருக்கிறதா என்று கேட்டார்.அதற்கு ஆசிரியர்.கோபமாகப் பேசினார்.

"பொருள் குறையவில்லை. பணம் தான் காணாமல் போயிருக்கிறது."என்ற போது வேலைக்காரன் வேலு மாதேஷைத் பார்த்தான்.அவன் பார்ப்பதைக் கவனித்த ஆசிரியர்,

"உண்மையாக எடுத்த பணத்தைக் கொடுத்து விடுங்கள். இல்லையேல் ...."என்று கடுமையாகப் பேசினார். அதற்குள் பொருள் வாங்க வந்த சிலர் அங்கு கூடிவிட்டனர்.

"என்னவாயிற்று?"என்று கேட்டவர்களுக்கு ,"என் வீட்டு மேசையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்தேன். இந்தப் பைய்யனும் அவர் வேலைக்காரனும் தான் வீட்டுக்கு வந்தனர்.

மளிகைக்குண்டான பணத்தைக் கொடுத்து மீதி அறுநூறு ரூபாயை என் மனைவி இவர்கள் கண்ணெதிரிலேயே தான் அங்கே வைத்தாள்.அந்தப் பணத்தைத் தான் காணோம் எங்கெங்கே தேடியும் கிடைக்கவில்லை.இவர்கள் தான் வந்தார்கள்.வீட்டுக்கு வேறு யாரும் வரவில்லை என்றார் கோபமாக.

வந்தவர்களும் "எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் சின்ன பையன் தான் என்று விட்டு விடுவோம் " என்றனர். குற்றம் புரியாத வேலுவும் மாதேஷும் திகைத்தனர். அவர் சற்று நேரம் கோபமாக பேசிய பின் எப்படியாவது அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற பின் வேலு,"ஐயா தம்பி தான் அந்தப் பணத்தை எடுக்கலாமா அப்படின்னு கேட்டுதுங்க. அது பாவம்னு சொன்னேனுங்க "என்றான். அதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் மாதேஷை அடிக்கக் கையை ஓங்கினார். அதைத் தடுத்த வேலு "தம்பி சொன்னாரே தவிர எடுக்கலீங்க." என்று கூறவே சற்றே கோபம் தவிர்த்து

"ஏண்டா உனக்கு திருக்குறள் தெரியுமில்லே.மனசால கூட மற்றவர் பொருளை எடுக்கணும் அப்படிங்கற எண்ணம் இருக்கறது தீயது." அப்படீன்னு படிச்சியே.நினைவில் இருக்கா? அதைச்சொல்லு இப்ப."என்றார்.

மெதுவாக வேலு
"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்"
என்று சொல்லவே ரங்கசாமி, "தெரியுதில்லே. இதை நீ உன் வாழ்க்கையிலும் கடைபிடிக்கணும்.தெரியுதா "என்றார் அன்போடு. அப்போது ஆசிரியர் அங்கு வந்து ரங்கசாமியின் கைகளை பிடித்துக் கொண்டார். "ஐயா மன்னிச்சுடுங்க.என் மனைவி பால்காரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டு மறந்திட்டாங்க.பையனைத் தப்பா நினைச்சுப் பேசிட்டேன்." என்றார் குற்ற உணர்வோடு.ரெங்கசாமி தான் குறளின் வழி நடப்பவராயிற்றே அதனால் புன்னகையையே பதிலாகக் கொடுத்தார் ஆசிரியருக்கு.
,

-ருக்மண சேஷசாயி

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (12-Sep-16, 9:33 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 407

மேலே