கடவுளுடன் ஒரு பேட்டி யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல்,

சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்…

நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே…

நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன்
சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல…

அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு
நினைக்கிறது தப்பு.
சந்தோஷத்தை ஒருபோதும்
வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்…
நீ செய்தததையும் மறந்து போகலாம்..
ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள்.

அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்…

விழித்தெழுந்தான் அவன்!

எழுதியவர் : செல்வமணி (13-Sep-16, 12:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 183

மேலே