நடிப்பு

கைச் செலவுக்கு நூறு டொலர்களை இருபது டொலர் நோட்டுகளாக வங்கியொன்றில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் மாற்;றி பக்குள் வைத்த பின்னர் மிசிசாகா போகும் பஸ்சை எடுக்க அந்தப் பிரதான வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் மழை தூறி விட்டிருந்தது. மக்கள் இரைச்சல் ஒரு பக்கம். ஏதோ எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அம்மனிதர்களைப் பார்த்து ஒரு நிமிடம் சிந்தித்தேன். எத்தனை விதமான முகங்கள,; நிறங்கள், உருவத் தோற்றங்கள், பேசும் மொழிகள். அவர்களி;ன் போக்குகளைப் பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது. நடிகர்களைப் போல் இயங்கிக் கொண்டிருந்தார்கள். “உலகமே ஒரு நாடக மேடை” என்ற வாசகம்தான் என் நினைவுக்கு வந்தது. எல்லோரும் ஏதோ அவசரம் அவசரமாக எதையோ தேடிக்கொண்டும், நடிக்க வேஷம் போட்டுக்கொண்டும், போவது போன்று எனக்கு தோன்றியது. இதில் எத்தனை பேர் உண்மை உழைப்பாளிகள?; எத்தனை பேர் ஏமாற்றி பிழைப்பவர்கள்?
வங்கிக்கு முன்னால், பாதையோரத்தில் முகத்தையும்;, வாயையும் சுற்றியும் வெள்ளை அரிதாரம் போட்டபடி சர்க்கஸ் கோமாளியைப் போல் தோற்றமளித்தாள் அந்தப் அபிநயக் கூத்தாடிப் வெள்ளை இனப் பெண். கவர்ச்சியான துரு துருத்த கண்கள். வில்லைப் போல் வளையும் உடம்பு. நீண்ட கைவிரல்கள். வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தாள். மார்பகம் அவ்வளவுக்கு கவர்ச்சியாக வளர்ச்சி பெற்று தோற்றமளிக்வில்லை. அதனால் எனக்கு ஒரு சந்தேகம். அது ஆணா, பெண்ணா, அலியா?. அருகே சற்று நெருங்கிப் பார்த்தேன். அப்போதுதான் விளங்கி;ற்று அவள் அல்ல அவன் என்று. முகத்தில் இருந்த மீசையை அதிதாரம் மறைத்திருந்தது. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டை போட்டிருந்த அவன் தோற்றம் பெண்ணாக என்னை ஏமாற்றியது. அது மட்டுமா?. காதில் தோடு. மூக்கில் மூக்குத்தி, இமைகளுக்கு கருப்பு மை, அசைவில் ஒரு நளினம். அவன் அலங்காரம் என்னை ஏமாற்றிவிட்டது. பேசாது அங்க அசைவுகளினால் தனது பார்வையாளர்களுடன் அவன தொடர்பு கொண்டான்;. அவனின் ஒவ்வொரு அங்க அசைவும் என்னை இரசிக்க வைத்தது. என்ன பிரமிக்கத் தக்க கலைத்திறன் அவனுக்கு. கண்கள்;, கைகள், கால்கள், புருவம் எல்லாமே பேசின. இது ஒரு வகைத் தொடர்புக்கான மொழியா?. இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் ஊமைகளுக்காக இது போன்ற ஒரு மொழியைப் பார்த்திருக்கிறேன். கி.மு 55 ம் நூற்றாண்டில் உரோமாபுர்pயில், கலைஞர்கள் மௌனமாக பாவனை மூலம் நடித்து காட்டிய கலையென எங்கேயோ புத்தகத்தில் வாசித்த ஞாபகம். என் கற்பனைச் சக்திக்கு ஒரு சவாலாக அக் கலை அமைந்திருந்தது. பிரபல நகைச்சுவை நடிகர்களான சார்லி சப்பிளின், மிஸ்டர் பீன் போன்ற அங்க அiவுகளால் வெளிக்காட்டும் நடிப்பினை இன்றும் பார்த்து இருசிக்கலாம் இவரகளைப் போலவே கமலஹாசனின் பேசும்படம் என்ற திபை;பட நடிப்பு.
நிலத்தில் ஒரு வெள்ளைத் துண்டை விரித்து காற்றுக்கு அது பறந்துவிடாமல் நான்கு மூலைகளில் நான்கு கற்களை வைத்திருந்தான் அவன். ஓரு ஓரத்தில் அவனுடைய பொக்கிஷமான ஒரு தோல் பை. ஆரம்பத்தில் அவன் நடிப்பைப் பார்க்க நான்கு பார்வையாளர்கள் மாத்திரமே நின்றார்கள், அதில் ஒரு பெண். நான் தூரத்தில் நின்று கொண்டு நடப்பதை அவதானித்தேன். மூன்று தடவை மின்னல்; வேகத்தில் குத்துக் கரணம் போட்டபி;ன் சிரம் தாழ்த்தி, ஜப்பானியரைப் போல் வணக்கம் செலுத்தினாhன் அவன். அந்தக் குத்துகரணத்தைப் பார்த்து வியந்த இன்னும் சிலர் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார்கள். ஏதோ இவனிடம் விஷயம் இருக்கிறது என்றறிந்து கூட்டம் சேரத் தொடங்கியது. . பேசாது, பாவனை மூலம் தன் ஓரங்க நாடகத்தை ஆரம்பித்தான். இதுவரை அலட்சியமாக வெகு தூரத்தில் நி;ன்ற நான், ஏதோ ஒரு சக்தியினால் ஈர்க்கப்பட்டு கூட்டத்தோடு போய் நின்றேன்.
ஆரம்பத்தில் எதை அவன் பாவனை மூலம் சொல்கிறான் என்பது எனக்குப் புரியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரித்தேன். அவனது பாவனைகளைச் சற்று நுணுக்கமாய் நோக்கினேன். ஒவ்வொன்றிலும் அர்த்தம் இருப்பது எனக்குத் தெரியவந்தது. வீடு வாசல் இல்லாது பாதை ஓரத்தில் வாழும் ஒரு மனிதனின் வாழ்வை அவன் சித்தரித்திருக்கிறான் என்பது தெரிந்தது. பசியால் அவன் படும் அவஸ்தையை பிரமாதமாய் முக பாவனை செய்து காட்டினான். பசியை அடக்கித் தூங்கத் தெண்டித்த போது அவனால் முடியவில்லை. யாரோ பரிதாபத்தில் போட்ட ஒரு துண்டு ரொடடியை ஆசையுடன் பாய்ந்து எடுத்த போது அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி எதோ ஒரு மில்லியன் லொட்டரி விழுந்தவன் முகம் போல் இருந்தது. ரொட்டியை திருப்பித் திருப்பி பார்த்தான். நுனியில் சுவைத்து பாhத்தான். பழையது இல்லை என்பதை அவன் முகம் காட்டியது. அதை உண்ணத் தயாராவதை நடிப்பி;ன் மூலம் பிரமாதமாய் நடித்துக்காட்டினான். உணவு கிடையாது பசியால் வாடும் ஒருவன் எவ்வாறு பசியைத் தாங்கிப்பிடிக்க தெண்டிக்கிறான் என்பதை தத்ரூபமாக தன் கலைத்திறமை மூலம் நடித்துக்காட்டினான். உண்மையில் அவனும் வீடு இல்லாத பாதையோர வாசியோ என்று பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
சாப்பிட முன், சலம் கழிக்க அவனுக்கு அவசரமாய் வந்துவிட்டது. அவசரமாய் சலம் விட வந்த போது அவன் முகத்தில் ஏற்பட்ட பரிதவிப்பு, அதை முக பாவனை மூலம் அவன் எடுத்துக்காட்டினான். சலம் கழிக்க வந்தபோது பசி எங்கேயோ போய்விட்டது. கிடைத்த ரொட்டியை ஓரத்தில் பேப்பரில் பத்திரமாக சுற்றி வைத்துவிட்டு சலம் கழிக்கச் சென்றான். ஒரு ஓரத்தில் போய் நி;ன்று சலம் கழிக்கத் தொடங்கினான். அவன் நடிப்பு பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தை சிரிக்க வைத்துவிட்டது. சுவர் ஓரமாக, தன் உடலை சௌகரியமான நிலையில் நின்றபடி அவன் சலம் கழித்த காட்சி உண்மையில் எனக்கும் சலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வைத் தோற்றுவித்தது. சலம் கழித்தபின் களிசானில் உள்ள ஸிப்பை இறுக்க இழுத்து மூடிவிட்டு. அருகில் உள்ள தண்ணீர் குழாயில் கைகழுவிய பின்னர் வந்து ரொட்டியைத் தேடிய போது அதைக் காணவில்லை. கிடைத்த ஒரு துண்டு ரொட்டியும் போய் விட்டதே என்று தேடியபோது நாய் ஒன்று அதை எடுத்துப் போவதைக் கண்டு அவன் கோபம் முகத்தில் தோன்றியது. கீழே கிடந்த கல்லை எடுத்து நாயின் மேல் எறிந்து தனக்கு கிடைத்த உணவை மீட்கிறான். தவறிய உணவு திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சி. நாய் திரும்பவும் வந்து அவன் அருகே பசியுடன் அவன் முகத்தைப் பார்த்தபடி நிற்பதைக் காண்கிறான். உடனே அவன் மனம் இரங்குகிறது. ரொட்டியின் சிறு துண்டை அதற்கு கொடுத்து அதன் தலையைத் தடவிக் கொடுக்கிறான். மறு துண்டை தன் பசி தீர்க்க வாய்க்கருகில் எடுத்துச் செல்லும் போது ஒரு சிறுவன் தன் பசி தீர்க்க ரொட்டியைக் கேட்டு கை நீட்டுவதைக் காண்கிறான். என்ன செய்வது என்று யோசிக்கிறான். பி;ன் சிரித்தபடி மிகுதி ரொட்டியையும் தான் சாப்பிடாமல் அந்தச் சிறுவனிடம் கொடுக்கிறான். அந்த மௌன நாடகத்தை அசையாது பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் ஓ. ஓ என்று வாய்விட்டு அனுதாபப் பட்டது எவ்வளவுக்கு அவனின் நடிப்பு அவர்களை கவர்ந்திருந்தது என்பதைக் காட்டியது. அவன் முகத்தில் ஒரு திருப்தி. பெருமூச்ச விடுகிறான். பசி திரும்பவும் அவனை வாட்டுகிறது. தண்ணீர் குழாயில் வயிறு முட்டத் தண்ணீர் அருந்திவிட்டு திருப்தியுடன் வந்து தூங்குகிறான்.
அவனுடைய மௌன நடிப்பு (Mimicry) எல்லோருக்கும் அவன் மேல் ஒரு பரிதாப உணர்வை உருவாக்கியது. அவன் மேல் அனுதாபப்பட்ட பார்வையாளர்களால் போடப்பட்ட டொலர் நாணயங்கள், நோட்டுகள் முன்னுக்கு விரிக்கப்பட்டிருந்த துணியின்மேல் போய் விழுந்தன. எவ்வளவு விழுந்திருக்கும் என்று கண்ணோட்டம் விட்டு கணக்கு பார்த்தேன். சுமார் ஐம்பது டொலர் அரை மணி நேரத்துக்குள் அவனுக்கு சேர்ந்திருக்கும். நானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து களிசானின் பின் பொக்கட்டுக்குள் வங்கியில் மாற்றிய காசை எடுக்கக் கைவிட்டேன். பர்ஸைக் காணவில்லை. என் மனம் திக்கென்றது. பார்வையாளர்கள் எல்லோரும் கலைந்து போய் விட்டார்கள். என் மேல் அனுதாபப் பட அங்கு ஒருவருமில்லை. யாரோ என்னருகே நின்ற பார்வையாளர் தான் தன் கைவரிசையை இளிச்சவாயனான என் மேல் காட்டியிருக்க முடியும். அவனும் அவனது உதவிக்கான பெண்ணும் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி வெளிக்கிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போன பின் தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பெண்தான் பார்வையாளர்களில் ஒருத்தியாக என்னருகே நின்றவள். அவள் என் பணத்தை எடுத்திருப்பாளோ என்று யோசித்தேன். நல்ல காலம் ஐந்நூறு டொலர்களை மாற்ற இருந்த நான் மனம் மாறி நூறு டொலர் மாத்திரம் மாற்றியது ஒரு விதத்தில் நல்லது என்றது என் மனம். பர்சுக்குள் கிரெடிட் கார்ட் இல்லாதது ஒரு நிம்மதி. இனி வீட்டுக்கு போயாக வேண்டுமே. வங்கியை நோக்கி திரும்பவும் நடந்தபோது வங்கியில் வேலை செய்யும் என் நண்பன் தியாகுவை அதிர்ஷடவசமாக சந்தித்தேன்.
“ என்ன இந்தப் பக்கம் கணேஷ் சோகத்துடன்” என்றான். நடந்ததை விபரமாய் அவனுக்குச் சொன்னேன்.
“சரி நீயும் என்னைப் போல் காசை அந்த நடிப்பை இரசித்து பறிகொடுத்தவன் தான். வா போய் டிம் ஹோர்டனில் என் கணக்கில் பேகல் சாப்பிட்டுவிட்டு கோப்பி அருந்துவோம்” என்றான். திரும்பவும் ஏ.ரீ.எம் மில் நாற்பது டொலர்களை மாற்றி எடுத்துக் கொண்டு டிம் ஹோர்டன்ஸை நோக்கி நடந்தோம். போகும் வழியில் ஒரு விலை உயர்நத ரெஸ்டோரன்டை காட்டி தியாகு,
“அதோ பார் உன்னைத் தங்கள் நடிப்பால் மயக்கவைத்து ஏமாற்ற்pயவர்களை” என்றான் அவன்.
அவன் காட்டியவர்களை பார்த்த போது எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்கள் வேறு ஒருவருமில்லை. அந்த நடிகனும் அவனின் உதவியாளருமான நான் சந்தேகப்பட்ட அப் பெண்ணுமே. இருவரும் சிரித்து கதைத்தபடி பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் முடியாது அவர்களால்?. பார்வையாளர் கொடுத்த பணத்துடன் என் காசும் சேர்த்து போதுமே அவர்களுக்கு மூன்று நாளைக்கு என்றது என்மனம். அந்த நடிகன் கற்பனையில் நாயுக்கும், சிறுவனுக்கும் தன் உணவை தானம் செய்த காட்சி என் நினைவுக்கு வந்தது. நான் என் காசை அவன் நடிப்புக்கு தானம் செய்தேன். அவ்வளவு தான். அவனின் போலி நடிப்பைப் பார்த்து அனுதாபப் பட்டவர்கள் பலர். என் நிலையைப் பார்த்து அனுதாபப் பட ஒவருமில்லையே என்றது என் மனம்.
*******