வன்மத்தின் வண்ணங்கள்
கல்லெறிகிறார்கள்,
சுவுதியில் சாத்தான் மீது அல்ல, இங்கே.
அங்கே அது ஒரு திருவிழா
இங்கேயோ திருடர் விழா.
காவிரி ஒரு பிரச்சனை என்பதால்.
எவ்வளவு தண்ணீர் வருகிறதோ
அதில் இவ்வளவு இவ்வளவு சதவிகிதம்
என்று ஏற்கனவே சட்டப்படி
பேசி முடிவு செய்யப்பட பின்
தண்ணீர் இல்லை, எங்களுக்கே இல்லை
குடிக்க மட்டும் இருக்கிறது எங்களுக்கு,
உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.
இதில் உண்மை இல்லை,
காவிரி இங்கே வற்றிப்போகாது
வற்றிப்போகும்போதுதானே பிரச்சனை?
காவிரியை வற்றாமல் காக்க வேண்டியதிலிருந்து
கடமை தவறிய சுயநலவாதிகள்
சிலர் தவறு செய்கிறார்கள்.
தமிழனுக்காக உரிமைக்குரல் யார் கொடுப்பது?
நீயா நானா என்று எங்களுக்குள் அரசியல்.
காவிரி எங்களுக்கு மட்டும்தான் என்றும் ஒரு அரசியல்.
அதை செய்வது பி.ஜெ.பி-யா காங்கிரஸா?
இரண்டுமே இல்லை, லோக்கல் தாதாக்கள்.
தன்னுடைய பேரை ஊரே பேச வேண்டும்
என்று தனலை ஊற்றுகிறார் தண்ணீர் பிரச்சனை
ஆண்டாண்டு காலம் பேசிப்பேசி
அதிலேயே அரசியல் செய்கிறார்,
அரசியல் பிரவேசமும் அரசியலில் சுவாசிப்பதும்
இங்கே ஆட்சியை பிடிக்க அல்ல,
நான் யாரென்று நாடே அறியவேண்டும்
அச்சுறுத்தத்தான் இந்த அரசியல் - எத்தனை காலம்?
எல்லோரும் திரும்பி பார்க்கிறார்கள்,
திரும்ப திரும்ப பார்க்கிறார்கள்.
என்ன நடக்குது இங்கே?
ஏண்டா இப்படி?
அறிவே இல்லையா?
உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்,
அமைதியாக, அழுத்தமாக - ஆனால்
அதில் எதற்கு வன்மம், வன்முறை, வரையறை இன்றி?
அரசியல் இங்கே அசிங்கத்தை அரங்கேற்றுகிறது
அதை தட்டி கேட்க சுப்ரீம்கோர்ட் ஆணையிடுகிறது
ஆனால் நடப்பதென்ன, அரசியல் மீண்டும் விஸ்வரூபம்..!
கேவலம் பிச்சை காசுக்காக அடியாள் ஏவ
வாட்டாள் கையால் வந்தவன் போனவன் எல்லாம் அடி வாங்க
அமெரிக்காவிலிருந்து ஒரு அவசர தந்தி -"பீ கேர்புல்" என்று.
ஆட்சியில் இருப்பவர்களுக்கும் காவல் செய்பவர்களுக்கும்
கையாலாகத்தனம் கட்டு மீறி போகிறது காட்சிகள் எல்லாம்.
ஸ்தம்பித்திப்போகிறது, சிதறி ஓடுகிறது இங்கே கூட்டம்.
இதை ரசித்துப்பார்க்கிறார்கள் கன்னடர்கள், மனதுக்குள் மட்டும்.
அடடே என்று அங்கலாய்க்கிறார்கள்
வேண்டாம் என்று பேசுகிறார்கள்
போதும் போதும் என்று பெருமிதம் கொள்கிறார்கள்
இன உணர்வு என்கிற போதையின் பசி தீர இது போதுமா, இன்னும் வேணுமா?
பெங்களூர் பெங்களூரு என்று ஆன போதே தெரியும்
இந்தியனில் கன்னடனை கட்டம் கட்டுகிறார்கள் என்று.
தமிழனால் தான் சாப்ட்வேர் கம்பெனி முதல்
சாளரம் கட்டும் அத்தனை தொழில்களும் என்பதை மறந்துவிட்டு
கன்னடம் இங்கு காவு கேட்கிறது கையாலாகாமல் கைகட்டி ஒரு சமூகம்.
நதி நீர் பிரச்சனை என்பதை நாமெல்லாம் எப்போது கேட்கிறோம்?
மோடி ஆட்சி வருவதற்குமுன், மற்றவரும் ஆட்சிக்கு வருமுன்.
ரஜினி போன்றொரு பெரிய மனிதர்கள் திரு திரு என முழிக்கிறார்கள்.
தண்ணீருக்காக இன்னொரு உலகப்போர் என்று இங்கொரு கவிதையா?
அறிக்கை கேட்கும் அரசாங்கமும் சட்டம் பேசுபவரும் பிரச்னையை தீர்க்க
ஏதும் யோசனை சொல்ல முடியவில்லை என்றால்
எப்படித்தான் தீர்ப்பது இந்த பிரச்னையை?
144 போட்டு ஓரிருநாள் பிரச்னையை ஆறப்போடலாம்,
சட்டம் ஒழுங்குக்காக ராணுவம் இங்கே கூடாரம் போடலாம்.
எத்தனை நாள் இப்படியே ஆறப்போடுவது,
பிரச்சனையை பிரச்சனையால் தான் தீர்க்கமுடியும் என்றால்
எரிகிற கொள்ளியை எடுத்து விடுங்கள் பிரச்சனை ஆறிவிடும்.
சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் இடம் பெயரட்டும்
ஒரே இரவில் இங்கே இதை செய்ய முடியும். பெரிய விஷயமே இல்லை.
அமெரிக்காக்காரனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால்
அறிவு இங்கே இடம் பெயரட்டும்
அப்போது தான் முட்டாள்களுக்குத்தெரியும்
அறிவில்லாதது வன்மம் அதற்கு உணர்வு மட்டும் தான் பசியும் உணவும்.
காதுகள் கேட்காது கண்களில் மனிதமே இல்லை.
இதயத்தில் இன உணர்வு இருந்தால் எங்கேயும் வாழ்க்கையில்லை.
உண்மையைச்சொல்ல இங்கே ஒருவரும் இல்லை.
பொய்கள் பேசி அரசியல் செய்யத்தான் இங்கே ஒவ்வொருவரும் என்றால்
பாமரன் மட்டும் தான் இங்கே பலிகடா,
போடுங்கள் அதற்கு ஒரு தடா.