பிசாசுகளின் கலகம்

உனக்கும் எனக்குமான
விட்டுக்கொடுப்புக்கள் விகாரமாகுகையில்
முரண்பாடுகள் முட்டிக்கொள்கின்றன


முண்டியடிக்கும் முரண்பாட்டுப் பிறழ்வுகளில்
முடிச்சவிழ்க்கப்படுகின்றன
நமது பிணைப்புக்கள்


பிணைப்புக்களின் இணைப்புக்கள் யாவும்
சலனமற்று சரிகின்ற பொழுதில்
தமக்குள் சிரித்துக்கொள்கின்றன
பல பிசாசுகள்
அவற்றிற்கு வேண்டியதெல்லாம் அவைதானே


சரிக்கப்படுவதும் சாய்க்கப்படுவதும்
சாதாரணம் என்றாகிவிட்ட உலகத்தில்
எரிக்கப்படுவதும் புதைக்கப்படுவதும்
இலகுபடுத்தப்பட்டுள்ளன பிசாசுகளால்


அவற்றிற்குத்தேவை அடித்தல்
அவற்றிற்குத்தேவை பறித்தல்
அவற்றிற்குத்தேவை உடைத்தல்
அவற்றிற்குத்தேவை பற்றிஎரித்தல்


எனதும் உனதும் விட்டுக்கொடுப்புக்கள்
புரிதல்களில் பதப்படும் வரையில்
தண்ணீருக்கு மட்டுமல்ல காற்றுக்கும்கூட
கடிவாளம் போட நினைக்கும் சில பிசாசுகள்
ஏனெனில் அவற்றிற்குத் தேவை பற்றிஎரித்தல்

எழுதியவர் : வினோ சர்மிலா (14-Sep-16, 3:38 pm)
பார்வை : 67

மேலே