இப்படியாக பேசுவார்கள் - சந்தோஷ்

பட்டம் பெற்று
தனியார் நிறுவனத்தின்
மேலாளர் என்றானாள்.
”அதிர்ஷ்டக்காரி ”என்றார்கள்.

சக ஊழியர்களின் தவறுகளை
நேர்மையாய் கண்டித்தாள்
”ஆணவக்காரி ”என்றார்கள்

அலுவல் பிரச்சினைகளை
சுமூகமாக தீர்த்தாள்
”வித்தைக்காரி ”என்றார்கள்

மேலதிகாரியுடன் விமானத்தில்
பறக்கத் தொடங்கினாள்
”தந்திரக்காரி ”என்றார்கள்.

பணக்காரன் ஒருவனிடம்
நல்ல மனமிருக்குமென்று
விவாகம் செய்தாள்
”காரியக்காரி ”என்றார்கள்


கைப்பிடித்தவன்
கழுத்தை பிடித்ததால்
விவாகரத்து பெற்று
பழைய தோழனுடன்
புது வாழ்க்கை தொடங்கினாள்
”மோசக்காரி ”என்றார்கள்.

இந்த அனுபவங்களை எல்லாம்
கவிதையாக எழுத தொடங்கினாள்
இதுவரையிலும்
இப் பெண்ணின் நடத்தையை
விமர்சித்த சமூகத்தினர்
“பெண்ணியக் கவிதை “ என்றார்கள்.

--
- இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Sep-16, 12:10 pm)
பார்வை : 120

மேலே