நினைவு நாரில் கனவுப்பூக்கள்

சில்லெறிந்து நொண்டியிட்டுச்
சிறுவரங்கு தாவுவார்!
மல்லிவிற்க என்னைமட்டும்
மாட்டிவிட்ட பாவியார்?

நூலெடுத்து பள்ளிசெல்லும்
நூறுமங்கை ஓங்குவர்!
நூலெடுத்துப் பூத்தொடுத்து
நொந்துளத்துள் ஏங்குவேன்!

கல்விகற்கும் மாணவர்கள்
கண்டுகொள்வர் சாத்திரம்!
முல்லைமல்லி கூவுகின்ற
முறையெனக்கு மாத்திரம்!

மாலைதன்னில் நார்தொடுக்கும்
மலரனைத்தும் ஓர்குலம்!
சாலைதன்னில் பூவிரிக்கும்
சிறுமிமட்டும் ஓர்புறம்!

பூவளித்துக் கோவிலுக்குள்
புண்ணியத்தைத் தேடுவர்!
பூவளிக்கும் என்தொழிலைப்
பேரமாக்கிச் சாடுவர்!

பூக்குமுன்னர் தோளிலாடப்
பூவைநாடும் ஆண்டவா!
பூக்குமுன்னர் வாடிநிற்கும்
பூவைஉன்னை வேண்டவா?

நல்லமுல்லை சேர்த்ததாலே
நாரு(ம்)மணம் வீசிடும்!
கல்வியில்லை என்பதாலே
காலமென்னை ஏசிடும்!

சோலைதந்த மலரெனக்குச்
சொந்தமாகிப் போனது!
காலையென்ன? மாலையென்ன?
கனவுவாழ்க்கை ஆனது!

போதையிலே தந்தையெனைப்
போட்டுடைத்துப் போனதால்
பாதையிலே பூவிரிக்கும்
பாடெனதாய் ஆனதோ?

பூத்தொடுக்கும் என்கரத்தில்
புண்படிந்து போகுமோ?
காத்திருந்தும் வந்திடாது
கல்விகானல் ஆகுமோ?

நினைவுநாரில் கனவுகட்டும்
நிலைமைஎன்று மாறுமோ?
கனவுமாறிக் காட்சியாகிக்
காணு(ம்)நெஞ்சம் ஆறுமோ?


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்

எழுதியவர் : (21-Sep-16, 2:39 pm)
பார்வை : 53

மேலே