துறவு பூணும் சான்றோர்களின் பெருமை--- திருக்குறளும் திருமந்திரமும்

மனிதப் பிறவியில் பிறந்தும் பிற உயிர்களைப் போலல்லாமல் உலக வாழ்வினைத் துறந்து பற்றற்று, உலக நலனைக் கருத்தில் கொண்டு வாழும் சான்றோர்களால் தான் உலகம் நல்ல வண்ணம் இயங்குகின்றது என்றால் அது மிகையாகாது.

வள்ளுவர் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். திருமூலரும் “இறப்பும் பிறப்பும் இருளையும் நீங்கி துறக்கும் தவங்கண்ட... அறப்பதி” என்று துறவறம் பூண்டவர்களைப் போற்றிப் பரவுகிறார்.

ஐம்புலன்களையும் மதம் கொண்ட யானைகளாக உருவகித்து அதனையடக்கும் அங்குசமாக அறிவினை உருவகிக்கின்றனர் திருவள்ளுவரும் திருமூலரும். எவ்வளவு பெரிய உண்மை. புலன்கள் ஒவ்வொன்றும் மதங்கொண்ட யானைக்குச் சமமானவை. அதனை நல்வழிப்படுத்த அறிவு எனும் அங்குசத்தைச் சரியான நேரத்தில் நாம் பயன்படுத்த வேண்டும். இன்றேல் புலன்கள் அடக்கமின்றி அலைபாய்ந்து நம் உயிர் சக்தியை வீணடித்து விடும். உயிர்ச் சக்தியை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடலும் உள்ளமும் பொலிவு பெறும். இன்றேல் உயிர்ச்சக்தி குறைவானால் உடல், மனம் இரண்டுமே சோர்ந்து போகும். எனவே, விழிப்புணர்வுடன் செயலாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவினைப் பயன்படுத்தி புலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இதனையே, வள்ளுவர் “உரனென்னும் தோட்டியான் ஓரரைந்தும் காப்பான்” (குறள்-24) எனக் கூறுகிறார். திருமூலரும்

“முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” எனப் பாடுகிறார்.

அந்தணரின் இலக்கணம் பற்றி கூறுகையில்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்” (குறள்-30) எனக் குறளும்,

“அந்தணராவோர் அறுதொழில் பூண்டுளோர்

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்” எனத் திருமந்திரமும் உரைக்கின்றன.

இவ்வாறு புலன்களை அடக்கி அந்தணராய் நின்று துறவு பூணும் சான்றோர்களின் பெருமையை திருக்குறளும் திருமந்திரமும் பகர்கின்றன.

முருக.கவி

எழுதியவர் : (22-Sep-16, 2:10 pm)
பார்வை : 57

மேலே