சிவகுருநாதனின் இறுதிப் பயணம்

சிவகுருநாதனின் இறுதிப் பயணம்
தபாற்காரன் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்துப் போன பின் தனலஷ்மி கடிதத்தின் கவரையும் அதில் அழகிய எழுத்தில் முத்துமுத்தாக ஆங்கிலத்தில் எழுதியிருந்த விலாசத்தையும் பார்த்தாள். கவரில் இருந்த கனடா தேசத்தின் முத்திரையைக் கண்டவுடன் கனடாவுக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் பிரம்மச்சாரியாகப் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தனது அண்ணன் சிவகுருநாதனின் அழகிய எழுத்து என்பதை அவள் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. அவசரம் அவசரமாகக் கடிதத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தாள்.
அன்பின் சகோதரி தனம், அத்தான் குமார், மருமகன் செல்வத்திற்கு;
என்ன அண்ணன் சிவா தீடிரென்று பல மாதங்களுக்கு பின்னர் கடிதம் எழுதுகிறார் என நினைக்காதீர்கள். கடிதம் அடிக்கடி எழுதாவிட்டாலும் உங்கள் குடும்பத்தின் நினைவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள என் மனதில் எப்போதும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்;. கடைசியாக ஒரு வருடத்துக்கு முன்னர்; குமார் அத்தானுக்கு பிஸ்னஸ் ஆரம்பிக்க பணம்; வேண்டும் என்று நீ கேட்டதிற்கு ஐந்து இலட்சம் ரூபாய் அனுப்பி அதோடு எழுதிய கடிதத்திற்கு பின்னர் பல மாதங்கள் ஓடிவிட்டது. அத்தானின் பிஸ்னஸ் நன்றாக நடப்பதாக உங்கிருந்து வந்த ஒருவர் சொன்னார். கேட்க எனக்கு நல்ல சந்தோஷம். நான் கனடாவுக்கு வந்து இருபது வருடங்களாகிவிட்டது என்பதை நினைக்கும் போது எனக்கே வியப்பாக இருக்கிறது. இங்குள்ளவர்கள் பலர் அடிக்கடி ஊருக்குப் போய் வருவார்கள், ஏதோ அந்த காலத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் போய் வருகிறமாதிரி. இதற்கு எல்லாம் முதியோருக்கு கனடா கொடுக்கிற பென்சன் காசுதான். ஆனால் எனது வேலை, குடும்பம் எனக்கு அப்படி அடிக்கடி போய்வரும் சுதந்திரத்தைத் தரவில்லை.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் பிறநாடு செல்வது அப்போது பிடிக்கவில்லை. தன்னைப் போல் நான் போஸ்ட்; மாஸ்டராக வந்திருக்க வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். ஆனால் அம்மாவோ அவளது தம்பி வேலு மாமாவின் மகள் வனிதாவை நான் திருமணம் செய்து ஊரிலேயே தனனைப்பொல டீச்சராக இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். வனிதாவுக்கு இன்னுமொருவரில் காதல் இருந்தது அம்மாவுக்கு அப்போது தெரியாது. நாம் நினைப்பதொன்று, ஆனால் நடப்பது வேறு ஒன்று.
நான் மட்டும் கனடாவுக்கு வராமல் இருந்திருந்தால் அடமானத்தில் இருந்த, நாங்கள் வாழ்ந்த, எங்கள் பாட்டனார் கட்டிய வீட்டை திருப்ப எடுத்திருக்க முடியுமா? அப்பா பட்ட கடன்களைத் தீர்த்திருக்க முடியமா? நான் அனுப்பிய பணத்தில் தான் நீ; உனக்கு விரும்பிய ஒருவரை அப்பா அம்மா சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிந்தது. அதோடு எனது ஒரே மருமகன் செல்வத்தின் படிப்புக்கும் உதவக் கூடியதாக இருந்தது. இதெல்லாம் அப்பாவும் அம்மாவும் சிந்தித்துப் பார்க்காமல் நான் எதோ என் விருப்பப்படி ஒரு வெள்ளைக்காரக் கனேடியப் பெண்ணை திருமணம் செய்து குலப் பெருமையைச் சீரழித்துவிட்டேன் என்று என்னோடு கோபித்துக் கொண்டு பேசாமல் பலகாலம் இருந்துவிட்டார்கள். நான் எவ்வளவோ விளக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் போட்டும் அவர்கள் பதில் போடவில்லை. அப்பாவின் பிடிவாதக் குணம் உனக்குத் தெரிந்தது தானே? கடைசியில் கண்டது தான் என்ன? அவர்கள் இருவரதும் மரணச் சடங்குகளுக்கு ஒரே மகனான நான் வந்து கொள்ளி வைக்க முடியாத ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த கடமையில் இருந்து நான் தவறியதற்கு நீயும் அத்தானும் என்னை மன்னிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நடந்தது நடந்து விட்டது.
நானும் என் மனைவி ஜேனும் மகன் ரமேசும் ஈழம் வந்து உங்கள் அனைவருடனும் சிலநாட்கள் வாழ்ந்து என்னுடைய பழங்கால கிராமப்புர நினைவுகளை என் குடும்பத்துடன் மீட்டு மகிழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் ஈழத்தில் வாழும் அனாதைப் பிள்ளைகளுக்கு சும்மா கிடக்கும் எங்களுக்குச் சொந்தமான முப்பது பரப்பு காணியில் எதாவது விடுதி ஒன்றை அமைத்து அவர்களின் வருங்காலத்துக்கு உதவவேண்டும் என்பது என் ஆசை. அதென்ன இருபது வருடங்களுக்குப் பின்னர் புதிதாக என்னில் திருப்பம் என யோசிக்கிறீர்களா? நாம் வாழப் போவது எவ்வளவு காலம் என்பது எமக்கே தெரியாது. எமக்கு அழைப்பு வரும்போது மற்றவர்களுக்கு பிரச்சனை கொடுக்காமல் நாம் சந்தோஷமாய் போய்விடவேண்டும். நமது பிள்ளைகளாவது நமக்கு பின்னர் தொடர்பு இல்லாமல் வௌ;வேறு பாதையில் அந்நியர்கள் போல் வாழக் கூடாது. உறவுகள் தொடர வேண்டும். அதனால் தான் நானும் ஜேனும் இந்த தீர்மானாத்துக்கு வந்தோம்.
ஜேனின் தமிழைக் கேட்டு நீயே அதிசயப்படுவாய். உன் அண்ணி சுத்த சைவம். யோகா பயிற்சியும், மினம் தியானமு;ம் செய்வாள். நானும் அவளது தூண்டுதலினால் கிழமையில் இரண்டு நாள் சைவம். ஒரு காலத்தில் உனக்குத் தெரியும் அம்மாவுக்கு தெரியாமல் எங்கள் ஊர் கண்ணகியம்மன் கோயில் திருவிழாக் காலங்களில்; அடிவளவில் உள்ள மாட்டுக் கொட்டிலில் வைத்து எனக்கு நீ நல்லெண்ணையில், முட்டை பொரித்துக், கருவாடும் செத்தல் மிளகாயும் சுட்டுத் தருவாய். அம்மா கோயிலாலை வரமுன் அதை நான் ஊர் அரிசிமாப் புட்டோடு அவசரம் அவசரமாக சாப்பிட்டு விடுவேன். நீ திருமணமாக முன் அப்பாவுக்கும் அம்மாவுக்கு தெரியாமல் பல மைல்கள் அத்தானுக்கு சைக்கிளில் கடிதம் கொண்டு போகும் தபாற்காரனாக நான் தொழில் புரிந்ததை நீ இன்னும் மறக்கமாட்டாய் என நினைக்கிறேன். அதற்கு உபகாரமாக கந்தனிடம் சொல்லி எனக்கு பிடித்த பனங்கள்ளை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் வாங்கித்தருவாய். கந்தன் இப்பவும் உங்களுக்கு உதவியாக இருக்கிறானா?. அந்த இனிமையான அனுபவங்களை நான் உவ்விடம் வந்து பேசி மகிழவே விரும்புகிறேன்.
இன்னும் இரு கிழமைகளில் எங்கள் வரவை நீங்கள் எதிர்பாருங்கள். உனக்கும் அத்தானுக்கும் என் ஒரே மருமகன் செல்வத்திற்கும் கனடாவில் இருந்து என்ன தேவை என்று டெலிபோனில் சொல்ல மறக்காதே. வரஇரண்டு நாட்களுக்கு முன்னர் பிளைட் விபரங்களை தருவேன். கொழும்பு வந்து இரண்டு நாட்கள் தங்கி பிறகு பிளேனில் பலாலிக்கு வர இருக்கிறோம். மற்றவை நேரில்.
இப்படிக்கு,
உன் அன்பு அண்ணன்.
சிவா.
கடிதத்தை தனம் வாசித்து முடிந்த போது அவளது கணவனும் மகனும் வரச் சரியாக இருந்தது.
“என்ன தனம். உம்முடைய முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்த்தால் அண்ணருடைய கடிதம் போலத் தெரியுது” குமார் தனத்தைபார்த்துக் கேட்டான்.
“ஓம் அத்தான்!.. சிவா அண்ணர் குடும்பத்தோடை இன்னும் இரண்டு கிழமையிலை இங்கை வாராராம். வீட்டுச் சுவரெல்லாம் ஊத்தையாய்க்; கிடக்கு. வெள்ளை அடிக்க வேண்டும். அண்ணி ஜேன் துப்பரவு பார்ப்பா. வளவைப் பாருங்கள் காடு பத்திப்போயிருக்கு. கிணற்று தண்ணீர் நிறம்ப பூவரசம் இலை விழுந்து ஒரே குப்பை. இதையெல்லாம் அவன் கந்தனைப் பிடித்து துப்பரவு செய்ய வேண்டும். அவனுக்கு சிவா ஐயா கனடாவில் இருந்து வாரார் என்று சொன்னால் போதும்; உடனே எல்லாம் தலை கால் தெரியாமல் செய்து முடிப்பான். எங்களுக்கு கனடாவில் இருந்து என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று போன் பண்ணி சொல்லட்டாம். எனக்கு என் மருமகன் ரமேஷைப்பார்க்க வேண்டும் போலிருக்கு அவனுக்கும் எங்கடை செல்வத்திற்கும் ஒரு வயசு தான் வித்தியாசம். அவனின் தோற்றம் என் அப்பாவைப் போல என்று அண்ணர் முந்தி ஒருக்கா எழுதியிருந்தார்”.
“தனம் எனக்கும் சிவாவை பார்க்க வேண்டும் போல இருக்கு. அவனது உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் திருமணம் நடந்திருக்குமா என்பது சந்தேகம். என்டை அப்பா கேட்ட ஐம்பதாயிரத்துக்கு உம்முடைய அப்பா நிட்சயம் ஓம்பட்டிருக்கமாட்டார். நல்லகாலம் சிவா அனுப்பிய காசு உதவியாக இருந்திச்சு”
“அம்மா. ரமேசும் என்னைப் போல் தமிழ் பேசுவானா? எனக்கு அவனோடை ஆங்கிலத்தில் பேச கூச்சமாய் இருக்கம்மா.” தனம் பேசியதை கேட்டு கொண்டிருந்த செல்வம் தனது சந்தேகத்தை தீர்க்க ஒரு கேள்வியை தாயைப் பார்த்துக் கேட்டான்.
“அவன் உன்னைப் போல் பத்தாம் வகுப்பு தான் படிக்கிறதாகச் சிவா மாமா எழுதியிருந்தார். உன்ரை மாமி வெள்ளைக்காரிச்சியானாலும் தமிழ் நல்லாகப் பேசுவாவாம். சாரி உடுத்து கோயிலுக்கும் போவதுண்டாம். அதனாலை நான் நினைக்கிறேன் ரமேசும் தமிழ் நிட்சயம் பேசுவான் எண்டு.;” தனம் மகனின் சந்தேகத்தைப் போக்கினாள். கனடாவிலை பிறந்த பிள்ளையள் தமிழ் பேசமாட்டினம் என்று எண்டை நண்பன் சுந்தரம் சொன்னான். அவனுடைய பெரியப்பா மகன் கனடாவிலை தானாம் பிறந்தவன். இரண்டு மாதத்துக்கு முந்தி ஊருக்கு வந்து போன போது சுந்தரத்தோடை பேசிப்பழக கஷ்டப்பட்டான். உறைப்பான சாப்பாடும் பிடிக்காதாம்.”
“அப்படி இல்லை செல்வம்! வெளிநாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கிற பக்குவத்தில் தான் எல்லாம் இருக்கு. சில பெற்றோர் கனடாவிலும் லண்டனிலும் தங்கடை பிள்ளையள் தமிழ் பேசுவதை இழிவாகக் கருதுகினம். எல்லாம் தங்கடை அந்தஸ்த்தைப் பாதுகாக்கத் தான். ஆனால் அவையளிண்டை தோலின் நிறத்தை மாற்ற முடியாது. உண்டை மாமா எழுதினதை வாசிக்க மாமி வித்தியாசமாக உண்டை மச்சானை வளர்த்திருக்கிறா போல இருக்கு. எதுக்கும் அவர்கள் வரட்டும் அப்போது தெரியும் ரமேஷ் தமிழ் பேசுவானா இல்லையா எண்டு.”
“ரமேஷ்; இங்கை வந்ததும் எனது நணபர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைப்பேன். அவனுக்கு என்னைப் போல் கிரிக்கட் விளையாடத் தெரியுமோ என்னவோ?”
“இங்கிலாந்திலை தான் கிரிக்கட் விளையாட்டுக்கு மதிப்புண்டு. எனக்கு தெரிந்தமட்டில் கனடாவில் பேஸ் போலும் ஐஸ் ஹொக்கியும் தான் முக்கிய விளையாட்டுக்கள்;” இது செல்வத்தின் தந்தை குமாரின் பதில்.
“சரி சரி தலைக்கு மேலே பல வேலைகள் இருக்கு. அத்தான் நீங்கள் போய் கந்தனை ஒருக்கா கெதியிலை வரச்சொல்லிவிட்டு வாங்கோ. அண்ணர் கடிதத்தில் அவனைக் கேட்டு எழுதியிருப்பதாக சொல்லுங்கோ. குதித்துக் கொண்டு வருவான். செல்வம் நாளைக்கு உனக்கு சையன்ஸ் டெஸ்ட் இருக்குது எண்டு சொன்னாய் அல்லவா. முதலிலை போய்ப் படி.” தனம் ஒவ்வொருவருக்கும் கட்டளையிட்டு விட்டு சமையல்கட்டுக்;குப் போனாள்.
******
தமையன் சிவாவைக் கண்டவுடன் தனம் திகைத்து போனாள் எவ்வளவுக்கு அவள் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவனது திரண்ட தோள்களுக்கு என்னவாயிற்று? கன்னங்களில் இருந்த பளபளப்பான சதைப்பிடிப்பு மறைந்து விட்டதே. கண்களில் ஒரு வித ஏக்கம் தெரிந்தது. வேலைப் பழுவின் தாக்கமா? ஒரு காலத்தில் ஆணழகன் என்று தன் தமையனை பற்றி ஊர் பெண்கள் வர்ணித்ததுண்டு. அவனது கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்த மாணவிகள் பலர். திடகாத்திரமான உடம்பு. காலையில் தவறாமல் தனது உடம்பை பாதுகாக்க தேகப்பியாசம் செய்வான் சிவா. தினமும்; காலை இரண்டு மைல்களாவது ஓடுவான். அம்மா கூட இவனுக்காக முட்டைக் கோப்பி அடித்துக் கொடுப்பது வழக்கம்.
தன் மனைவி ஜேனையும் மகன் ரமேஷையும் தன் தங்கை குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சிவா. போட்டுக்கொண்டு வந்த சப்பாத்தை வாசலிலேயே கழட்டி விட்டு, வீட்டுக்குள் போகமுன் மகனிடம் தமிழில் “ரமேஷ்!... சப்பாத்தை கழட்டி வாசலில் வைத்துவிட்டு உள்ளே போ” என்று மகனை எச்சரித்தாள் ஜேன். தன் இரு கைகளையும் கூப்பி தனத்திற்கும் அவளது குடும்பத்திற்கும் வணக்கம் தெரிவித்தாள். அவளது நெற்றியில் ஜொலித்த சிவப்புக் குங்குமத்தைப் பார்த்து வாயடைத்து நின்றாள் தனம். ஜேனி;ன் வெள்ளை நிற நெற்றிக்கு தனி அழகை கொடுத்தது அந்தச் சிகப்புக் குங்குமம். அண்ணர் தன் அழகுக்கு பொருத்தமான ஜோடியைத் தான் தெரிந்தெடுத்திருக்கிறார். தலை மயிரை வடிவாக பின்னி இரட்டைப் பின்னல் கூட விட்டிருக்கிறாள். யார் இதெல்லாம் அண்ணிக்குச் சொல்லிக் கொடுத்தது? கழுத்திலை தாலி, காதிலை முத்துத் தோடு வேறு. அசல் இந்துப் பெண்தான். என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவும் அம்மாவும் இப்போ உயிரோடை இருந்திருந்தால் மருமகளைப் பார்த்து எவ்வளவு பெருமைபட்டிருப்பார்கள். தனக்குள் நினைத்துக் கொண்டாள் தனம். ஜேனின் திருத்தமான தமிழ் உச்சரிப்பு தனத்தையும் குமாரையும் திகைக்க வைத்தது. சிவாவும் ஜேனும் வசதியாக தங்குவதற்கு, தாயும் தகப்பன் பாவித்த ஒரு பெரிய தனி அறையில் இருவரும்; படுக்கக் கூடிய தேக்கமரத்தால் செய்த கட்டிலை ஒழுங்கு செய்திருந்தாள் தனம். அப்பா அம்மா மறைவிற்குப் பின் ஒருவரும்; அக்கட்டிலில் படுத்தது கிடையாது. ரமேசும் செல்வமும் சேர்ந்து பழக வசதியாக செல்வத்தின் அறையில் இரு தனிக் கட்டில்களைப் போட்டிருந்தாள்.
மச்சான் குடும்பத்திரை கண்ட மகிழ்ச்சியில் மிகவும் உற்சாகத்தோடு “கனடாவில் இருந்து வந்த மூன்று நாள் பயணத்தின் களைப்புப் போக நன்றாகக் குளித்துவிட்டு வாங்கோ… சாப்பாடு தயாராக இருக்கிறது ஆறமுன் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் பயண அலுப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்” என்றார் குமார். அவர்கள்; கொண்டு வந்த நான்கு சூட்கேசுகளையும் கந்தன் அவர்களுக்கு என ஒழுங்கு செய்யப்பட்ட அறைக்குள் கொண்டு போய் வைத்தான்.
“அப்பா எனது சூட்கேசையும் லப்டொப்பையும் எனது அறைக்குள் வைக்கிறேன். செல்வம் மச்சானுக்கு என்டை லப் டொப்பில் உள்ள வீடியோ கேம்சுகளைப் போட்டுக்காட்ட வேண்டும்” என்றான் பெருமையாக ரமேஷ்.
“அவசரப்படாதே. முதலிலை குளித்துச் சாப்பிட்டு விட்டு களைப்பு போக படுத்து எழும்பு. இன்று பின்நேரம் நாங்கள் கண்ணகி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். நான் உனக்கு கண்ணகி, கோவலன் கதை சொல்லித் தந்தது நினைவிருக்கிறதா?” ஜேன் மகனைக் கேட்டாள்.
“ஓம் அம்மா! அது ஒரு உண்மைக் கதை எண்டியள். கணவனுக்காக மதுரை நகரத்தையே எரித்ததாக சொன்னது ஞாபகம் இருக்குது எனக்கு”
“உன் அத்தைக்கு அந்த கோயிலில் தான் திருமணம் நடந்தது. அந்த பழமை வாய்ந்த கோயிலின் வெளி வீதியில் ஒரு சித்தரின் கல்லறையுண்டாம.” என்று தூய தமிழில் ஜேன் பேசியதைக் கேட்ட தனமும் குமாரும்; வாயடைத்து போனார்கள். அவ்வளவுக்கு ஊர் கண்ணகி அம்மன் கோயிலைப் பற்றி சிவா அண்ணர் தன் மனைவிக்கு சொல்லி வைத்திருக்கிறார் என்று நினைக்கும் போது தனத்திற்கு தன் தமையனைப்பற்றி பெருமையாக இருந்தது.
“என்ன அத்தான் திகைத்து நிற்கிறீர்கள்! ஜெனுக்கு தமிழ் பேசுவது என்றால் கொள்ளை விருப்பம். வீட்டில் என்னோடு ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. இராமாயணம் மகாபாரதமும் கூட அவவுக்குத் தெரியும். ஆங்கிலத்தில் பகவத் கீதையை பல தடைவ வாசித்திருக்கிறா. நான் கூட அதை வாசித்தது கிடையாது. தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும் என்பது அவள் ஆசை. தினமும் தியானம், யோகா கூட செய்வாள். எங்கடை தமிழ் பெண்கள் கூட அவ்வளவுக்கு அதில் ஆர்வம் காட்டுவது கிடையாது. முற்பிறவியில் ஜேன்; இந்துவாகப் பிறந்திருப்பாளோ என்னவோ?” ஜேனுக்கு ஆன்மீகத்தில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது என்பதை விளக்கினான் சிவா.
“அண்ணா, மச்சாள் சாய்பாபா மேல் நம்பிக்கை உள்ளவவா?”
“ஆம்! அது உனக்கு எப்படித் தெரியும்?”
“மச்சாளிண்டை கழுத்திலை தொங்கிற சாய்பாபா படம் போட்ட பென்டன் காட்டுகிறதே” என்றாள் சிரித்தபடி தனம்.
“அவள் இங்கிருந்து கனடாவுக்கு திரும்பிப் போகமுன் உன்னையும் சாய்பாபா பக்தையாக மாற்றி விடுவாள் கவனம்”.
“சரி சரி குளித்துப் போட்டு வாருங்கள் சாப்பிடுவோம். தோட்டத்தில காய்த்த நல்ல பிஞ்சுக் கத்தரிக்காய், முளைக் கீரை, பாவற்;காய், தக்காளி ரசம் எல்லாம் சமைத்து வைத்திருக்கிறாள் தனம். உனக்கு பிடித்த முருங்கக்காய் குளம்பும் கிழங்கு போட்டு செய்து வைத்திருக்கிறாள். மோர் மிளகாய், வடகம். தோட்டத்துச் சாம்பல் வாழைக்காய் பொரியல், ஊறுகாய் எல்லாம் செய்து வைத்திருக்கிறா. இன்று வெள்ளிக்கிழமையல்லவா? அது தான் மரக்கறி. நாளைக்கு நான் கூறு போட்ட ஆட்டிறைச்சி கொழுப்போடை கோண்டாவிலிருந்து வாங்கி வாரன். அது உனக்கு விருப்பம் தானே.”
“அத்தான் நான் இப்ப மச்சம் சாப்பிடுவதை குறைத்து விட்டேன். வைத்தியர்களின் ஆலோசனை அது.”
“நீ சொல்வதைக் கேட்க புதுமையாக இருக்கிறதே. ஒரு காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெய் வைத்து முழுகிப் போட்டு நீ ஆட்டிறச்சிப் பால் பொரியல் கறி விரும்பிச் சாப்பிடுவதாகத் தனம் சொன்னாள். இப்ப ஜேன் உன்னை மாத்திப் போட்டாளா என்ன? குமார் கேட்டார்.
“ஜேன் என்னை மாற்றவில்லை. உடலுக்குச் சரிப்பட்டுவராது என்று நானே நிறுத்திவிட்டேன். நீண்ட காலம் வாழ வேண்டாமா? மேலும் கதையைத் தொடராமல் தன் அறைக்குள் சிவா போனது தனத்தின் கணவனுக்குப் புதிராக இருந்தது. சிவா எதையோ மறைக்கிறானா? அல்லது உண்மையில் தனது தேகநலத்தின் மேல் அவனுக்கு அக்கறையா?
ஜேனுடன் பேசினால் சிவாவில் ஏற்பட்ட மாற்றத்துக்கு காரணம் என்ன என்பதை அறியலாம். ஆனால் அவளும் உண்மையை மறைத்துவிடுவாளோ? குமார் யோசித்தான்.
******
மதிய போசனத்தின் போது சிவா அவ்வளவுக்கு இரசித்து உண்ணாதது தனத்துக்கும் கணவனுக்கும் ஏமாற்றமாக இருந்தது. சிறிதளவு சோற்றைப் போட்டு ரசத்தை விட்டு பிசைந்து சாப்பிட்டுவிட்டு எழும்பி போய் விட்டான் சிவா. ஜேன் பேசாமல் மௌனமாக வெள்ளித் தட்டை பார்த்தபடியே இருந்தாள்.
“ஏன் அண்ணி நீங்கள் சாப்பிடவில்லை?. உங்களுக்கு விருப்பமான மரக்கறிகள் உறைப்பை குறைத்து செய்து வைத்திருக்கிறனே. உங்களுக்கும் அண்ணரைப் போல் பசியில்லையா”.
ஜேன் பதில் சொல்லவில்லை. அவள் கண்களில் கண்ணீர் முட்டியிருந்ததை தனம் கண்டு திடுக்கிட்டாள்.
“ஏன் அண்ணி அழுகிறீர்கள். அண்ணரோடு ஏதும் வாக்குவாதமா?”
“இல்லை என்று குனிந்தபடி தலையை மட்டும் ஆட்டினாள் ஜேன்”.
“அப்ப சாப்பிட வேண்டியது தானே. இங்கை லீவிலை நீங்களும் அண்ணரும் ரமேசும் ஊருக்கு வந்தது நல்லாக சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்து, ஊரைச் சுற்றி பார்த்துவிட்டு போகத் தானே. அதுவும் ஒரு மாதத்தில் எவ்வளவோ பார்க்கலாம். கண்ணகி அம்மன் கோயில் திருவிழா கூட நடக்க இருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், அதிசயங்கள் பல நிகழ்ந்த கோயில் அது. எங்கள் ஊருக்கு தொற்று நோய்கள் வராமல் காப்பாற்றுவது அவ தான். தீர்த்;;தத்துக்கு அடுத்த நாள் கோயிலில் தீக்குளிப்பு நடைபெறும். பலர் கலந்து கொள்வார்கள். விரதம் இருந்து தீக்குளித்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்ற நம்பிக்கை இவ்வூர் வாசிகளுக்கு உண்டு. அண்ணர் கூட அதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருப்பாரே”.
“சிவர் சொன்னவர்தான். தீக்குளிப்பைப் பற்றி வாசித்திருக்கிறன். ஹவாய் தீவிலும் தீக்குளிப்பு நடை பெறுகிறது. ஆனால் உங்கள் ஊர் நம்பிக்கையில் உண்மையுண்டா”? ஜேன் கேட்டாள்.
“எனக்கு தெரிந்த எத்தனையோ திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன்மார்; கிடைத்திருக்கிறது. ஏன் எங்கடை பக்கத்து விட்டு மாமியின் திருமணமான மகளுக்கு கல்யாணமாகி பத்து வருடத்தில் மார்பகத்தில் கன்சர் என்று டொக்டர்கள் சொன்னார்கள்;. அவளுக்கு இரண்டு பிள்ளைகள் வேறு. அவள் மூன்று வருடத்துக்கு முன்பு தனக்கு நோய் சுகம் வரவேண்டும் என்று விரதம் இருந்து தீக்குளித்தாள். ஒவ்வொரு வருடமும்; தீக்குளிப்பாள். இப்பவும் உயிரோடு இருக்கிறாள். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தான்.”
“அப்படியானால் நானும் என் கணவருக்காக விரதம் இருந்து தீக்குளித்தால் என் கணவனுக்கு சுகம் வருமா? ஜேன் குனிந்திருந்த தலையை நிமிர்த்தி ஆவலுடன் தனத்தைக் கேட்டாள்.
“என்ன அண்ணி சொல்லுகிறீர்கள். அண்ணருக்கு என்ன அப்படி சீர்pயசான வருத்தம் நீங்கள் திக்குளிப்பதற்கு? அப்படி எதாவது இருந்தால் எனக்கு மறைக்காமல் சொல்லுங்கோ.”
“அப்படி ஒன்றுமில்லை. ஏதொ மனதில் சந்தேகம் வந்தது அது தான் கேட்டேன்” ஜேன் மௌனமானாள்.
தனத்தின் கணவனுக்கு குமாருக்கு விளங்கிவிட்டது ஜேன் எதையோ மறைக்கப்பார்க்கிறாள் என்று. அவள் முகத்தில ஏற்பட்ட பதட்டம் காட்டிக் கொடுத்துவிட்டது. வந்ததில் இருந்த சிவாவின் போக்கில், அவனது முகத்தில் இருந்த ஏக்கம், கண்களில் தெரிந்த கவலை எல்லாம் குமாருக்கு தன் மைத்துனருக்கு ஏதோ தேகநலத்திலும் கோளாறு என்று சந்தேகம் ஏற்பட்டது. குமாருக்கு ஒருவரின் முகத்தைப் பார்த்து மனதிலும் உடலிலும் உள்ளதை அறிந்து கொள்ளக் கூடிய சக்தியுண்டு.
“ஜேன், சிவா தூங்கிவிட்டார். அவர் எனக்கும் தனத்திற்கும் தனது பிரச்சனையை சொல்லமாட்டார். எல்லாவற்றையும் தன் மனதுக்குள் புதைத்துக் கொள்வது அவரது வழக்கம். நாங்கள் கவலைப் படுவோம் என்று. நீங்கள் என்ன பிரச்சனை என்று சொன்னால் எங்களால் முடிந்ததைச் செய்யலாம். கண்ணகி அம்மன் கோயில் தெற்கு வீதியில் ஒரு சித்தர் இருக்கிறார். அவரிடம் போய் பிரச்சனையைச் சொன்னால் சில சமயம் பரிகாரம் கிடைக்கலாம்.” குமார் ஜேனிடம் இருந்து சிவாவின் பிரச்சனையை அறிய தூண்டில் போட்டான்.
ஜேனுக்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை. தாங்கள் ஊருக்கு வந்த காரணத்தை தனத்திற்கும் குமாருக்கும் அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும்; என்ற தீர்மானத்துக்கு வந்தாள் ஜேன்.
“நான் சொன்னதாக மட்டும் சிவாவுக்கு சொல்லிவிடாதீர்கள். எங்கள் குடும்பம் சிவா பிறந்த ஊருக்கு வந்ததே அவர் விருபப்படிதான். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு ‘லூக்கேமியா என்ற பிளட் கன்சர்’ என்று டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். அதுவும் ரூட்டின் டெஸ்டுக்கு அவர் போன போது தான் தெரிய வந்தது. நோய் முற்றிவிட்டதாம். இன்னும் சில கிழமைகள் தான் அவர் வாழ்வார் என்று டொக்டர்மார்கள் சொல்லிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். கனடாவிலையோ எங்களுக்கு கிட்டத்து சொந்தக்காரர்கள் என்று ஒருவரும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. ஒருவர் இறந்து விட்டால் பிரேதத்தை விட்;டில் வைத்து உறவினர்கள் கூடி பழைய முறைப்படி கிரிகைகளை ஊரில் நடத்துவது போல் நடத்த முடியாத நிலை. சில சமயம் பலநாட்கள் உடலை பிரேத அறையில் வைத்திருப்பார்கள். அதன் பின் ஓரிரு நாட்கள் பியூனரல் பாலரில் மூன்று அல்லது நான்கு மணித்தியாளம் மட்டுமே உடலை பார்க்கலாம். இறுதித தகன நாள் கூட வசதிக்கு ஏற்ப ஒழுங்கு செய்ய வேண்டும். ஈமக்கிரியைகள் சரிவர நடப்பதில்லை. தகனம் செய்யும் வரை இறந்தவரின் ஆன்மா பரிதவிக்கும் ஒரு நிலை. ஏன் தான் அப்படி செய்கிறார்களோ தெரியாது. சிவாவுக்;கு தான் இறக்க முன்னர் உங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்பது ஆசை. என்னையும் ரமேசையும் உங்களுக்கு அறிமுகப் படுத்தி உங்களோடு சேர்த்து வைக்க வேண்டும் என்பது அவரது முக்கிய விருப்பம். கண்ணகி அம்மன் கோயிலுக்கு போகும் பாதையைச் சீhபடுத்த வேண்டும. கோயலை சீர்திருத்த வேணடும், வயல் வெளியில் ஆள்காட்டி குருவியின் பின்னனி ஓசையை கேட்டபடி வயல் வரம்பில் நடக்க வேண்டும், ஆலமரத்தடி வைரவருக்கு பொங்கிப் படைக்க வேண்டும், அது மட்டுமல்ல அனாதைப் பிள்ளைகளுக்கு எதாவது செய்ய வேண்டும் போன்ற ஆசைகள் வேறு அவருக்கு. அதோடு தனது உயிர் தான் பிறந்து வளர்ந்த இந்த வீட்டிலேயே பிரிய வேண்டும் என்ற விருப்பத்தை எனக்கு அடிக்கடி சொல்லுவார் சிவா. அவர் புறப்பட்டு வர முன் கனடா பத்திரிகை ஒன்றுக்கு “ஆறடி மண்” என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஒன்றை கொண்டு வந்திருக்கிறன் வாசித்துப்பாருங்கள். அப்போது புரியும் அவரது மனநிலை. சிவா எழுதின கவிதையை தனத்திடம் நீட்டினாள் ஜேன்;.
ஆடிய ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு
பிற நாட்டு ஆறடி நிலத்துக்குள்
அடங்கிக் கிடக்கப்போறவனே!...
உன் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனையை
புலம் பெயர்ந்ததினால்
சுவாசிக்க உனக்கு கிடைக்காமல் போகுமோ?..
கவிதையை வாசித்துவிட்டு “இதற்காகவா அண்ணர் தனது இறுதிப்பயணமாக ஊருக்கு வந்தவர்”. தனம் மனதுக்குள் நினைத்தாள்.
******