உக்குணா
குணராசா அவனது உண்மைப்பெயர். குணத்தில் அவன் ராசா, ஆனால் அவன் வீட்டில் தான் அவனது நல்ல குணத்தை ஒருவரும் சரியாக புரிந்துவைத்திருக்கவில்லை. வீட்டில் அவனை உக்குணா என்றுதான் அழைப்பார்கள். என் தாய்மாமன் குடும்பத்தில் உள்ள நான்கு குழந்தைகளில அவன் மூன்றாவது குழந்தை. முதல் இரண்டும் ஆண் குழந்தைகள். கடைசியாகப் பிறந்தது ஒரு பெண்குழந்தை. குணராசா பிறந்து ஒரு கிழமையில் மாமா விபத்தொன்றைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாத காலம் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் உயிர் தப்பியதே கடவுள் புண்ணியம். அது போதும் “அதிர்ஷ்டம் கெட்ட பிள்ளை” என்ற எண்ணம் குணராசா மேல் என் மாமாவுக்கும் மாமிக்கும் வெறுப்பேற்படுவதற்கு. மாமா வீட்டில் உக்குணா என்ற பெயரில் ஒரு சிங்கள வேலைக்காரன் மாமா வீட்டில் இருந்தான். குணராசாவைப் போல் அவனுக்கு தடித்த உடம்பு. சற்று மந்த சுபாவம் உள்ளவன். ஒரு வேலையை மூன்று தரம் திருப்பித் திருப்பிச் சொன்னால்தான் அவனுக்குப் புரியும்.. அவன் வேலைப்பழு தாங்காமல் வீட்டை விட்டு ஓடிப்போனதும் வீட்டு வேலை முழுவதும் குணராசா தலையில் விழுந்தது. முற்றத்தை துப்பரவாக்குவது, விறகு வெட்டுவது, பைப்பில் தண்ணீர் பிடித்துவருது. சமயல் வேலை கூட அவன்தான் சில சமயங்களில் செய்வான்.
“நீ படித்தபோதும். படிப்புக்கும் உனக்கும் வெகுதூரம் வீட்டில் உதவியாக இரு” என்று அவனை பள்ளிக் கூடம் போகாமல் மாமி நிறுத்தி விட்டாள். அப்போது அவனுக்கு வயது பத்து. அச்சமயம் தான் அவனது தங்கை இராஜேஸ்வரி பிறந்தாள். குணராசாவை வேலைக்காரனாக பாவித்ததினால் அனை சகோதரங்கள் பழைய வேலைக்காரன் நினைவாக “உக்குணா” என்று அழைக்கத் தொடங்கினர். அப்பெயரே நிலைத்து நின்றது.
“உக்குணா மாமா, மாமி, மச்சான் , நாங்கள் எல்லோரும் சாப்பிட்டாகிவிட்டது. நீ பீன்கான் கோப்பையை கழுவிப்போட்டு, சமையல் அறையை துப்பறவாக்கிய பிறகு போய் இருக்கிற மிச்சத்தைப் போட்டுச் சாப்பிடு. விறகு முடிஞ்சு போச்சு. காட்டுக்குள்ளை போய் பின்னேரம் விறகு வெட்டிக்கொண்டு வா” என்றாள் உக்குணாவின் தாய் சுந்தரி மாமி. உக்குணாவைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. என்னைக் கண்டால் அவன் சுத்தி சுத்தி வருவான். நானும் அவனோடு ஒட்டென்றால் ஒட்டு. எனக்குக் கிடைக்கிற சொக்கலேட்டுகளை களவாக அவனுக்க கொடுப்பேன். உக்குணாவின் தந்தை குமாரசிங்கம், என் மாமா, என்ஜினியராக அனுராதபுர ரெயில்வே இலாக்காவில்; வேலை. அனுராதபுர புகையிரத ஸ்தாபனத்துக்கு அருகே அவருக்கு அரசாங்கத்தால் வீடு கொடுக்கப்பட்டிருந்தது. 1953ம் ஆண்டு அனுராதபுரத்தின் புது நகரம் உருவாகிக்கொண்டிருந்த சமயம் அது. புத்தளத்துக்குப் போகும்; பிரதான வீதியில் பழைய நகரம் அமைந்திருந்தது. அப்பகுதியை புனித நகரமாக்குவதற்காக புகையிரத நிலையம் இருக்கும் பகுதிக்கு அருகே புதிய நகரம் உருவாகிகக் கொண்டிருந்தது. ஆனால் புதிய நகரம் உருவாகும் பகுதியில் நுவரவௌ என்ற கி.மு முதலாம் நூற்றண்டில் வலகம்பா என்ற மன்னன கட்டப்பட்ட சரித்திரப் பெருமைவாய்ந்த பெரிய குளம உண்டு; சுற்றி அடர்ந்த காடு;. இக்குளத்தின் அணைக்கட்டு 3மைல நீளமும், 37 ஆடி உயரமும் உள்ளது. என் மாமாவின் வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் இருந்தது இக் குளம்.
உக்குணா வீட்டுக்குத் தேவையான விறகு வெட்ட குளக்கட்டு அருகேயுள்ள காட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவனுக்கு அக்காட்டின் அமைப்பை பற்றி முழுமையாகத் தெரியும். அக்காட்டுக்குள் ஊர்வாசிகள் போகப் பயந்தபோது உக்குணாவுக்குப் பயம் என்பது கிடையாது. குளத்தைக் கட்டும் போது மன்னன் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதனால் குடும்பத்தில் ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகளை பலி கொடுத்த பின்னரே பிரச்சனையில்லாமல் குளத்தைப் பாதுகாக்க பூதம் ஒன்று சம்மதித்ததாகவும், அப்பூதம் அக்காட்டில் வாழ்ந்து வருவதாகவும் பல மரபுக் கதைகள் ஊர்வாசிகளால் பரப்பப்பட்டதாக உக்குணா எனக்குச் சொன்னான். தான் இருக்குமட்டும் பூதம் என்னை நெருங்;கி தொந்தரவு செய்யாது என்று எனக்கு மனத்தைரியம் கொடுத்தான். “அம்புலிமாமா” என்ற சிறுவர் சஞ்சிகை வாசித்ததால் பூதங்களைப் பற்றி அறிந்திருந்தேன்.
ஒரு நாள் உக்குணா என்னை அழைத்துக்கோண்டு குளக்கரைக்குப் போனான். கையில் குருவிகளை கல்வைத்து தாக்கும் “கெட்டபோல் “ என்ற கவன் தான் அவனுக்குத் துணை. எனக்கு எப்படி கெட்டபோலை பாவித்து குறிவைத்து குருவிகளை விழுத்தும் கலையைக் கற்றுக்கொடுத்தவன் உக்குணா. நுவரவௌ குளத்தின் ஒரு பகுதியில் செந்தாமரை பூக்கள் நிரம்பி வழிந்தன. குளத்தின் பின்னனயில் கிமு 140 இல் துடட்கைமுனு மன்னால் கட்டப்பட்ட ருவன்வெலிசாயாவென்ற வெள்ளை நிறத் தகோபாவின் தோற்றம் பார்ப்பதற்கு ஒரு குளத்தின் அழகிற்கு மெருகூட்டியது.
ஆழமான குளப் பகுதிக்கு எவரும் சென்று பூப்பறிக்க தயங்குவார்கள். குளத்தில் முதலைகள் இருப்பதாக பலர் பேசிக் கொண்டாலும் யாரோ பரப்பிய வதந்தி அது. அப்படி ஒன்றுமில்லை. அதோ பார் தூரத்தில் பலர் குளத்தின் கரை ஓரத்தில் குளிப்பதை என்று எனக்கு உக்குணா சுட்டிக்காட்டி என் பயத்தைத் தீர்த்தான். மாமாவீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் இருந்த ஒரு பழைய புத்தகோயிலுக்கு அவன் குளத்தில் இருந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சென்று பூசைக்கு அடிக்கடி கொடுப்பதாக எனக்குச் சொன்னான். அவனுடைய சேவையை என்மனதுக்குள் பாராட்டிக்கொண்டேன்.
”உமக்கு தாமரைப் பூக்களும் கிழங்கும் வேண்டுமா? “ என்று உக்குணா கேட்டபோது.
“ஐயோ வேண்டாம் உக்குணா. அந்த ஆழமான குளத்தில்; உள்ள தாமரை மலர்களை எப்படி பிடிங்கப் போறீர். அதோடு தாமரைக் கிழங்கு பிடுங்குவது என்றால் சரியான கஷ்டம்;. தாமரை செடியின் வேர்களில் சிக்குண்டு மேலே வர முடியாது இறந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உமக்கு ஏதும் நடந்தவிட்டால்.. “ என்றேன் நான்;.
“பயப்படவேண்டாம் என்னுடைய நீச்சல் திறமையைப் இருந்து பாரும் “ என்று சொல்லி மறு வினாடி குளத்துக்குள் உக்குணா குதித்தான். அவனது நீந்தும் திறமையைக் கண்டு வியந்தேன். சில நிமிடங்களில் தலையில் இருந்து நீh சொட்ட சொட்ட கையில் தாமரைப்பூக்கள் ,இலைகள் , கிழங்குகளுடன் கரைக்கு வந்தான் உக்குணா.
“.அடேயப்பா நீர் திறமையான நீச்சல் வீரன் என்று இன்றுதான் எனக்குத் தெரியும்” என்றேன்.
“சரி எனக்கு பசிக்குது. வாரும் காட்டுக்குள் போய் பாலப்பழங்களும, முதிரைப் பழங்களும் சாப்பிடுவோம்” என்று என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
கொண்டல் மரங்களும், பாலை, முதிரை மரங்களும் நிறைந்த அக்காடு; குளத்திற்கு அருகே இருந்த படியால் வெளிநாடுகளிலிருந்து காலத்துக்கு காலம் புலம் பெயர்ந்து வரும் பறவையினங்களுக்கு குறைவில்லை.
நரிகள் கூட்டத்தின ஊளைச்சத்த மாமா வீட்டுக்கு கேட்கும் போது “காட்டுப் பக்கம் தப்பித் தவறி உக்குணாவுடன் போய்விடாதே. நரிகளை விட கரடி சிறுத்தை பாம்புகள் அக்காட்டில் அதிகம் “ என்று என்னை மாமாவின் மூத்த மகன் சிவராசா பயமுறுத்தி வைத்தான். காரணம் நான் அவனோடு சேர்வது குறைவு. வயது வித்தியாசம் கூடிய காரணத்தால் என்னை கட்டுப்படுத்தப் பார்ப்பான். ஆனால் மாமாவின் மூன்றாவது மகனான உக்குணா அப்படியில்லை. என்னிலும் பார்க்க அவன் மூன்று வயது மூப்பு.
மாமாவுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டாவது மகன் செல்வராசா ஒரு போக்கு யாரோடையும் பேசமாட்டான். கடைசியாக ஒரு மகள் ராஜேஸ்வரி. குடும்பத்தின்; ஒரு பெண்குழந்தை என்ற படியால் மாமாவும் மாமியும் அவளுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அதனால் தான் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டவள். தன் அண்ணன் உக்குணாவை ஒரு வேலைக்காரன் போல் அவள் நடத்தினாள்;. அக்குடும்பத்தில் எல்லோரும் உக்குணாவை அப்படி வித்தியாசமாக பாகுபாடு காட்டி வந்ததை என் அப்பாவும் அம்மாவும் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். உக்குணா படிப்பில் சற்று மந்தம். அதுவும் வேற்றுமையான நடத்தப்பட்டதற்கு ஒரு காரணமாகயிருந்தது. ராஜேஸ்வரியின் போக்கு எனக்கு அவ்வளவுக்கு பிடிக்கவில்லை. கணக்கில் நான் கெட்டிக்காரன் எனபது மாமாவுக்கும் மாமிக்கும் தெரியும். அதனால்
“ ராஜேஸ், மச்சானிடம் கணக்கு கேட்டு படி” என்று அவர்கள் கட்டளையிட்டாலும் அவள் அதை காதில் போட்டுக்கொள்ள மாட்டாள். எனக்கேன் அந்த வம்பு என்று நான் சும்மயிருந்துவிடுவேன்.
அப்போது என் தந்தை புத்தளம் கச்சேரியில் பிரதம லிகிதராக வேலைசெய்தார். நல்லூர் திருவிழா, வீரமகாளியம்மன் திருவிழாவுக்கு ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணம் போய் வருவோம். புத்தளத்தில் காலை பஸ் ஏறி 46 மைல் தூரத்தில் உள்ள அனுராதபுரத்தை அடைய குறைந்தது மூன்று மணித்தியாலம் எடுக்கும். போகும் வழியில் அரைமணித்தியாளமாவது கலா ஓயாச் சந்தியில் வீதி ஓரமாக இருந்த சாப்பாட்டுக் கடை முன்னே பஸ்சை நிற்பாட்டி, ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தான் பஸ் சாரதியும் கொண்டக்டரும் பயணத்தை தொடர்வார்கள். அனுராதபுரத்தில் குறைந்தது இரண்டு நாள் மாமா வீட்டில் தங்கித்தான் பகல் இரயில் எடுத்து ஆறு மணித்தியால பயணத்தின் பின்னர். வண்ணார்பண்ணையில் உள்ள எங்கள் சின்னையா வீட்டை அடைவோம். அதே மாதிரி புத்தளம் திரும்பும் போதும் மாமா விட்டில் தங்கித்தான் செல்வோம். அப்போது தான் எனக்கும் உக்குணவுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. நான் படிப்பில் கெட்டிக்காரன் என்ற படியால் மாமாவுக்கும் மாமிக்கும் என்மேல் ஒரு தனிப்பற்று. ஒரு வேலை தங்களது மகளின் வருங்காலத்தை நினைவில் வைத்துத்தான் அந்தப் பற்று ஏற்பட்டதோ என்னவோ . ஒரு சமயம் துணிந்து உக்குணாவை ஒரு கிழமைக்கு புத்தளம் அனுப்பும் படி கேட்டேன். முதலில் முடியாது என்றவர்கள் என் தந்தையின் வற்புறுத்தலை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. அந்த ஒரு கிழமையும் உக்குணா என் மேல் அன்பைச் சொறிந்தான். எனது பள்ளிக் கூட நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர்களில் காதர் என்பவன் முரட்டுச் சுபாவம் உடையவன். மற்றவர்களைப் பயமுறுத்தி பல காரியங்களை அவர்களைக் கொண்டு செய்விப்பான். எனக்கு அக்கா பரிசாகத் தந்த பாக்கர் பேனாவையும் அவன் தான் திருடினவன். அவனைப் பற்றி உக்குணாவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்தேன். என்னை “சடடித் தலையன் “ என்று கேலி செய்வான். நான் ஒன்றும் பேசாமல் போய்விடுவேன். உக்குணாவை என்னோடு கண்டபோது சீண்டாமல் அவனால் சும்மா இருக்கமுடியவில்லை.
“ என்ன புத்தளத்துக்கு இரண்டாவது பனங்கொட்டையை கொண்டு வந்துவிட்டாயா”? என்றான் காதர் கேலியாக. யாழ்ப்பாணது வாசிகளை புத்தளத்து முஸ்லீம்கள் பனங்கொட்;டையர் என்று அழைப்பது பழக்கமாக இருந்துவந்தது. உக்குணாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காதர் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். அவனின் பொய் மூக்கு உடைந்து இரத்தம் பீரிட்டது. எனக்கு பயம் வந்துவிட்டது. உக்குணாவை கூட்டிக் கொண்டு அங்கிருந்து ஓடிப்போய் விட்டேன்.
புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் திரும்பிய உக்குணா ஒரு மாத காலத்துக்குள் அந்த காரியத்தைச் செய்வான் என நாங்கள் எதிர்பார்கவில்லை. அவன் முற்கோபி என்று எனக்குத் தெரியும். முன் பின் யோசியாமல் எதையும் செய்து விடுவான். ஒரு நாள் அப்பாவின் வேலைசெய்யும் இடத்துக்கு உக்குணாவை இரண்டு நாளாக காணவில்லை, புத்தளத்துக்கு எங்களிடம் திரும்பவும் வந்துவிடடானா என்று மாமா விசனத்துடன் விசாரித்தார். இங்கு வரவில்லை. அனுராதபுரத்தில் தான் தேடிப் பாருங்கள். எப்போது காணமல் போனான் என்ற விபரம் கேட்டார். புத்தளத்தில என் தந்தைக்கு நன்கு தெரிந்த பொலீஸ் இன்ஸ்பெக்டர் பெரேரா அனுராதபுரத்துக்கு மாற்றலாகி சென்றிருந்தார். அவரைச் சந்தித்து பொலீஸ் உதவியுடன் அவனைத் தேடுவோம். இப்படி பிள்ளைகள் வீட்டை விட்டு ஒடுவது சாதாரண விஷயம். ஒன்றுக்கும் யோசிக்காதே நான் லீவ் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று மாமாவுக்கு ஆறுதல் சொன்னதாக அம்மாவுக்குச் சொன்னார். அப்பா புறப்படும் போது நானும் உக்குணாவைத் தேட வருகிறேன் என்று அடம் பிடித்தேன். “நான் வந்திருப்பதை அவன் கேள்விப்பட்டால் நிட்சயம் என்னைப் பார்க்க வீடு திரும்புவான். அதோடு அவனைத்தேடி கண்டுபிடிக்க நானும் உதவலாமல்லவா”? என்றேன்;. அப்பாவுக்கு நான் சொன்னது ஓரளவுக்குச் சரியாகப்பட்டது. அம்மா தடுத்துப் பார்த்தாள். அவரோ “அவனும் வரட்டும் “ என்று என்னையும் கூடவே அழைத்துச் சென்றார்.
நானும் அப்பாவும் மாமாவீட்டை அடைந்தபோது இன்ஸ்பெகடர் பெரேராவும் அவரது உதவியாளரும் மாமாவையும் மாமியையயும் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தனர். என் தந்தையைக் கண்டவுடன் மாமாவைக் காட்டி இவர் உங்கள் மைத்துனரா என்று கேட்டார். என்தந்தை அதற்கு இவர் என் மனைவியின் தம்பி. காணாமல் போன உக்குணா இவரின் மூன்றாவது மகன். என்றார். பின்னர் என் தந்தையும் பெரேராவும் வீட்டுக்கு வெளியே போய் எதோ பேசிக்கொண்டார்கள்.
என்தந்தை திரும்பியவுடன் “ இன்ஸ்பெக்டர் என்னவாம்? “ என்று மாமி கேட்டாள்;. அவள் முகத்தில்; பயம் தெரிந்தது. அவர்களுக்கு உக்குணாவின் மறைவிற்கு தாங்கள் தான் காரணம் என்று பொலீஸ் சந்தேகப்படுகிறதோ என்ற பயம்.
“இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிந்தவர், அதனால் பேசிக் கொண்டோம். அவர் என்னிடம் கேட்டார் வீட்டில் உக்குணாவை எப்படி நடத்தினார்கள் என்று. நான் அதற்கு உங்களை விசாரித்து அறிந்து கொள்வது நல்லது; எனறேன். அது சரி இந்த நிலை ஏற்படுவதற்கு நீங்கள் உக்குணாவை நடத்திய விதம் தான் காரணம் என்று என் மனம் சொல்கிறது. . அவனை வேலைக்காரனிலும்; பார்க்க கீழ்தரமாக நடத்தினீர்கள். உங்கள் பிள்ளைகள் கூட சகோதரன் என்ற மரியாதை அவனுக்கு கொடுக்கவில்லை. பல தடவை நான் இங்கு வரும் நீங்கள் அவனை நடத்தியவிதத்தை பார்த்து மனம் வருந்தினேன். நாங்கள் ஒன்றாக இருந்து உணவு அருச்தும் போது அவன் மட்டும் தனியாக ஒதுக்கப்பட்டான். என்மகன் கூட எனக்குச் சொல்லி கவலைப்பட்டான். அது சரி கடைசியாக எப்போது நீங்கள் அவனோடு பேசினீர்கள். உண்மையில் நடந்தது என்ன? “ என் தந்தை மாமாவைக் கேட்டார்.
“ உண்மையில் எனக்கு நடந்தது தெரியாது. நான் வேலைக்குப் போய் திரும்ப மாலை ஐந்து மணியாகிவிட்டது. வீட்டை வந்த போது சுந்தரி தான் தனக்கும் உக்குணாவுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தாகவும். அதை பார்த்துக்கொண்டிருந்த சிவராசா உக்குணாவை தாறுமாறாக அடித்துவிட்டான் “ என்று சொன்னா.
“ நான் உங்கள் எல்லோருக்கும் ஒரு பாடம் படிப்பிக்கிறன்” என்று புறு புறுத்தபடி விறகு வெட்ட கத்தியையும் கயிறொன்றையும் கையில் எடுத்கொண்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள குளக்கரை காட்டுக்கு போனானாம். இது நடந்து இரண்டு நாளாகிவிட்டது. “ என்றார் மாமா.
“நடந்தது நடந்து விட்டது. உக்குணா திரும்பிவந்தால் அவனை மனிதபிமானத்தோடு நடத்துங்கள். எப்படியும் அவன் நீங்கள் பெற்ற மகன். சரி இனி நடப்பதை பார்ப்போம் “ என்றார் என் தந்தை.
*******
அன்று பின்னேரம் “வா குளக்கரைக்குப் போய் வருவோம் “ என்று அப்பா என்னை அழைத்தார். இருவரும் சிறுதூரம் மௌனமாக நடந்;து சென்றோம். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் கதைகள் படித்த எனக்கு எப்போதும் துப்பறிய வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. குளக்கரைக்குப் போகும் வழியில் ஒருவரையும் நாம் சந்திக்கவில்லை. கீழே கிடந்த தடியொன்றை கையில் எடுத்துக்கொண்டேன். நாங்கள் நடந்து வரும் சத்தம் கேட்ட முயலொன்று பற்றைக்குள் இருந்துவெளியே பாய்ந்தோடியது. தூரத்தில் காட்டுக்குள் காகங்கள் வானத்தில் வட்டமிட்டு கரையும் சத்தம் கேட்டது.
“ அப்பா அங்கை பாருங்கோ. ஏன் அப்படி காகங்கள் கூட்டமாக கரைகிறது? எனக்கு ஒரு துர்நாற்றம் கூட விசுகிற மாதிரி இருக்கிறது. எதாவது மிருகங்கள் செத்திருக்குமோ”? என்றேன்.
என் தந்தைக்கு நான் சொன்னதன் அர்த்தம் புரிந்து விட்டது. “ சரி வா அந்த பக்கம் போய் காகங்கள் ஏன் கரைகிறது என்று பாhப்போம் “ என்று என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்றார். உக்குணா என்னை அந்தக்காட்டுககு பாலப்பழம் பறித்து தர அழைத்துசென்றது என் நினைவுக்கு வந்தது.
பாதையில் இருந்து காட்டுக்குள் சிறுதூரம் சென்றபோது துர்நாற்றம் அதிகரிக்கக் தொடங்கியது. “ அப்பா நாத்தம் பொறுக்க முடியவில்லை. திரும்பிப்போவோமா” என்றேன் நான்.
“ கொஞ்சம் பொறு. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் காகங்கள் ஏன் அப்படி கூட்டமாய் கரைகின்றன என்பதையும் பார்ப்போமே” என்றார் என்தந்தை. அவர் தனக்குள் இருந்த சநதேகத்தை வெளிப்படையாக எனக்கச்; சொல்ல விரும்பவில்லை என்று எனக்குத் தோன்றியது.
காகங்கள் ஒரு பூத்துக் குழுங்கிய கொண்டல் மரத்திற்கு மேல் சுற்றிக் கொண்டிருந்தன. எங்களை கண்ட இரு நரிகள் பற்றைக்குள் ஓடி மறைந்தன. கொண்டல் மரக் கொப்பொன்றில், கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த மனித உருவம் வேறு ஒருவரும் இல்லை , எங்கள் உக்குணாவின் பிரேதம் தான். அந்தக் காட்சியைக் கண்ட நான் “ஐயோ அப்பா அங்கை பாருங்கோ உக்குணாவை. “என்று வாய்விட்டு கதறினேன்.
உக்குணாவின் கண்களைக் காணவில்லை. ஒரு வேலை காகங்கள் பதம் பார்த்துவிட்டதோ. வயிறு ஊதியிறுந்தது. பிரேதமாக தொங்கிய உக்குணா தன் விதியை தானே நிர்ணயித்துவிட்டான். மரத்தடியில் வெட்டிய விறகும் அவன் கொண்ட வந்த கத்தியும் கிடந்ததன. விறகை கட்டிக்கொண்டு போக கொண்டுவந்த கயிறறை பாவித்து தற்கொலை செய்திருக்கிறான் என்று நாங்கள் அறிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.
“ சரி வா கெதியிலை போய் பொலீசுக்கு அறிவிப்போம். இஙகை நாங்கள் நின்று நேரத்தை வீணாக்க தேவையிலலை. நீ எதையும் மாமா, மாமியோடு கதைக்காதே என்ன? என்று எனக்கு எச்சரிககை செய்தார். அவ்விடத்தை விட்டுநகர்ந்தோம்.
“ அட கடவுளே உக்குணாவுக்கு இந்த கதியா? “ .என்றது என் மனம். நான் அழுதுவிட்டேன்.
இன்ஸ்பெகடர் பெரோவுக்கு உக்குணாவின் பிரேதம் கொண்டல் மரத்தில் தொங்குவதைபற்றிய முழு விபரத்தை என் தந்தை சொன்னார். பொலீசார் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்தார்கள். மாமாவையும் மாமமியையும் அறைக்குள் அழைத்துச் வென்று நாங்கள் காட்டுக்குள் கண்ட காட்சியை எடுத்துச்ன்னர். உடனே சுந்தரி மாமி “ஓ” வென்று கதறி அழுவது எனக்கு கேட்டது. நான் என் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். செய்ததையும் செய்துவிட்டு ஏன் இவ வெளியுலகுக்கு பொய் வேஷம் போடுகிறா?.
உக்குணாவின் பிரேத விசாரணை முடிந்து தற்கொலை என தீர்ப்பு வழங்கப்பட்டது. அம்மாவும் அக்காவும் அண்ணாவும் புத்தளத்தில் இருந்து உககுணாவுக்கு தங்கள் கடைசி மரியாதையை செலுத்த விஷயம் கேள்வி பட்ட அடுத்த நாளே அனுராதபுரம் வந்துவிட்டார்கள். மரணச் சடங்குகள் முடிய மூன்று நாட்களாகிவிட்டது.
*******
“உக்குணா இறந்தது அவிட்டத்து பஞ்சமி திதியில். பிரேதத்தை பெட்டிக்குள் வைத்து இடுகாட்டு அனுப்ப முன் ஒரு கோழிக்குஞ்சை வைத்து அனுப்பியிருக்க வேண்டும். இதை அவையள் செய்ய தவறிவிட்டினம். இனி என்ன நடக்குமோ தெரியாது” என்று சொல்லி அம்மா குறைப்பட்டாள். அம்மாவுக்கு இப்படியான மூடநம்பிக்கைகள் இருந்தாலும் தனது அனுபவத்தை வைத்து தனது கருத்துக்களை வெளியிடுவாள். சில சமயம் அவை உண்மையாகிவிடும். உக்குணாவின் மரணத்துக்குப்பின் மாமாகுடும்பத்துக்குள் ஒரு பயம் பீடீத்துவிட்டது. அதுவும் இரவு நேரங்களில் அறைக்கதவு திறப்பது போன்ற சத்தமும் , விறகு கொத்துவது போன்ற சத்தமும். யாரோ வலியினால் ஓலமிடுவது போலவும் கேட்பதாக மாமி, மாமாவுக்கு சொல்லி பயந்தாள். மாமிக்கு உக்குணா தன்னை பழி வாங்கிவிடுவானோ என்ற பயம் இருந்தது.
உக்குணா இறந்து ஆறுமாதமாகிவிட்டது. எல்லோரும் சிறிது சிறிதாக நடந்ததை மறந்துவிட்டார்கள் காரணம் ஒரு உயிரின் மறைவின் பின்னர் அக்குடும்பத்தில் இன்னொரு உயிர் தோன்றிவிட்டது.
சுந்தரி மாமி கருத்தரித்திருப்பதை கேள்விபட்டு உக்குணா தான் திரும்பவும் குடும்பத்துகள் வந்து பிறக்கப்போகிறான் என்று அம்மா அப்பாவுக்கு சொல்லப்போய் “ சரி சரி உமது கருத்தை உமக்குள் வைத்துக்கொள்ளும் சுந்தரிக்கோ உம் தம்பிக்கோ அதைப் பற்றி மூச்சு விடாதையும் “ என்று அப்பா அம்மாவுக்கு எச்சரிக்கை செய்தார். அம்மாவுடைய நாக்கு கரி நாக்கு என்று சின்னம்மா அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறன். அப்பாவுக்குப் பயம் அம்மாவின் அந்தக் கருத்து அவர்கள் மனநிலையை பாதிக்குமோ வென்று.
ஒரு நாள் பகல் மாமா, மாமியோடு காரில் புத்தளத்துக்கு வந்தார்கள். மாமிக்கு எதிர்பாராதவாறு ஐந்து மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாம் அனுராதபுரத்தில் வைத்தியர்கள் உடனடியாக கொழும்புக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்து கருவை வெளியே எடுக்கும்படி சொல்லிவிட்டாhர்களாம். அதனால் கொழும்புக்கு போகும் வழியல் மாமியின் உடல் நிலை மோசமானபடியால் புத்தளத்தில் எங்கள் வீட்டில் நிற்பாட்டவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாக மாமா சொன்னார். ஆனால் எங்கள் வீட்டு முன் முற்றத்து பூவரசம் மரநிழலின் கீழ் நிற்பாட்டியிருந்த அவர்கள் வந்த காருக்குள் மாமியின் உயிர் சடுதியாக பிரியுமென நாம் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. உக்குணா மாமியை பழிவாங்கிவிட்டானா?. பஞ்சமித் திதி அம்மா சொன்னது போல் வேலை செய்யத் தொடங்கிவிட்டதா?. இம்மரணத்தைத் தொடர்ந்து மூன்று மாதத்தில் என் அம்மாவின் தந்தை காலமானார். அதன் பிறகு மாமா, அதன் பின் என் தந்தை ஆகியோர். வரிசையாக மரணத்தைத் தழுவினார்கள். என்னால் இன்னும் அச்சம்பவங்களை அறுபது வருடங்களுக்குப் பின்னரும் மறக்கமுடியவில்லை.
*******
பி.குறிப்பு இது ஒரு உண்மைக்கதை