சீரு செனத்த

​கண்ணாலம் பேசி முடிச்சேனே
கண்ணாக வளர்த்த மொவளுக்கு !
காகாணி மிச்சம் நிலத்தையுந்தான்
காதும் காதுமா வித்துப்புட்டேன் !

சீரும் செய்யனும் சிறப்பாவே
சிந்தையும் குளிரனும் எனக்குமே
ஊரும் உறவுகளும் பாராட்டனுமே
உள்ளவரை நெஞ்சிலும் நிக்கனுமே !

வெளியுலகம் தெரியா வெகுளியவ
கலிகாலத்தை அறியா அப்பாவியவ !
வளர்த்திட்டேன் நானும் வளர்மதியை
வரையரையை வகுத்த வட்டத்துள்ளே !

பொன்துளியும் துணியும் வாங்கினேன்
கண்மணி அவளுக்கும் முடிஞ்சதை!
நேரிலும் சென்றேன் அழைத்திடவே
வேண்டிய உறவையும் முறையாகவே !

நாளும் விரைந்தது செலவினமுடன்
நிமிடங்கள் கரைந்தது படப்படப்புடன் !
வருடியபடி உரைத்தேன் செல்லமகளிடம்
வாழ்வைத் துவக்கு செல்லுமிடத்திலென !

மணநாள் காலையில் காணவில்லை
மணமகள் மேடைக்கும் வரவில்லை !
தேடியதில் கிடைத்தது கடிதமும்
ஓடியதும் தெரிந்தது காதலுனுடன் !

சீரும் சிரித்தது ஊருடன் கேலியாய்
இதயம் வெடித்தது இதனால் எனக்கும் !

( காகாணி = கால் காணிநிலம் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Oct-16, 10:15 pm)
பார்வை : 110

மேலே