என்றும் நினைவிலகலாத காந்தியம்
சர்வாதிகாரிகளை உலகம் கண்டிருக்கிறது,
ஹிட்லரின் சாகசம் சகிக்கப்பட்டிருக்கிறது
முசோலினியின் முரண்பாடு உடன்பட வைத்தது.
உலகளவு அரசியல் எழுச்சிக்கு
சகுனியின் சாதுர்யம் தேவைப்பட்ட காலத்தில்
சாமான்யனின் பொறுமை பொருந்துமா?
மன்னராட்சி காலம் ஆட்சியைப்பிடிக்க
உடன் பிறந்தவர்களைக்கூட காவு கொடுத்த காலம் முதல்
இன்று வரை எதையேனும் செய்தாவது எப்படியாவது
ஆட்சிக்கு வந்து விட எல்லோரும்தான் முயற்சிக்கிறார்கள்,
எண்ணம் நலமாக முயற்சி அப்பழுக்கற்ற கவனத்தை ஏற்கும்படி
யாரேனும் செய்து ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியுமா?
அப்படிச்செய்ய ஒரு மனிதனால் முடியுமானால்
அவன் மாமனிதனாகத்தானே இருக்க முடியும்?
மக்களாட்சியில் கூட யாரைப்பிடித்து தள்ளிவிட்டு
எப்படி தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் தானே முனைப்பு
இங்கு எல்லோருக்கும் இவர்கள் மத்தியிலா நீ வந்து பிறந்தாய்?
இன்னும்கூட உன் சுயசரிதை படித்துவிட்டு
நாங்கலெல்லாம் வெட்கப்படுகிறோம்,
சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட நீயோ
வேதனைப்பட்டிருக்கிறாய்,
நாங்களோ வெட்கங்கெட்டு திரிகிறோம்,
உன்னை 'தந்தை' என்று அழைப்பது சரியா முறையா?