வாழ்க்கையை வாழ்ந்து பார்
வாழ்க்கையை வாழ்ந்து பார்
===========================================ருத்ரா இ பரமசிவன்
சீட்டுக்கு லட்சங்கள் வீசுகிறாய் படிக்க.
சீட்டுக்கு கோடிகள் தெளிக்கிறாய் தேர்தலில்.
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வர்ணங்கள்
கலையம்சத்துக்கும் குறைச்சல் இல்லை
கரன்சிகள் லட்சங்களாய் தூரிகைவீச்சில்.
பத்து வயது பையனுக்கு ஸ்கூட்டி.
ஷேவ் செய்யும்போது துடைத்துப்போட
சட்டென்று சட்டைப்பையிலிருந்து
ரூபாய் நோட்டுகள் கற்றையாய்.
காது குடையவும் ஒன்றை சுருட்டிக்கொள்வாய்.
தராசுத்தட்டில் இவ்வளவையும் வைத்து
உன் வாழ்க்கையை நிறுத்துபார்.
சந்தோஷம் காட்டும் முள் சாய்ந்து நிற்கிறது.
கரன்சி தட்டு மேலே மேலே செல்கிறது.
வாழ்க்கை காகிதமும் அல்ல பணமும் அல்ல.
வாழ்க்கை கண்ணுக்கு தெரியும் மனிதர்கள்
அவர்களோடு மனங்கலந்த சங்கமம்.
மனவியின் ஒரு வெட்டுப்பார்வை
செல்லச்சிணுங்கல் இதன் மதிப்பு
கோடிக்கு மேல் கோடி பெறும்.
கோடீஸ்வரன் மனைவியின்
வைர அட்டிகையில்
நகைக்கடை விலைச்சீட்டே
பெரு"நகை" புரியும்.
வாழ்க்கையின் மணமும் ருசியும்
அவள் இவனுக்கு தரும் சாதாரண
டபரா தம்ளர் காபியிலேயே தெரியும்.
ஆயிரம் ரூபாய்க்கு
தங்க டம்ளரில் குடிக்கும் காபியில்
பணத்தின் ருசியே உண்டு.
மனம் எனும் வானத்துச்சுவை கிடைக்குமா?
வாழ்க்கையை "படம்" பார்ப்பவன்
நிழலை சமைத்து உண்பவன்.
வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவன்
இயற்கையை உண்டு களிப்பவன்.
வாழ்க்கையே வாழ்வதற்கு தான்.
மரணத்தை விரித்து படுக்கை போட்டு
மயானத்துக் கனவுகள் அல்ல வாழ்க்கை.
==============================================