அன்பெனும் நதியினிலே

அன்பெனும் நதியினிலே
****ஆனந்தக் குளியலிட்டுத்
துன்பத்தைக் கரைத்திடுவோம்
****தூய்மையுடன் பொலிவாவோம் !
பின்னாளில் வருந்தாமல்
****பிணக்குகளை உடன்களைவோம்
சென்றவற்றை மறந்துவிட்டு
****சிறப்பிப்போம் நல்லதையே !

முள்ளிருக்கும் வழியெங்கும்
****முன்னேறத் தடைபோடும்
தள்ளாடும் வாழ்க்கையிலே
****தடம்மாறிப் போகாமல்
உள்ளத்தில் அன்புடனே
****ஒற்றுமையாய்ப் பயணிப்போம்
கள்ளமின்றிப் பொறுப்புடனே
****கடமைகளைச் செய்வோமே !

அடுக்கடுக்காய் இன்னல்கள்
****அலையலையாய்த் தொடர்ந்தாலும்
துடுப்பாக நட்பிருக்க
****துயரின்றிக் கரைசேர்வோம்
படுகுழியில் வீழ்ந்தாலும்
****பரிவுடனே கைகொடுக்கும்
நடுநிலைமை மாறாமல்
****நட்பொன்றே துணைவருமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Oct-16, 4:07 pm)
பார்வை : 391

மேலே