தமிழனுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம்
One india news
ஸாரி பிரதமரே.. உங்களது சாயம் வெளுத்து விட்டது.. பொன்ராஜ் பொளேர்!
சென்னை: ஒரு பிரதமராக நடுநிலையுடன் செயல்பட நரேந்திர மோடி தவறி விட்டார். அவரது உண்மையான நிறம் தெரிந்து விட்டது என்று பொன்ராஜ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது தொடர்பாக அப்துல்கலாம் விஷன் இந்தியா அமைப்பின் மென்டார் மற்றும் ஆலோசகர் வி பொன்ராஜ் இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அவர் கூறியுள்ள கருத்து:
ஸாரி பிரதமர் ஸாரி பிரதமரே, ஒரு பிரதமராக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படத் தவறி விட்டீர்கள். காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்து 9 ஆண்டுகளாகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசால் அமைக்க முடியவில்லை. உச்சநீதிமன்றத்தால் அதை நிச்சயம் அமைக்க முடியும். நாங்கள் நம்புகிறோம்.
பிறகு எதற்கு பிரதமர் பிறகு எதற்கு நமக்கு பிரதமர் தேவை? நமக்கு எதற்கு மத்தியஅரசு தேவை? மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் மத்திய அரசு மத்தியஸ்தராக செயல்பட வேண்டும். கூட்டாட்சி மற்றும் ஜனநாயக கட்டமைப்பை மனதில் கொண்டு பிரச்சினைக்குரிய தீர்வை மத்திய அரசு காண வேண்டும். ஆனால் ஒரு பிரதமராக இதைச் செய்ய தவறி விட்ட நீங்கள், எங்களது நம்பிக்கையைத் தகர்த்து விட்டீர்கள்.
கலாம் சொன்னது என்ன டாக்டர் கலாம் சொல்வார் எந்த தனிநபரையும் விட, கட்சியை விட தேசம்தான் பெரிது, தேசம்தான் முக்கியம், தேசம்தான் உயர்ந்தது என்று. நீங்கள் ஒவ்வொரு முறையும் முழங்கும்போதும், தனி நபர்களை விட, கட்சிகளை விட நாடே உயர்ந்தது என்ற எண்ணம் வர வேண்டும் என்று பேசுவீர்கள். உண்மையிலேயே நீங்கள் உணர்ந்துதான் பேசுகிறீர்கள் என்றுதான் நாஙகள் நினைத்தோம். ஆனால் உங்களது பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தற்போது தெரிந்து விட்டது.
வலியுடன் எழுதுகிறேன் இதை நான் வலியுடன் எழுதுகிறேன். கட்சியின் நலனுக்காக செயல்படுவதில் தவறே இல்லைதான். தேர்தல் அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும். ஆனால் உங்களை வளர்ச்சியின் அடையாளமாக நாங்கள் பார்த்தோம். கோடிக்கணக்கான இளைஞர்கள் உங்களை நம்பினார்கள். நம்பிக்கை வைத்தார்கள். இதனால்தான் ஒட்டுமொத்த தேசமும் பாஜகவுக்காக வாக்களித்தது. உங்களைப் பிரதமராக தேர்வு செய்தது.
தமிழகம் உங்களை நம்பியது தமிழகமும் உங்களை நம்பியது. அதிமுகவுக்கு ஓட்டளித்தபோதும் கூட உங்களுக்காகவும் ஓட்டளித்தனர். அதிமுகவும், நீங்களும் இணைந்து மக்கள் நலனுக்காக செயல்படுவீர்கள் என மக்கள் நம்பினார்கள். தமிழகம் நம்பியது. ஆனால் எல்லோரும் சேர்ந்து மக்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டீர்கள்.
நாட்டுக்குப் பிரதமர் நீங்கள் இந்த நாட்டுக்கு பிரதமர். ஒட்டு மொத்த நாட்டின் இறையாண்மையைக் காக்க வேண்டியது உங்களது கடமை. ஆனால் கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே உங்களது நோக்கமாக உள்ளது. அதாவது நாட்டின் பிரதமர் என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி ஒரு பாஜக தலைவராக சுருங்கிப் போய் விட்டீர்கள்.
நம்பிக்கை போய் விட்டது உங்களது அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. எப்படி தமிழகத்திலும், சில மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளை மாநில முதல்வர்கள் மதிப்பதில்லையோ, அதேபோல நீங்கள் நடக்க ஆரம்பித்து விட்டீர்கள். மற்றவர்களை விட நான் வித்தியாசமானவன் இல்லை என்பதை காட்டி விட்டீர்கள்.
நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து விட்டீர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீங்கள் பணிந்து விட்டர்கள். இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழு வரை இழுத்துக் கொண்டு போய், உங்களது பதவிக்காலம் முடியும் வரை இதை கிடப்பில் போட முடியும். அடுத்த தேர்தலுக்கும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அரசு ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக உங்களது அரசு அதை சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என்பது அரசியல் சாசனப்படியிலானது. அதை அமைக்க மறுப்பது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். நீங்களே கூட்டாட்சித் தத்துவதை கட்டிக் காக்கத் தவறினால், இறையாண்மையை காக்க தவறினால் மற்றவர்களிடமிருந்து அதை எப்படி எதிர்பார்க்க முடியும்.
உங்களது சாயம் வெளுத்து விட்டது சுப்ரீம் கோர்ட்டில் உங்களது சாயம் இன்று வெளுத்து விட்டது. உங்களது உண்மையான கலர் தெரிந்து விட்டது. இப்படி இருந்தால் இனி ஜல்லிக்கட்டு, மின்சாரத்தை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வது, மீத்தேன், கெய்ல் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு தனது நிலையை தானே முடிவு செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். தனது நலனைக் காக்க தமிழ்நாடு அப்படித்தான் செயல்பட வேண்டி வரும்.
நீங்கள் உண்மையான பிரதமராக இருந்தால் நீங்கள் உண்மையிலேயே இந்த நாட்டின் பிரதமராக இருந்தால் நதிகளை தேசியமயமாக்குங்கள். ஆறுகளை இணையுங்கள். தேசிய நீர் வழிப் பாதைகளை அமையுங்கள். குறிப்பாக தென்னகத்தில் நீர் வழிப் பாதைகளை அமையுங்கள். மாறாக நீங்கள் பாஜக தலைவராக இருந்தால் உங்களுக்கும் உங்களது கட்சிக்கும், கர்நாடக வெற்றிக்கும் பயன் தரும் வகையிலான முடிவுகளை எடுங்கள். நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகள்தான் உங்களை பிரதமரா அல்லது ஒரு கட்சியின் தலைவரா என்பதை முடிவு செய்யும் என்று பொன்ராஜ் கூறியுள்ளார்.