சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்

டெல்லி: மத்திய அரசின் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனை திட்டத்தை விடவும் மிகப்பெரிய அளவில், இந்திய நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். காரணம்..? கழுத்தை நெரிக்கும் அளவிலான கடன்..!

இந்திய வங்கிகளில் டாப் 10 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் அளவு மட்டும் 5,00,000 கோடி ரூபாயாகும். இந்தப் பத்து நிறுவனங்களில் ரிலையன்ஸ் குழுமங்கள் (அனில் அம்பானி, முகேஷ் அம்பானி), அதானி குழுமம், எஸ்ஸார் குழுமம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் வராக்கடன் அளவு வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது, இதனை மேலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மொத்த நாடும் திவாலாக வேண்டியது தான் எனக் கூறுகிறது, ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் சாட்டை அடி..!

இந்திய வங்கிகளில் தற்போது இருக்கும் வராக் கடன் மற்றும் அதிகளவிலான கார்ப்பரேட் கடன் பிரச்சனையின் வீரியத்தைச் சுதாரித்துக் கொண்ட ஆர்பிஐ, கார்ப்பரேட் கடன்கள் மீது சாட்டையைச் சுழற்றத் துவங்கியுள்ளது.

விஜய் மல்லையா..

9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு லண்டனில் உல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வரும் விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார். இதன் வெளிப்பாடே கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான சாட்டை அடி.

சொத்துக்கள்

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கவும் வசூல் செய்யவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தை ஆட்டும் வராக் கடன் அளவும் அதிகளவில் குறையும்.

ரிலையன்ஸ், அதானி குழுமம், எஸ்ஸார் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அளித்த கடனை வசூல் செய்ய முடியாத பட்சத்தில் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவும் வங்கிகளுக்குத் தற்போது ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பயம்

அரசு சொத்துகளை முடக்கிவிடுமோ என்ற பயத்திலேயே இந்திய நிறுவனங்கள் தற்போது சொத்துக்களை விற்பனை செய்து கடனைத் தீர்ப்போம் என முடிவு செய்துள்ளது.

இதனால் அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

சரி யார் யார் எவ்வளவு கடன் வாங்கி இருக்காங்க தெரியுமா..?

முகேஷ் அம்பானி

அதிகக் கடன் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் 1.87 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

1.15 லட்சம் கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அறிமுகம் மற்றும் வளர்ச்சியை எதிர்நோக்கி வங்கிகள் இவரைக் கடனை தொகையைத் திருப்பிச் செலுத்த நிர்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானி

2வது இடம் வேறயாருக்கும் இல்ல முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கே கிடைத்துள்ளது.

1,21,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள அனில் அம்பானி தனது கடன் சுமையைத் தீர்க்க 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெலிகாம் டவர், பைபர் ஆப்டிக், சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளார்.

எஸ்ஸார் குழுமம்

எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் மிகப்பெரிய வர்த்தகத்தை நடத்தி வரும் எஸ்ஸார் குழுமம் 1,01,461 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது.

இந்நிலையில் இக்குழுமத்தின் நிறுவனர்களான சஷி மற்றும் ரவி ரூயா ஆகியோர் புதிய முதலீட்டாளர்களைப் பெறுவதன் மூலம் கூடுதல் நிதியையும், வங்கு விற்பனையின் மூலம் 25,000 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

கெளதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி 96,031 கோடி ரூபாய் அளவிலான கடனில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வந்த அதானி, கடந்த சில மாதங்களாகப் பல வகையில் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

இதற்கு முக்கியக் காரணம் கெளதம் அதானி மற்றும் பிரதமர் மோடிக்கும் மத்தியிலான கருத்து வேறுபாடு எனக் கூறப்படுகிறது. மோடி பிரதமராகப் பதவி ஏற்புக்கு முன் கெளதம் அதானியும் நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ஜேய்பி குழுமம்

மனோஜ் கவுர் தலைமையிலான ஜேய்பி குழுமம் இந்திய வங்கிகளில் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் சாட்டை அடிக்குப் பயந்து அல்ட்ராடெக் நிறுவனத்தில் இருக்கும் 15,900 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் மனோஜ் கவுர்.

GMR குரூப்

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தைச் செய்து வரும் GMR குரூப் தலைவர் ஜி.எம்.ராவ் 42,349 கோடி ரூபாய் கடனை பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்.

லேன்கோ குரூப்

நாட்டின் மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் லேன்கோ குரூப் நிறுவனத்தின் 47,102 கோடி ரூபாய் கடனை தீர்க்க உடுப்பியில் உள்ள 6,300 கோடி மதிப்புள்ள மின் உற்பத்தி தளத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

வீடியோகான்

இந்திய வங்கிகளில் 39,600 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் குழுமம் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிவாயு தளங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

டாடா ஸ்டீல்

சர்வதேச நாடுகளில் ஸ்டீல் உற்பத்தியை மையமாக வைத்து உருவாகப்பட்ட டாடா ஸ்டீல் நிறுவனம் 10.7 பில்லியன் டாலர் கடனில் மிதக்கிறது. பிரிட்டனில் உள்ள தொழிற்சாலைகளை விற்பனை செய்ததன் மூலம் சுமார் 2 பில்லியன் டாலர் தொகை பெற்றுள்ளது.

இதனைக் கொண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கடன் அளவைக் குறைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

பிற முக்கிய நிறுவனங்கள்

GVK குரூப் (ரூ.34,000 கோடி),
ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் (ரூ.46,000 கோடி),
டிஎல்எப் லிமிடெட், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், சகாரா குழுமம், கிங்பிஷர், சுஸ்லான் போன்ற பல நிறுவனங்கள் இப்பட்டியலில் இறங்கியுள்ளது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Oct-16, 10:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

மேலே