அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அங்குசம்,
வார்த்தை : அங்குசம்,
பொருள் : 1.யானையைக்கட்டுபடுத்த உதவும் பாகனின் இரும்பிலானக் கருவி; யானைத்தோட்டி;இருப்பு முட்கோல்;
2.வாழை
குறுப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
இந்த ஆயுதத்தினை இந்து தொன்மவியலில் எண்ணற்ற கடவுள்கள் வைத்துள்ளார்கள். விநாயகர், பைரவர், சதாசிவ மூர்த்தி, துர்க்கை ஆகியோர் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார்கள்.
2
2.1 அஞ்சு கரமும் *அங்குச* பாசமும்
2.2 ஆறா தாரத்(து) *அங்குச* நிலையும்
* அங்குசத்தால் யானையை அடக்கும் பாகனைப்போல், பிராணனை இடை பிங்கலை வழி விரயம் செய்யாமல், ஆறு ஆதார வழியே செல்லுமாறு அடக்குகின்றனர் யோகியர்
விநாயகர் அகவல் , ஔவையார்
3.
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு *அங்குச* பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் ...
* திருப்புகழ் - *அஞ்சன* வேல்விழி இட்டு (திருவானைக்கா)
யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,
4.
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் *அங்குசம்*சேர் கையும் - தெறுபோர்...
* திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
5.
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் *அஞ்செழுத் தங்குச* மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி யாதி அகம்புக லாமே.
* திருமந்திரம் - நான்காம் தந்திரம் , சித்த ஆகமம்
காடாகிய தொண்ணூற்றாறு மெய்க்கூட்டத்தாலாகிய இவ் வுடம்பினுள் ஐம்புல யானைகள் தம் மனம் போல் திரிகின்றன. அவற்றைத் தடுத்து நேர்வழியிற் செலுத்த வேண்டுமானால் தோட்டியாகிய கருவி வேண்டும். அக் கருவியே சிவயநம என்னும் திருவைந்தெழுத்தாகும். அவ்வைந்தெழுத்தை இடையறாது நாடுவார்க்குத் திருவைந்தெழுத்திற்கு முதல்வனாகிய சிவபெருமானின் ஆதி என்று ஓதப்பெறும் திருவருளாற்றலின் திருவடி புகுதலாகும்
6.
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் *அங்குச* மாமே .
* திருமந்திரம் - நான்காம் தந்திரம் - திருவம்பலச் சக்கரம்
மக்கட் பிறப்பு எடுத்தோர் ஒருதலையாக வணங் குதற்குரிய இத்தந்திரத்தில் தொடக்கம் முதலாகப் பலவிடத்தும் கூறி, இங்கும் கூறப்பட்ட ஓரெழுத்தாகிய பிரணவம், மேற்கூறியவாறு விளங்கி நிற்கும் நிலையைப் பெறுவதற்கு, உயிர்ப்புக்கு இன்றியமை யாததாகிய அம்சமந்திரம் முதலிய பிராணாயாம மந்திரங்களே பற்றுக் கோடாகும். ஆகவே, ஆதார பங்கயங்களில் பிரணவத்தை மேற்கூறிய வாறு குற்றமறக் காணவேண்டின், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருவழிப்படுத்துவனவாகும்
#அரிஷ்டநேமி