அழு

கண்ணீர்!
அது உணர்ச்சிகள் உமிழும் மூத்திரம்!
கழிவகற்று அடிக்கடி அழுதே - மனம்
உயிர்பெற்று மலரும் புதிதாய்!

அழுதால் அவ்வளவு கேவலமா?
இல்லை!
அழுதேதான் நாம் பிறந்தோம்!
பிறக்கையில் நாம் அழுதோம்!
பிரிகையில் பிறர் அழுவார்!

உண்ட உணவுக்கு
குடலிருக்கு!
உள் உருளும் உளைச்சலுக்கு
தேடலெதற்கு?
அழு!

அழு!
உன்னைப் பழுது பார்!
உனக்குள் குளித்துக் கொள்!

கழுவு மனப் பாத்திரத்தை!
சுத்தம் செய், அதில் புதுப்பொருள் வைக்க!
திமிராய் இருந்து
அழாமல் இருந்துவிடாதே
வைத்த புதுப் பொருளும் கெட்டுவிடும்!

உள் பட்ட காயத்தின்
கிரிமி நாசினி அழுகை!
அளவாய் அழு!
மிகையானால் எரியும்!

பெண் அழுவாள்!
அது முடிவெடுக்கப்பட்டது
ஆண் அழ வேண்டும்!
முடிவெடு!

அழுதுவிட்டு நிமிர்ந்து பார்!
மனத்தின் மூக்குக் கண்ணாடி தெளிவாகும்!
பார்ப்பவை பிழையில்லாமல் புரியும்!

(கண்)நீரின்றி அமையாது உலகு!

- ஒளி முருகவேள்

எழுதியவர் : ஒளி முருகவேள் (10-Oct-16, 1:34 pm)
சேர்த்தது : ஒளி முருகவேள்
பார்வை : 1466

மேலே