இரவுப் பயணம்

மேகத்தின்
மோக இணைப்பில்
மின்னலிட்ட
ஓர் பின்னிரவில்
தூரத்து இடிமுழக்க ஓசையூடே
இரட்டை மாட்டுவண்டிப் பயணம்
என் வியர்வையில் குளித்த
காய்கறிகளோடு..!.

சில்மழைச் சாரலில்
இரவுப் பின்னணியில்
என் விவசாய வாழ்வின்
வறுமைக் கோலங்களை
அழித்து அழித்து
வரைந்து பார்த்துக் கொண்டிருந்தான்
மின்னல் தூரிகை கொண்டு
வான ஓவியன்...

உயரத்திலிருந்து வரைந்து பார்க்கும்
அவனுக்கெப்படி தெரியப்போகிறது
அடிமட்டத்தில் இருக்கும்
உழவன் என்
வாழ்வியல் வேதனைகளும்,
அடைமழையே
தோற்றுப் போய்விடும்
எனது விழிநீர் சோதனைகளும்...?

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (17-Oct-16, 8:17 am)
பார்வை : 114

மேலே