கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ- கட்டுரை- கவிஜி

மீண்டும் மீண்டும் இசைராஜாவின் ஜன்னல்களையே தட்டுகிறேன்.. அல்லது உடைக்கிறேன்.. அத்தனை மூர்க்கமாக உள் வந்து வண்டாகி பூ சிந்துகிறது.......ஜன்னல் தாண்டி வரும் இசையின் தென்றல். இனி அதிசயிக்க ஒன்றுமில்லைதான்... அற்புத நிகழ்வாகி விட்ட அந்த மனிதனின் ஆழ்மனதை மிக நெருக்கமாக உணர்ந்த தருணங்களை நான் புரிந்து கொள்ளும், எப்போதாவது வாய்க்கும் நேரங்களை உணர்வுகளை இப்படி வரி வரியாய் பதிவு செய்து விடுகிறேன்....அல்லது பதிவாகி விடுகிறேன்... வரிகள் செய்து.

என் பள்ளி நாட்களில் ஒளியும் ஒலியும் பார்த்து வளர்ந்த அற்புத தருணங்களை மீண்டும் மீண்டும் நானே நவீனத்தில் செய்து கொள்ளும் வடிகால் முறையெனவே நம்புகிறேன்.... அந்த வகையில் நேற்றிரவு பாடல்களால் நிரம்பித் தவித்த பொழுதில்... இந்த பாடலை பார்க்க...கேட்க வாய்த்தது. பின்னிரவு தனிமைக்குள்... என்னிரவைத் தேடும் எனக்குள் ஒரு மென் காதலியாய் மெல்ல மெல்ல உள் நுழைந்து கொண்டிருந்த வரிகளை......அதன் ஆடை கலைத்த இசையை நான் மிக வேகமாக புணர தொடங்கினேன். புணர்தல் ஒன்றுமில்லை... உணர்தல்.

நானற்ற நானுக்குள் உச்சி செய்த நடுக்கமென என்னை இல்லாமலே செய்து விட்ட இந்த பாடலின் நதி ஓட்டத்தில்....என் கரைகள் முழுக்க பரவசம். இசைக்கும் வரிக்கும் இடையே போதை கொஞ்சம் போதி கொஞ்சம் கலந்து தரும் காதலை இன்னும் கொஞ்சம் ஊற்றி களித்திருக்கும் யாக நிலைக்குள் மோக விதை செய்து மிக வேகமாக அவளாகி நீருக்குள்ளிருந்து முளைத்து வந்த முலைகளின்
பூரிப்பென கண்களால் நீந்துகிறேன்...கொஞ்சம் கவிதையாகவும்.

ஆறாவது முறை பார்த்த போது ஏழாவது முறை கேட்டு விட்டது... வரிகள்.

"ஆலோலங்கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி
விளையாடிடக் கூடாதடி கூட்டுக்காரி"

"ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி"

"நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யயோ!!!
செல்லக்கிளி சிந்து படிக்கும் அய்யோ அய்யயோ!!"

தலைவனும் தலைவியும் தனித்திருக்கும் நேரம்... ஆறு மலை... காடு. காதல்....பொங்கி வழியும் தேகம், தாங்க முடியாத தீர்வுக்குள் வந்து வந்து போகும் மோக நிலை. கண்கள் பேச.. காதல் கூச.. இசைராஜா... கண்கள் மூடிக்கொண்டு அவர்களோடு இதயம் திறந்து பேசுகிறார். கூட்டுக்காரி,வம்புக்காரி, குறும்புக்காரி.. என கொஞ்சித் தவிக்கும் தலைவனின்... வார்த்தைகளில்.... மெல்ல முன்னேறி விடும்... காதலின் காட்சிகள்.... கிளி வந்து தங்கும் தோப்பாகி விடுகின்றது. ஆற்றில் குளிக்கும் தென்றல் என அவளை சொல்லும் போது கணினித் திரை தாண்டி சில துளி என் மீது விழுந்ததாகவே கற்பனை செய்து கொண்டேன். ஆசை யாரை விட்டது... என்னையும் விட. தபு கொஞ்சம் அழகு தான்..... மோகன்லாலாகி விட்ட தருணத்தை இச்சையாக்கி கண்கள் சிமிட்டிய போது ப்ரியதர்சன் கேமரா வழியாக "கொன்னு" என்று கூறியது பார்க்க முடிந்து, மீண்டும் பாடலுக்குள் வந்து விழுந்தேன்.

அவனென்ற தவம் நெஞ்சினில் தும்பி பறக்க செய்கிறது. அற்புதமான ஒரு பற்றின் புது வகை கற்பனையை சிறகடிக்க விட்டதில்... சிறகே இங்கு பிரதானம். அதன் திசையெங்கும் என் அறையின் சிறுவானம். செல்லக்கிளி சிந்து படிக்கும் புதுக்கவிதையின் நவீனத்துவத்துள்... காதலும் காதலும்... கைகோர்த்து.... அவர்களாகி விடுகிறார்கள். எட்டிப் பார்க்கும் ரகசியத்தில் நாணுகிறேன் நானும். காதல் பூணுகிறேன்...நிமிர்கிறது ஊனும்.


"கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ"
"துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ"

அவள் கண்ணில் நீந்திய இதயம் கடல் கடந்து விட்டது என்று கூறுகிறான்... சற்று சிந்திக்கிறேன். ஆம் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்ல முடியும்... பால்மயக்கத்தின் நிலை தாண்டிய பருவத்தின் தெளிவுக்குள் காதலை அள்ளி அள்ளி தருவதைத் தவிர யாது செய்யும்....என அடுத்த வரியும் கூட சேர்ந்து கொண்டது.....துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ?

"காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலா பெண்ணே
தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன் ஊஞ்சல் ஆடி வா
வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே"

ஈர நிலா பெண்ணே.... எனும் போது பாட்டியின் கதைகளில் வரும் நிலாக்களில்.. நானும் கொஞ்சம் சொட்டிக் கொண்டே நீர் செய்கிறேன்... என்று வானம் துளைத்து விடுகிறது என் பிரமாண்ட தனிமைகள். 'நம் காதல்களில் கீதங்களில் வானம் வளைப்பேன்' என்று கூறும் தலைவனின் தீர்க்கத்தில் ஒற்றைக் கனவெனவே அவளின் பொன் கூந்தல் கையேந்தும் தருணத்தை படம் பிடித்து விட்ட யோக நிலைக்குள் அறிவுமதி நின்று கொண்டு புன்னகைப்பதை சிறுபிள்ளையின் விழிகளோடு திருதிருவென கூட துருதுருவென வீணையாகிறேன். வாசிப்பவன்.....உடைத்தாலும் இசைக்கும் திசையில் காற்றாகி கலைந்தோட துவங்குகிறேன்.....தெம்மாங்கு வரிகளின் வழுக்கல்களில் ஏறிக் கொண்டே இறங்கிக் கொண்டிருக்கும் நான்.

"கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்க போகலாமோ
பூ விழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய் தானோ
ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா புதுக் காதல் குறுந்தொகையா"

கனவைக் கொடுத்து விட்டு உறக்கம் கேட்கும் காதலை பார்த்து கொஞ்சம் கொஞ்சிடவும் தோன்றுதே.......கவிதை விழித்துக் கொள்ளும் நேரத்தில் உறங்க போவது சரியா என்று பதில் கேள்வி கேட்டு பதிலே கேள்வியாய் நிற்பதில் பதிலா கேள்வியா.....? தானாக சிரித்துக் கொண்டேன். சிரிப்பை எப்படி எழுதுவது....? யோசிக்கிறேன். திரும்ப கேட்பதில்... விரத தாபம்... வினோத தீபம்... பற்றிக் கொள்வதை மிக நுண்ணிய நுட்பத்தில்.... மின்மினி பூச்சிகளின் பாஷைகளில் செவி தாண்டும் முணங்கல்களென வடித்திருக்கும் வரியை வெறிக்க பார்க்கிறேன்.... இசை நுரைக்க கேட்கிறேன்......

நிலாவின் பிள்ளை நீயோ எனக் கேட்டு விட்டு ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா அன்பே நீ வா வா புதுக் காதல் குறுந்தொகையா எனக் கேட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டு நீளும் அவர்களின் காதலின் தனிமையில்... தமிழும்.. நதியாகி அவர்களை நனைத்தும் நனைந்தும் கடந்து கொண்டிருக்கிறது. புதுக் காதல் குறுந்தொகையாக வா பெண்ணே என அழைப்பதில்....அவர்களின் உலகத்தில்... ஆயிரம், லட்சம், கோடி.. தாழ்பாள்கள்.. தானாக மூடிக் கொள்கிறது..... மெல்ல ஒற்றை விழி திறந்து தேடுகிறது.... கணினி.

பூ விழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்- அது ஆதி ரகசியமென அவர்களாகிறது.

இன்னும் இன்னும் காலம் கடக்காத அதே ஆலோலங்கிளி...இசை ராஜாவின் மெட்டின், தாளத்தோடு.....சுருதி சேர்த்துக் கொண்டே இருக்கிறது...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Oct-16, 8:13 pm)
பார்வை : 186

மேலே