அமுதாய் வருவானவன்
அன்னமே தூதுசென்(று) அந்திப் பொழுதினில்
மன்னன் மனமறிந்து வா,விரைந்து!- துன்பத்தில்
வாடும் நிலைதனைச்சொல் வாய்விட்டு! என்னுடன்
கூடும்நன் னாளைக் குறி.
தப்பென்ன நீயேசொல்! தங்கமாய்த் தாங்கினேன்
அப்படியும் குற்றமென்றா லாகுமோ? - அப்பப்பா !
போதுமிவ் வாழ்வெனப் போராடி நொந்துவிட்டேன்
ஏதுநான் செய்தேன் எதிர்த்து ?
இமைமூட வில்லை இளைத்திட்டா ளென்றே
அமைதியாய்க் கூறி அமர்வாய் !- குமைந்து
குமுறுமென் நெஞ்சக் கொதிப்பைத் தணிக்க
அமுதாய் வருவா னவன் .
வாராமல் போனானேல் மாய்த்துக்கொள் வேனுயிரைத்
தீராப் பழிச்சொல்லும் சேர்ந்திடும்! - வீராப்பு
வேண்டா மெனவுரைத்து வேண்டி விரும்பியே
மீண்டுவரச் செய்வாய் விரைந்து.
வெண்ணிற அன்னமே! வெட்கத்தை விட்டுத்தான்
பெண்மணி நானும் பிதற்றுகிறேன்! - கண்ணின்
மணியென நம்பி மனந்திறந்தேன், நீயும்
துணிவுடன் தீர்ப்பாய் துயர்.