நதிக்கரை ஞாபகங்கள்

அந்த நதிக்கரைப் புளியமரக் கொம்பில்
தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் இன்னமும்
ஆடிக்கொண்டிருக்கிறது உன் ஞாபகம்.

கொள்ளையர்கள் அகழ்ந்தெடுத்தப் பின்னாலும்
நதியின் அடியில் குவியும் மணலாய்
சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது
நம் காதலின் துயரம் .

விதியின் மரக்கிளையில் பிரிந்துநிற்கும்
ஏகாந்தப் பறவை தன் ஞாபக அலகுகளால்
கொத்துகின்ற காலமெல்லாம்
துடிக்கிறது இதயப் புழு,

உன்னவனோடு நீ அக்கரையிலும்
என்னவளோடு நான் இக்கரையிலும்
குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் நடக்க
யாருக்கும் சொல்லாமல்
நதிநீராய் மௌனமாய் அழுதோடும்
நம் காதல் மட்டும் அனாதையாய்..

வாழ்வை வெறுத்துத் தன்னில் வீழ்ந்து
தற்கொலை செய்து கொண்டவர்களைக்க்கூட
கரையேற்றி விடுகின்ற நதி,
சமூகத்தின் ஏற்றத்தாழ்வு கரங்கள் தள்ளிவிட்ட
நம் காதல் குழந்தையை மட்டும்
திருப்பித்தர அக்கறைக் காட்ட..வேயில்லை
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Oct-16, 7:28 am)
பார்வை : 115

மேலே