ஆணவம்
பிறந்து, விழுந்து
புவி தொட்ட விலங்கு
எழுந்து நடக்கையில்,
பத்துத் திங்கள் கடந்தபின்
எடுத்தடி வைக்கும்
மனிதக் குழந்தையைக்
காணும்போதும்
இரைதேட கற்கும்
விலங்கினங்கள்—என்றும்
தோற்காத நிலையில்,
மாந்தரில் சிலர்
தோற்று வழியற்று
வாழும் மனிதரை
பார்க்கும்போதும்
ஊன் கொடுத்து
பழக்கும் விலங்குகள்
தீங்கிழைக்காதிருக்கையில்,
உணவும் பாசமும்
ஊட்டி வளர்த்தாலும்
மனிதன் நன்றி மறந்து
கொலை செய்யும்போதும்
மூன்றறிவு கொண்ட
சிறு எறும்புக்கு
முன்கூட்டி மழை வருவது
அறிந்திருக்கையில்,
மனிதனுக்கு திடமாகச்
சொல்ல முடியாமல்
தவிக்கின்றபோதும்
விலங்குகளெல்லாம்
எந்த வித்ததில்
தாழ்ந்துபோயின?
இருந்தாலும் பெருமையாய்
சொல்லிக்கொள்கிறோம்
மனித இனத்துக்கு
ஆறறிவென்று.