“நதிகளின் நலம்

.

இந்தியாவில் ஓடும் நதிகளையெல்லாம்,
நலம் விசாரித்துவர நடைபயணம் மேற்கொண்டேன்!
முதலில் காவிரியிலிருந்து துவங்கலாமென்றால் – தற்சமயம்
காவிரியின் நிலவரம் கலவரமாக இருப்பதால்
மூத்த நதியான சிந்துவிலிருந்து பயணத்தை துவங்கினேன்!
ஒவ்வொரு நதியாக நலம் விசாரித்துக்கொண்டே வரும்போது
பிரம்மபுத்திரா-விடம் மட்டும் ஒரு வினா தொடுத்தேன்!
“என்ன பிரம்மபுத்திரா! நாட்டில் பாயும் பெரும்பாலான நதிகள்
பெண்களின் பெயர்களைத்தாங்கி ஓடுகின்றன..! நீஒருவன் மட்டுமே
ஆணின் பெயரைத்தாங்கி ஓடுகிறாய்..! உனக்கது பொறாமையாக இல்லையா?”
சீறீப்பாயும் பிரம்மாபுத்திரா சிரித்துக்கொண்டேச் சொன்னது….
“காதலிகளைக்கண்டு யாராவது பொறாமைப் படுவார்களா…!”
“எனக்கு இத்தனை காதலிகளா..? என்று எனக்கே பிரம்மிப்பாக உள்ளது..!”
“அனுபவி - பிரம்மபுத்திரா! அனுபவி!” என்று பிரம்மாவின் மகனான
பிரம்மபுத்திராவை வாழ்த்திவிட்டு கடைசியாக தலைக்காவிரி வந்தடைந்தேன்!
“எங்கள் காவிரிப்பூம்பட்டிணத்தை கடைசியாக அன்பு முத்தமிட்டு
வங்கக்கடலில் தஞ்சம்புகும் எங்கள் தங்கநிகர் காவிரியே நலமா..?”
“தேசத்தில் ஓடும் என்தோழமை நதிகளையெல்லாம் நலம் விசாரித்து வந்த
உன் நல்லநோக்கம் நிறைவேறியமைக்கு எனது வாழ்த்துக்கள்!” – என்ற காவிரி
“நான் நலமா என்று மட்டும் கேட்காதே; “ஏனெனில் இரு மாநிலத்தாரும்
கடைசிவரை என்னை நலமாக இருக்க விடப்போவதில்லை..!”- ஆளும்வர்க்கம்
நாட்டிலுள்ள நதிகளையெல்லாம் தேசியமயமாக்க போவதுமில்லை..!”-என்னை
நலம் விசாரித்ததுப்போதும், நீ முதலில் நலமாக வீடுபோய் சேரு..! ஏனெனில்
காவிரி வெறியர்கள் வழிநெடுகிலும் கொலைவெறியோடு அலைகிறார்களாம்..!

எழுதியவர் : சாய்மாறன் (4-Nov-16, 1:16 pm)
பார்வை : 109

மேலே