சொன்னாளே ஒரு சொல்லு

​கிழக்காலே சூரியனும் உதிச்சாச்சு
தெருவெலாம் கோலம் போட்டாச்சு
உழவரெலாம் வயலுக்கு கிளம்பிட்டாக
கிழவரெலாம் திண்ணைக்கு வந்திட்டாக !

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்றாங்க
பெண்டுகள் நீரெடுக்க நடக்கறாங்க
வாண்டுகள் வீதியை மைதானமாக்கி
வாலில்லா மந்திகளாய் ஓடறாங்க !

அடுப்படியில் உலையும் கொதித்திட
தடுப்பிலா அரிசியும் மேலெழுந்திட
விடுப்பெடுத்து ஊருக்கு வந்தவன்
மடுக்கரை நோக்கி நடந்திட்டான் !

கண்குளிர ரசித்திட்டான் இயற்கையை
இடையிடையே கண்டான் கன்னிகளை !
சிலிர்த்திட்ட நெஞ்சால் குளிர்ந்திட்டான்
சில்லிட்ட உள்ளத்தால் மகிழ்ந்திட்டான் !

உலாவரும் தேரழகாய் எதிர்வந்தாள்
கலாரசிகன் கண்டதும் வழிந்திட்டான் !
மயங்கிட்டான் மதுவருந்திய மனிதனாய்
தயங்கியபடி கேட்டிட்டான் அவள்பெயரை !

காதலுற்றான் கண்டதுமே கண்ணனவன்
சம்மதமறிய சாய்ந்துநின்றான் மரத்தினில் !
சொன்னாளே ஒருசொல்லும் உடனடியாய்
கண்ணாளா எனக்குண்டு கணவனென்றாள் !

அதிர்ந்து நின்றான் உதிர்த்திட்ட பதில்கேட்டு
குனிந்திட்ட தலையுடன் கூறினான் மன்னித்திடு !
கதையல்ல நிஜமிதுவும் புரிந்திடுக நீங்களும்
கனவில் வந்ததை கவிதையாய் வடித்தேன் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Nov-16, 10:12 pm)
பார்வை : 236

மேலே