கிராமத்து நினைவுகள் நினைவில் மாடு

தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாத மாடு ஒன்றை மீட்புக் குழுவினர் வெளியில் எடுக்கும் வீடியோ ஒன்று பார்த்தேன். அதைப் பார்த்ததும் நம்ம வீட்டில் மாடு வளர்த்தது... கோழி வளர்த்தது... நாய் வளர்த்தது... ஆடு வளர்த்தது... கிளி வளர்த்தது... மைனா வளர்த்தது... புறா வளர்த்தது... என வளர்த்தது எல்லாம் ஞாபகத்தில் வந்தது. அதெல்லாம் எப்படி மறக்க முடியும்...?

எங்க வீட்டில் ஆரம்ப காலத்தில் எருமை மாடுதான்... எங்க பிச்சைக்குட்டி வாத்தியார்.... ஏராம்மாடு... எராம்மாடுன்னுதான் திட்டுவாரு... எருமை மாடுன்னு திட்டமாட்டாரு... எங்க ஊருல பெரும்பாலான வீட்டில் எருமை மாடுதான் வளர்த்தாங்க... வயல் வேலைகளுக்காக காளை மாடு வீட்டுக்கு ஒரு ஜோடி கிடக்கும்... கூட்டு வண்டி, மொட்டை வண்டி ஊரில் சிலரின் வீட்டில் இருந்தது. எருமை மாடெல்லாம் நாம பொறக்கும் போது வீட்டில் இருந்தன... அதுவும் எங்க வீட்டில் பிறந்து வளர்ந்த மாடு... நரை எருமை... இவுகதான் தலைவர்... அவருக்குப் பின்னே அவரின் மகள்கள்... பேத்திகள்... வாரிசாய்... மனிதர்கள் பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்லி ஆஸ்திக்கு மட்டும் போதும்ன்னு முடிவெடுத்து இப்போ பொண்ணு கிடைக்காம அலையிற நிலை ஆயிப்போச்சு,,, ஆனா மாடுகளில் பெண் மாட்டுக்கு மட்டுமே மவுசு... ஆண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் விற்றுவிடுவதுண்டு... அப்படித்தான் ஆண் வாரிசுகள் விற்கப்பட பெண் வாரிசுகள் கோலோச்சினார்கள்.

அப்புறம் விவசாய காலத்தில் எருமை மாடுகளை பார்ப்பதில் சிரமம் இருக்கு என்று... ஆமாம் காணாமல் போனால் வீடு திரும்ப நாலைந்து நாளாகும்... தேடித்தேடி அலைந்து முள்குத்தி... எப்படிக் கஷ்டப்பட்டுட்டு வந்தாலும் எங்கம்மா ஒரு மாடு பாத்துக்க முடியலைன்னு வெளுத்துக் கட்டிரும்... அதுக்காக வெளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு மாடு மேய்ச்சாலும் சில நேரங்கள் காணாமல் போவது சகஜம்தானே... அதுவும் ரெண்டு மூணு பேருவிட்டு மாடு காணாமல் பொயிட்டா சேர்ந்து தேடலாம்ல்ல... சரி எருமை மாடுகள் வேண்டான்னுட்டு எல்லாத்தையும் வித்துட்டு... எங்க வெள்ளச்சி மொதக்கொண்டு எல்லாம் விற்றப்போ எல்லோரும் அழுகை... அது ஒரு கதை... சரி விடுங்க... அப்புறம் பசு மாடு வாங்கி... கடைகளுக்கு பால் கொடுத்து வந்தோம். அப்புறம் அம்மா வீடுகளுக்கு பால் ஊத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் வீட்டில் பசுமாடுகள்தான்.... இப்ப எதுவும் இல்லை... மாட்டுக்கசாலை... மாட்டுத் தொட்டி (குலுதாலி)... வைக்கோல் படப்பு... எல்லாம் வெறுமையாய்...

அதுவும் மாடு கன்று போட்டதும்... அந்தக் கன்னுக்குட்டியை வீட்டுக்குள் சாக்குப் போட்டு கட்டி வைத்து அதை கட்டிப் பிடித்துக் கொண்டு விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா என்ன..? தினமும் காலையில் கன்றுக்குட்டியை குளியாட்டி மஞ்சள் வைத்து... பொட்டு வைத்து... வீட்டில் கட்டி வைப்பதற்குள் அது கயிற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் அழகே அழகுதான்...

இப்ப இதை எதுக்கு எழுத ஆரம்பித்தேன்னா... சில நேரங்களில் பசு மாட்டுக்கு உடம்பு முடியாமல் வந்து எழ முடியாது தவிக்கும்... ஊசி போட்டு... வாழைப்பழத்தில் மாத்திரை வைத்துக் கொடுத்து... நாக்கைப் பிடித்து வெளியில் இழுத்து மருந்து ஊற்றி... எல்லாம் செய்தும் எழ முடியாமல் தவிக்கும்... அப்போ நாலைந்து பேர் இருபுறமும் நின்று மாட்டின் வயிற்றுப் பகுதியில் உலக்கை போட்டு மெல்லத் தூக்கி நிறுத்தி கொஞ்ச நேரம் பிடித்து வைத்திருக்க மீண்டும் கீழே விழுந்து விடும்... பார்க்க பரிதாபமாக இருக்கும்... சில மாடுகள் அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டாலும் பல மாடுகள் மரணத்தைத்தான் தழுவும்... பின்னர் நாலு காலையும் கட்டி... இடையில் கம்பு சொருகி, தூக்கிக் கொண்டு போய் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்... அப்படி இல்லாமல் சாக்கடைத் தண்ணீருக்குள் மாட்டி வெளியில் வர முடியாமல் நின்ற மாட்டை கயிறு கட்டி அந்த தாழ்வான பகுதிக்குள் இறங்கி கிரேன் மூலமாக அந்த வீடியோ பார்க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் விளையாண்ட எங்க வீட்டில் இப்போ கால மாற்றத்தில் எதுவும் இல்லை... எல்லாம் போயாச்சு... நாங்கள் பிறந்து வளர்ந்த வீடும் இடிச்சாச்சு... இப்போ அந்த வீட்டின் பின்னே இருந்த கசாலை மட்டுமே உயிர்ப்போடு... எங்க விஷாலுக்கு ஆடு, மாடு, கோழி மீது அலாதிப் பிரியம்... அவனுக்காகவே எங்க வீட்டில் இப்போ கோழி வளர்க்கிறோம்... டவுனுக்குள்ள எதுக்கு கோழி வளக்குறீங்க...? போர்டிகோ, மாடிப்படி எல்லாம் நாசம் பண்ணி வைக்கிது பாருங்க... என உறவுகள் எல்லாம் சொன்னாலும்... பள்ளி விட்டு வந்ததும் செவலக்கோழி முட்டை இட்டுச்சா... எடுத்து வச்சீங்களா... எங்கே சேவலைக் காணோம் என அவன் கேட்டு இரவு கோழிகளை அடைத்துவிட்டு வருவதில் அவனுக்கு இருக்கும் சந்தோஷத்துக்காகவே எங்கள் வீட்டில் கோழிகள் வாசம் செய்கின்றன.

-'பரிவை' சே.குமார்,

எழுதியவர் : சே.குமார் (12-Nov-16, 11:21 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 259

சிறந்த கட்டுரைகள்

மேலே