சிக்கு புக்கு ரயிலே - புகை புகை உயிருக்குப் பகை பகை 

சிக்கு புக்கு ரயிலே - 
புகை புகை 
உயிருக்குப் பகை பகை !
******************************** 

சிக்கு புக்கு 
சிக்கு புக்கு ரயிலே இது 
சீவன் அனுப்பும் மெயிலே 
உண்மை உணர்ந்தால் எழிலே 
உணர மறுத்தால் உயிலே! 

புகை புகையப் புகைக்கும் 
வகை பல உண்டு 
பகை என்று கண்டு 
திகைத்து விட்டவரும் உண்டு 

புகைத்தல் மறக்க மறுத்தோர் 
புகை மிகை புகைப்பார் 
தகைமை தானே இழப்பார் 
நகைப்புக்கு இடம் வகுப்பார். 

புகைக்கத் தூண்டி 
வெறி ஊட்டும் 
புகைத்தால் நெஞ்சில் 
எரியூட்டும்
பித்து தலைக்கு ஏறும் 
சுத்தம் மறந்து போகும் 
உச்சியில் பர பரந்து 
முடி வெடிக்கும் 
எச்சில் ஆனாலும் 
பகிரத் துடிக்கும் 

இழுக்க இழுக்க 
இன்பம் என்பார் 
இதயம் வரை 
உறிஞ்சல் செய்வார் 
கபம் திரளும் நா வரலும் 
இதம் காண புனல் தேடும் 

கரகரக்கும் வறட்டு இருமல் 
கபத்தை வெளியே தள்ள 
கடினமாய் ஓய்விலா செருமல் 
கருணை அற்ற கபமோ 
கடு கடுத்து முரண்டு பண்ணும் 
கடும் போட்டி தொடர் போட்டி! 

( சிக்கு புக்கு ) 
உயிர் நலக் கேடு 

அகத்துள் அகண்ட வெளி 
அஃதில் உயிர் ஒலி ஒளி 
ஆர் உயிர் தரிக்க எழும் ஒலி 
லப் டப் லப் டப் இதய ஒலி 
ஆவி நிலைக்கப் பிராண ஒலி 
ஆற்றல் தரும் ஆன்ம ஒளி 

புகைத்தல் அகத்துள் எரியூட்டும் 
திகைக்கும் அகமும் தீங்கு உறும் 
உகைத்தல் இழக்கும் அகம் 
சிகைக்க மறுக்கும் பிரணவம். 
சிதைந்துத் தேயும் இதய ஒலி 
சிறை நீங்கும் ஆன்ம ஒளி. 

( சிக்கு புக்கு ) 
உடல் நலக் கேடு 

விரல்களில் நஞ்சு 
நீலம் பூக்கும் 
விரல் நகங்கள் 
மஞ்சள் காணும் 
நரம்பு உணர்வுகள் நலிவுறும் 
நா வறண்டு தடிமன் உறும் 

குடலில் புண் 
குதத்தில் வலி 
மலம் கழிக்க அவதி 
மனம் இழக்கும் நிம்மதி! 
பசி தூக்கம் பகை ஆகும் 

கருவிழியில் புரை எழும் 
காட்சிக்குத் திரை விழும 
கைகள் வழி கோல் ஏந்தும் 
கால்கள் இடர் தடவி நீந்தும் 

நாவில் உணர்வு மங்கும் 
நற் சுவை அறிய ஏங்கும் 
பல் ஈறும் பலம் இழக்கும் 
பற்கள் வெண்மை துறக்கும் 

உதவும் திசுக்கள் 
பற்று நீக்கும் 
உதவாத திசுக்கள் 
புற்று வைக்கும் 
உணவு வாசல் புடைக்கும் 
உள் மூச்சும் அடைக்கும் 

உயிர்நிலை வீங்குதல் 
தேய்ந்து குறையும் 
உவந்து முனைதல் 
தோய்ந்து மறையும் 
மணந்த நாள் வீங்கிய தோள் 
மகிழ் இரவில் தூங்கும் தோளே. 

விரைகளில் உயிர் நீர் மங்கும் 
விளையாது நன் மக்கட் செல்வம் 
வழி அறியாமல் 
மனம் சிதையும் 
விழிகள் கலங்கும் 
செந்நீர் சிந்தும் 

வள உறுப்பு அத்தினையும் புகை 
உள் இழுப்பில் அயர்ச்சி உறும் 
முள் காட்டும் 
முடிவு காலம் 
எள் நாள் 
கேட்டு வரும். 

( சிக்கு புக்கு ) 
சமூக நலக் கேடு 

சகலரும் புழங்கும் இடத்தில் 
சிந்தனை இன்றி புகைப்பார் 
வகை பலவாய் தன்னில் 
முகைத்த துன்பம் அனைத்தும் 
மிகை அளவு பிறர்க்கு பகிர்வார் 

தாய்மை உற்ற மாதரும் 
தளர்வு உற்ற மாந்தரும் 
துளிர்த்து வரும் சிசுவும் 
துவண்டு போவார் எளிதில் 

( சிக்கு புக்கு ) 
நிதி நலக் கேடு 

காத தூரம் 
கடுகிச் சென்று 
கடின உழைப்பு 
ஈந்து நன்று 
காசும் பணமும் 
கைவரப் பெற்றும் 
கள்ளப் புகைக்கு 
விரயம் ஆகும். 

திசுக்கள் நசிந்து திடம் இழந்து 
திரு உயிர் போன பின் 
திரை கடல் ஓடித் தேடிய திரவியம் 
திறம் அற்றுப் போகும்! 

( சிக்கு புக்கு ) 

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (15-Nov-16, 11:05 pm)
பார்வை : 83

மேலே