மண் வாசம்
கிராமத்துக் கரம் பிடித்து
மண்வாசக் கவித வீச
மனசுக்குள்ள ஆசதான் ஆனா
உண்மையா உள்ளேந்து வர
ஊருல சில நாளும் வாழ்ந்ததில்ல
அன்னிக்கி ஒரு நாளு ஊருக்கு
தாத்தா கைபிடிச்சி போகையிலே
வழியில் வந்த கிராமத்தார்
"என்ன பம்பாய்க்காரரே பேரனா?"
என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
"தம்பி நெல்லு காச்சிமரம் பாக்க வந்தியா"
என என் பொது அறிவையும் சோதிச்சார்...
ஊருக்குள்ள ஒரு பெரிசு
"சொம்பு பிள்ளையா..?" என வினவ
அம்மாவுக்கு அவங்க வெச்சபேரும் வெளியானது
வெட்டி வெட்டி சாச்ச இளநீரும்
வேக வெச்ச மல்லாக் கொட்டையும்
வெளங்காத பொருளில் உருண்டையும்
குட்டை குளத்திலும் பம்புசெட்டு பாச்சலிலும்
குளிக்கக் குளிக்க பசி நிரப்பும்
பாக்கும் இடமெல்லாம் பச்சைபூசி நிக்க
பாத்ததன் முகத்தை ஏரியில் மலையும்
தாத்தா பலஆசைகளை சொல்லித்தான் போனாரு
தோதோவென ஆண்டுகள் ஐம்பதும் போயாச்சு
ஊருக்குள்ள இப்பப்போனா முகம்தெரிஞ்ச ஆளில்ல
தென்னந்தோப் பெல்லாம் கருவேலங் காடாச்சு
காணி நிலமெல்லாம் கரம்பா காஞ்சிருக்கு
அப்பப்ப சேதி வருது காலேஜுகட்ட நிலம்தரியா
கருத்துப்போன மலைமட்டும் தாராதேன்னு சொல்ல
ஏரில தன் முகம் தேடுது....
---- முரளி