காதல் என்பது எதுவரை

முகம்பார்த்துக் காதலித்து முடிக்கின்ற மணமும்
=முறிகின்றக் காலத்தில், முழுமனதை கொடுத்து
முகம்காணா வகையினிலே முகநூலில் வாழ்வின்
=முகவரிகள் தேடுதற்காய் முளைக்கின்றக் காதல்
நகமோடு சதையாக நான்கைந்து மாதம்
=நலமாக சென்றாலும் நாளாக ஆக
அகம்கசந்து அலைமோதும் அவஸ்தைக்குள் சிக்கி
=அவமானம் கொள்வதனால் அனாதைபோல் ஆகும்
தெய்வீகம் என்றிங்கு தினந்தோறும் போற்றித்
=திரிகின்றக் காதலெலாம் திருமணம் கண்டு
மெய்தழுவி ஒருசிலநாள் மெய்யாக இருந்து
=மைவிழியாள் மைவிழியின் மைகரைந்து போக
கைகழுவி வேறொன்றின் கைபிடிக்க அங்கே
=கண்ணீரும் கம்பளையும் கொள்கின்ற காதல்
பொய்படைத்த மாந்தரிடம் புனிதத்தை இழந்து
=பூமியிலே சாக்கடையின் பொதுசொத்தாய்க் கிடக்கும்.
கருத்துவேறு பாடென்று கல்யாணம் முறித்துக்
=காண்கின்ற பிரிவின்பின் காதலிக்கும் மனங்கள்
பொருத்தமான துணைதேடிப் பொருந்துகின்ற வேளை
=புதிதாகக் கைப்பிடித்த புதுவாழ்வில் மகிழ்ந்து
திருத்தமான இல்வாழ்வின் திருத்தேரில் ஏறி
=திருஉலா செல்கின்ற தித்திப்பைக் கண்டு
வருத்தமுற்றுக் கொண்டிருக்கும் வந்தமுதல் காதல்
=வாழாத சோகத்தை யாரிடம்போய் சொல்லும் .
மரணம்வரை செல்லுமென மனதுவைத்தக் காதல்
=மரணத்தை இடையினிலே மணப்பதற்கு என்றே
சரணடையும் ஏற்றத்தாழ்வு சாதிமத மின்னும்
=சமுதாய சீரழிவு சாபமத னாலே
வரலாற்றில் கறைபடிந்து விடுதற்கு செய்யும்
=வகையற்றக் காரணத்தின் வழிநின்று கொண்டு
கரணமிடும் நிலைதன்னை கண்கொண்டு பார்க்க
=காதலெது வரையென்று காலனுக்கேத் தெரியும்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Nov-16, 10:00 pm)
பார்வை : 240

மேலே