தானாய் சுரக்கும் தகைமைக் கவிதை

தானாய் சுரக்கும் தகைமைக் கவிதை....

காற்றலை செவிப்பறை நுழையாதபடி
ஊற்றுணை இமைகளை இறுக்க மூடி
ஏற்றுடைக் கற்பனையில் மிதந்தபடி
சாற்றுடைக் கவிபொருள் நாடினேன்

விழித் திரைக்குள் கரிய வண்ணமாகி
ஆழிக் கடலடி செந்நிறமாய் மாறி
ஊழியில் குவிந்து மையப் புள்ளியாகி
செழி கற்பனை சொப்பணம் ஆரம்பமானது

பேரண்டக் காட்சிகள் யுகம் கடந்தன
காண்டிபக் கணையாய் பயணித்தேன்....
நீண்ட நெடுந்தொடராய் முடிவில்
நிர்மூலம் மட்டுமே நிலையானது.....

தேடிக் கிடைப்பதற்குக் கவின்கவிதை
அங்காடியில் விற்கும் உருபொருளல்ல
அண்டி அயலாரை வேண்டிப்பெற
உண்டியல்ல உணர் மொழியாகும்

தெவிட்டாதத் தெள்ளுத் தமிழும்
திக்கெட்டும் சிந்தை நுகரும் அழகும்
தைவிகமாய் உயிர் மரபணுவும் கமழ்ந்தால்
தகைமைக் கவிதை தானாய் சுரக்கும்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (23-Nov-16, 8:36 pm)
பார்வை : 51

மேலே