வெளிச்சம்
முகிலைக் கிழித்து வருவான் சூரியன்...
இரவை ஒளிரச் செய்வான் சந்திரன்...
பூக்களாய் பூத்துச் சிரிக்கும் விண்மீன்கள்...
பூமிக்கு மூன்றும் தருவது வெளிச்சம்......
எண்ணெய் இழந்தும் எரியத் துடிக்கும்
அகல் விளக்கு கோவிலுக்கு வெளிச்சம்...
தன்னை வருத்தி பிறர்க்கு உதவிடும்
மெழுகு வர்த்தி தியாகத்தின் வெளிச்சம்......
தாயின் மடியில் தலைச்சாய்த்துக் கேட்கும்
தாலாட்டுப் பாட்டுக் குழந்தைக்கு வெளிச்சம்...
தந்தையின் நெஞ்சில் துள்ளி குதிக்கையில்
தந்தையின் முகத்தில் அணையாத வெளிச்சம்......
அடுத்தவன் கைகள் உற்றவளைத் தீண்டினால்
வருகின்ற கோபம் காதலின் வெளிச்சம்...
அடுத்தவன் கைகள் நாட்டைச் சுரண்டினால்
வருகின்ற கோபம் தேசத்தின் வெளிச்சம்......
உலகத்தின் வீடுகளில் வெளிச்சம் இருக்குது...
உள்ளத்தின் வீடுகள் இருண்டு கிடக்குது...
உண்மையான வெளிச்சம் உள்ளத்தில் இல்லாததால்
உலகம் இருளைநோக்கி பயணம் போகிறது......