வில்லன் சொன்ன வேதம்
வெள்ளை வானம் கொள்ளைப் போனது...
பிள்ளை மனம் கல்லாய் ஆனது...
முள்ளில் இருந்தாலும் பூவாகவே மலர்ந்தது...
கள்ளிப் பாலாய் யார்தான் மாற்றியது......
வண்ணங்கள் நிறைந்த காலம் கடந்து
வன்மங்கள் வரைந்த கோலம் பூணும்...
வஞ்சிகளின் சாபம் வாழ்க்கையில் தீபம்...
வற்றிப்போகும் நதிகளில் மீன்களாய் ஓடும்......
அம்புகள் என்பதை வஞ்சத்தில் தொடுத்திட
அன்புகள் என்பது நெஞ்சத்தில் நிற்காது...
அனலென இரு விழிகள் கொதித்திட
அறம் என்பது அறவே இருக்காது......
தாய் சொல்லும் மொழிகள் கேட்காது
நாய்கள் போல தெருவில் அலைந்திடும்...
பாய் விரித்துப் படுத்தாலும் தூங்காது
பாய்கின்ற புலிகள் வருமென்று விழித்திடும்......
ஆடும்வரை ஆட்டம் முடிவதே இல்லை...
ஆட்டத்தின் முடிவில் ஆட்களே இல்லை...
ஆகாத செயல்களின் அடுத்தநாள் விளைவுகள்
ஆகாரமாய் மண்ணுக்குள் புதைந்திடும் வாழ்க்கை......