நிலவும் நானும்
நிலவே என்னைப் பார்த்து சிரிக்காதே...
உலவும் பொழுதில் என்னை வதைக்காதே...
நீயும் நானும் ஒன்றென்பதை மறுத்தாயோ?...
தேயும்போது தோழியாய் இருந்ததை மறந்தாயோ?......
மேகத்தில் நீ நீந்தி அலைகிறாய்...
மோகத்தில் நான் நீந்தி உறைகிறேன்...
கார்முகில் உன்றன் முகவொளித் தடுக்கும்...
கார்குழல் என்றன் முகத்தை மறைக்குமே......
வளர்வதும் தேய்வதும் உனக்கு மரபானது...
அழுவதும் சிரிப்பதும் எனக்கு வரமானது...
பகலைத் தேடியே இரவில் வருகிறாய்...
காதலை நினைத்தே இருளில் நுழைகிறேன்......
தூரத்தில் இருந்து கொண்டு பார்க்கிறாய்...
துயரத்தில் இருந்து கொண்டு வேர்க்கிறேன்...
தூக்கமின்றி நான் துடிப்பதைப் பார்த்ததும்
தூங்காது நீதான் கண் விழித்தாய்......
கிழக்கில் தோன்றி மேற்கில்நீ விரைகிறாய்...
காதல் வழக்கில் விழுந்துநான் கரைகிறேன்...
நிலவே நீயும் நானும் ஒன்றானாலும்
உன்னைப்போல் என்னால் சிரித்திட முடியலையே......