போங்கடா நீங்களும் உங்ககட்டுரை - கவிஜி

போங்கடா நீங்களும் உங்க..............கட்டுரை - கவிஜி

சரியான நேரத்தில் சரியான வாதத்தை முன்னெடுத்து போகும் நமது குழுவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். கிட்டத்தட்ட இந்திய குமுறல்களை நம் தோழர்கள் கொட்டியதைக் கண்டேன். சாதகம் பாதகம் என்று இருபக்கமும் இந்த பணப் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியிருப்பது உற்று நோக்கப் பட வேண்டிய ஆராயப் பட வேண்டிய நம்மை சூழ்ந்த ஆபத்து அல்லது காப்பாற்றல். கள்ளப் பணம் வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறது. நல்ல பணம் நடுவீதியில் வரிசையில் நிற்கிறது. ஒரு தவறை சரி செய்ய சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும். காய்ச்சல் வந்து விட்டது. மருந்து கசக்கும் என்றால் குணமாவது எப்படி என்பது ஒரு சாரர் கருத்து. காய்ச்சல் வந்தவனை விட்டு காய்ந்து கிடப்பவன் வயிற்றுக்குள் மருந்து ஊற்றுவது எவ்வகையில் குணம் அடையும் என்பது இன்னொரு சாரர் கருத்து.

கிட்டத்தட்ட தோழர்கள் மக்கள் அனைவருமே விவாதித்து விட்டார்கள். மீண்டும் அதையே பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். கள்ளப் பணம் பினாமி பணம்... முடக்கி வைக்கப் பட்ட பணம் வெளியே வர வேண்டும் என்று எடுத்த முடிவு தான் இது. ஆனால் இதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. இதில் தான் அரசியல் இல்லை. இதில் இல்லாமல் போக. இது வரை எந்த பணக்காரன் வரைசியல் நின்றான் என்பது பில்லியன் தொகை கேள்வி. ஆனால்... பத்துக்கும் அஞ்சுக்கும் போராடுகிறவன்... பாவமாய் வங்கிகள் முன் நிர்ப்பது அந்த ஜப்பான் காரருக்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

எல்லாம் சரி ஆக வேண்டும். தவறுகள் தலை முழுக்கிய பின் வந்த யோசனை இது. சாதகம் பாதகமாகவும் மாறும் சூழல் உண்டு. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்னை பொருத்தவரை பணத்தை கட்டு காட்டாக வீட்டுக்குள் பதுக்கி வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களே தயவு செய்து இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் நீங்கள் தான் தருகிறீர்கள் என்றே தெரியாமல் கூட கொடுத்து விடுங்கள். மாதம் கழித்து கிழித்தும் எரித்தும் வீணா போவதற்கு பதில் அதில் சில வாழ்க்கைகள் மீண்டு விட சாதகமாக இருக்கும்.

துக்ளக் வேலை மாதிரி தெரிந்தாலும் அது அப்படித்தானா என்பதில் சில கருத்து முரண்பாடுகளும் உண்டு. சில முரண்பட்ட கருத்துக்களும் உண்டு. நூறு ரூபாய் நாட்டுக்குள் போதுமான வரை கையிருப்பு வைத்துக் கொண்டு இந்த வேலையை செய்திருக்கலாம். சாமானிய மனிதனைப் பற்றிய யோசனை என்னவாயிற்று என்று யோசிக்கத் தோன்றுகிறது. சிறு துரும்பும் சுதாரித்து விட வைத்திருக்கும் என்று பெரும் யானையை மறைத்தே வைத்திருக்கலாம். முதலைகள் வலையில் சிக்குவது அபூர்வம் ஆயிற்றே.

ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை என்று கூறலாம். 5,10,20, 50 இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறி விட முடியாது தோழர்களே. 500, 1000 தடை, அவர்களுக்கு வைத்த பொறி. மாட்டிக் கொண்டது போல தோற்றமளிக்கும் காட்சியில் வரிசையில் நிற்கும் நாமும் தெரியலாம். ஆனால்... சீக்கிரம் மாட்டிக் கொள்ளும் திமிங்கலங்கள் என்பது அரசியல் கூற்று. பிழையாவதும் விதியாவதும் நாட்கள் நகர தெரிந்து விடும்.

என்னைக் கேட்டால் இந்த அதிரடி, மருந்துதான் என்று கூறுவேன். கொஞ்சம் கொஞ்சம் தியாகம் செய்து முதலைகளை பிடித்து கூண்டில் அடைத்து விடலாம். ஒன்று கருப்பு வெளியே வரட்டும். அல்லது எரிந்து சாம்பலாகட்டும். பீனிக்ஸ்சாய் பிறந்து வரட்டும் புதிய பொருளாதாரம். அங்கும் சில தோற்ற மயக்கம் இருக்கும். புறங்கை நக்காத தேன் எடுப்பவன் உண்டோ...! அடையாள அட்டை கேட்கிறார்கள் என்றெல்லாம் கோபப்பட்டால் மன்னிக்கவும். நீங்கள் மாற வேண்டும். அதே நேரம் அடையாள மை வைக்கிறேன் என்று கூறியும் நீங்கள் அமைதியாக இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் மாற வேண்டும்.

குறுகிய கால திட்டம் நெடுங் காலத் திட்டம் இடைக்காலத் திட்டம் என்று பொருளாதாரம் முதல் அறிவியல் வரை எல்லாத் துறைகளிலும் திட்டங்கள் வகுக்கப் படுவது உண்டு. ATM முன் பாவமாய் வரிசையில் மதியம் வரை காத்துக் கிடப்பது தோட்டாக்களாய் மாறுவதற்குதான் என்று இன்னும் நம்புகிறேன். அப்படித்தான் நம்ப வேண்டி இருக்கிறது. அதுதானே இன்றைய வாழ்க்கை. விடிவதில் தானே இருக்கிறது சூரியனின் வாழ்வு. ஓட்டுக்கு காசு வாங்கும் முன் கேட்டிருக்க வேண்டும்.(வாங்காதவர்கள் ஏன்டா ஓட்டுக்கு காசு கொடுக்கிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்). கேட்காமல் விட்ட எல்லா கேள்விக்குள்ளும் பதில் கிடைக்குதோ இல்லையோ கேள்விகள் இங்கே நிதானமாக விவாதிக்க படுகின்றன.

மூட்டை பூச்சியை அழிப்பதற்கு வீட்டை கொளுத்தி இருக்கிறார்கள் என்று உணர்கிறோம். சரி... சில வீடுகள் அழிந்தால் தான் மூட்டை பூச்சி அழியும் என்பது நமக்கும் தெரியும் தானே. இப்படி ஒரு பார்வையை தூங்கும் மாநிலத்தில் இருந்து கொண்டு செய்கிறோமே.. அது வரை சந்தோசம்.

பணம் மாற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் இலகுவான முறையை பாவப்பட்ட ஜீவன்களை மனதில் கொண்டு முடிவெடித்திருக்கலாம் அரசு. அங்கு தான் சறுக்கி இருக்கிறது என்று சத்தமாக கூறுவேன்.

நானும் வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறேன்.....

பாவப்பட்ட உலகில் பாலும் விஷமும் ஒன்றாகவே தான் ஓடும் என்பது கடவுளின் சாத்தானின் கூற்று.

போங்கடா நீங்களும் உங்க..............

கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-Nov-16, 8:33 pm)
பார்வை : 223

சிறந்த கட்டுரைகள்

மேலே