சேயின் முதல் பார்வை
இருள் சூழ்ந்த கர்ப்பப்பையினுள் நான்
ஈரைந்து மாதங்கள் இன்பமாய் இருந்தேன்...
தாயின் சுவாசத்தில் வாழ்ந்து வந்தேன்...
தானாக சுவாக்கவலி தாங்காது அழுதேன்......
புத்தொளி சிந்தும் பொன்முகம் ஒன்றில்
என்கண்கள் பார்த்த பூமியின் முதல்நிலா...
உண்ணாமல் நீந்தும் மீன்கள் இரண்டில்
என்முகம் சென்றிடும் புது வீதியுலா......
பூவின் இதழில் விழுந்தப் பனித்துளியாய்
தாயின் மடியில் தவழும் பிள்ளையாய்
மயிலிறகு கரங்கள் என்மேனி தீண்டிட
உயிருக்குள் உயிராய் உறைந்து விட்டேன்......
குடை விரிக்கும் இரு விழிக்குள்
கருவிழியாய் எனை வைத்துக் கொண்டாள்...
அத்திப்பழ அதரங்கள் ஒன்று சேர்த்து
முத்தம் ஒன்றைக் கன்னத்தில் பதித்தாள்......
உலகத்தைத் தூக்கிச் சுமக்கும் சாதனையில்
உள்ளத்தில் அன்பின் கரைகள் உடைந்தது...
என்னுலகமே நீதானென்று என்னுயிரை நனைக்கிறது...
வேண்டாம் இனி ஒரு பிறப்பெனக்கு......