தந்தையின் பார்வையில்

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் இதயத்தை வருடுகிறாய்...
பூக்களாய் மலர்கிறாய் பூங்காற்றாய் உலவுகிறாய்...
விழுவதால் துடிக்கிறாய் அழுவதாய் நடிக்கிறாய்...
பறவையாய் நினைக்கிறாய் இமைகளை விரிக்கிறாய்......


கருவிழியில் விளைந்திடும் ஆயிரம் கவிதைகள்...
கன்னக்குழியில் புதைந்திடும் மனதின் கவலைகள்...
கனியிதழ் வழிந்திடும் உமிழ்நீர் அமுதாகும்...
கருணையின் செழிப்பில் கன்னலதும் கசப்பாகும்......


மூங்கிலில் சங்கீதம் முழுமதி உன்முகம்...
வேங்கைகள் உன்நகம் கீறும்வலியிலும் ஒருசுகம்...
மாந்தளிர் மஞ்சங்களை விஞ்சிடும் உன்னங்கங்கள்...
நீதரும் முத்தங்கள் பிறக்காத புதுச்சந்தங்கள்......


வாய்பேசும் உன்மொழி நான்தினம் கேட்கயில்
சாய்ந்திடாது என்தேகத்தைச் செங்கோலாய் நிறுத்துகிறாய்...
பாய்விரித்து நான்படுத்தால் என்நெஞ்சில் நீதுயில்கிறாய்...
நோய்தீர்க்கும் மருந்தொன்றை உன்சிரிப்பினில் தருகிறாய்......


என்னில் உதிர்ந்தாய் அன்னையாய் உதித்தாய்
என்னுயிரில் நிறைந்தாய் இன்னுயிராய் உறைந்தாய்...
நெஞ்சில் தவழ்ந்துன் சுண்டுவிரல் தீண்டுகையில்
பாய்ந்துவரும் அலையாய்மனம் ஓயாமல் திரிந்தேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Dec-16, 10:53 pm)
பார்வை : 5133

மேலே