மாணவன் எப்படி இருக்கவேண்டும் - ரசீன் இக்பால்
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். "ஐயா மாணவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும்?" என வினவினான். அதற்கவர், "மாணவன் என்பவன், கொக்கைப்போலும், கோழியைப்போலும், உப்பைப்போலும், உன்னைப்போலும் இருக்கவேண்டும்" என்றார்..
அம்மாணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. "கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்" என்றான்.
"கொக்கு ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டு அவற்றைப்பிடிக்கும். அதுபோல் ஒரு மாணவன் சரியான வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்தி அரிய செயல்களை செய்யவேண்டும்.
கோழி குப்பைகளைக் கிளறும். ஆனாலும் அக்குப்பைகளை விட்டுவிட்டுத் தனக்குத் தேவையான இரையை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல் மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைப் புறம்தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உப்பை எந்த உணவில் கலக்கினாலும் கண்ணுக்குத் தென்படாது. ஆனால் அதன் சுவையை நாம் நன்றாக உணர முடியும். அதுபோல் மாணாக்கர்கள் எத்துறையில் இறங்கினாலும், அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிக்காட்டி, தன் மறைவுக்குப் பின்னும் இவர்தான் அதைச் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்.
மேலும் மாணவன் என்பவன் தனக்குள் எழும் ஐயங்களை எவ்விதத் தயக்கமுமின்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். ஆகையினால்தான் உன்னைப்போல் இருக்கவேண்டும் என்றேன்!" என்று விளக்கமளித்தார் சாக்ரட்டீஸ்.
அவர் கூறிய அருமையான பதிலை மாணாக்கர்கள் உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட்டுத் தங்கள் இலக்கைத் தொடவேண்டும்.. இச்சமூகத்தை உயர்த்திப் பல சாதனைகள் படைக்கவேண்டும்.. முயன்றால் வெற்றி நிச்சயம்!