திருக்குறளும் திருமந்திரமும்-10

திருக்குறளும் திருமந்திரமும்-10.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப் பத்தில் சொல்லப்பட்டுள்ள பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடியவர் புலவர் பாலைக் கொளதமனார் என்பவர். அவர் பாடிய மூன்றாம் பத்தில் தமிழகத்தில் வாழ்ந்த பாணர்கள், புலவர்கள், கணியன்கள், ஆசான்கள், பூசனை செய்யும் குருக்கள் ஆகிய அனைவருடனும் கலந்து பழகி, அவர்தம் சிறப்பு மிக்க கலைகள் அனைத்தையும் கற்றுத் தமிழராகவே வாழ்ந்தனர் வட நாட்டு ஆரியர்கள் எனப்படும் அந்தணர். இதைக் கூறவந்த கொளதமனார்,

“ஓதல் வேட்டல் அவைபிறர்செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி” (பதிற்று.24)

எனப் பாடினார். அவ்வாறு இங்கு வந்து தம் அடையாளம் துறக்காமல் அந்தணர் என்றும் பார்ப்பனர் என்றும் அழைக்கப்பட்டு இருப்பினும் அவர்கள் தொல்காப்பியக் காலந்தொட்டே மேற்சொன்ன ஆறு தொழிலையும் செய்து வந்தனர் என்பது புலனாகும். ’பிறப்பறுக்கும் தொழில்’ என்பது அறுதொழில் என்று இருக்க கொளதமனார் அவர் செய்த ஆறு தொழில்கள் என பட்டியலிடுவது மறுபுறம் இருக்க, ஒளவை மூதாட்டியோவெனில்,
“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொறிந்து”

எனக் கூறுவது மூலம் தானங் கொடுத்து தமிழ் மூவேந்தரும் வாழ்ந்ததையும் பார்க்கும் போது, பிறரிடம் தானம் பெற்று பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு சமூகத்தினர் என்பது விளங்கும்.

புறநானூற்றில் வரும் 143 ஆம் பாடலில் தாமப்பல் கண்ணனார் எனும் பார்ப்பனப் புலவர் மாவளத்தான் எனும் சோழ வேந்தனை, வட்டாடிய பொழுது, தப்புச் செய்தானென்று கூறி,
“ஆர்புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யார்”

என்னும் பாடல், தமிழகத்தை ஆண்ட அனைத்து வேந்தர்களும் பார்ப்பனரைப் போற்றிப் புறந்ததைக் காண்கிறோம். இதற்குச் சான்றாக,

“அருமறை நாவின் அந்தணர்க்கு அடையா” என சிறுபாணாற்றுப்படை 204 லும், புறநானூற்றில் 305 ஆம் பாடலில்,

“வயலை கொடியின் வாடிய மருங்குல்
உயவலூர்திப் பயலைப் பார்ப்பான்”

என்பதன் வாயிலாக அந்தணர் மன்னர்களிடையே தூது சென்றதை மதுரை வேளாசான் பாடியுள்ளார். இதைப் போலவே, புற நானூற்றில் உள்ள சான்றுகள் பலவாகும்.

“நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்” (புறம்-361) மற்றும்

”ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக”

எனும் பாடல் வாயிலாக அந்தணர் பலரை சுற்றமும் நட்புமாக தம்மைத் சூழ வைத்து வாழ்ந்தனன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதை மாங்குடிக் கிழார் பாடுகிறார்.

சங்க இலக்கியத்தில் மிகக் கூடுதலான, அதாவது 235 பாடல்கள் பாடிய கபிலர் தம்மை அந்தணர் எனப் பெருமைபடக் கூறிக் கொள்ளும் பாடல்கள் பல உள்ளன. அவற்றில் இரண்டு கீழ்வருமாறு:

“யானே பரிசிலன் மன்னும் அந்தணன் ((புறம்-200)

“அந்தணன் புலவன் கொண்டு வந்தனன்” (புறம் 201)

இவ்வாறு அந்தணர் என்போர் ஆறு தொழில்கள் புரிந்து அறம் புரிந்து வாழ்ந்தவர்கள் என்று தமிழ் நூல்கள் பலவும் கூறும் நிலையில் , யார் அந்தணர் என விளக்கம் அளிப்பதுபோல் தனியொரு இலக்கணம் வகுக்கின்றன திருக்குறளும் திருமந்திரமும்.

நீத்தார் பெருமையைக் கூறவந்த திருவள்ளுவர், ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று ஒழித்தவர்களின் பெருமையை சிறப்பாகக் கூறுவதே அனைத்து நூல்களின் முடிவு என்றதுடன் அறிவெனும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி செயற்கரிய செயல் செய்ய வல்லவர் நிறைந்த கல்வி ஒழுக்கம் உடைய சான்றோர் என்றும் அவர் குணமென்னும் குன்றேறி நின்றவர் என்பதால் அனைத்து உயிர்களிடத்தும் செம்மையான அன்பையும் அருளையும், காட்டி நடக்கும் அறத்தை உடையவர் என்று விளக்கினர். இதனை இரத்தினச் சுருக்கமாக,

“அந்தணார் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்” (திருக்குறள்-30) என்றார் வள்ளுவர்.
”அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்”
என்பர் இதற்கு உரை எழுதிய கலைஞர்.
பரிமேலழகரோவெனில்,
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

அந்தணர் என்பதற்கு அழகிய தண்ணளியினை உடையார் எனத் திருவள்ளுவர் குறித்த காரணத்துடன் அவர்கள் வேதத்தின் அந்தத்தையும் அணவுவோர் என்று பிறிதொரு காரணத்தை இயைத்துக் கூறிட முனைந்து, “அந்தண்மை பூண்ட அந்தணர், அருமறை யந்தத்துச் சிந்தை செய் அந்தணர்” என திருமூலதேவ நாயனார் சிறப்பு விளக்கம் அளிக்கிறார்.


“அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே” (திருமந்திரம் 234)


அனைத்து உயிர்களிடத்தும் அருள் உள்ளம் கொண்ட அருமையான வேத முடிவாகிய சிவத்தை இடைவிடாது நினைக்கும் அந்தணர், அடைகின்ற வளமான பூமி குன்றுதல் இல்லை; அந்நாட்டு அரசனும் ந்ல்லவனாக காலை மாலை ஆகிய இரு வேளகளிலும் ஆகுதி செய்வர் என்பது இப்பாடலின் பொருளாகும்.

’அந்தணர் ஒழுக்கம்’ எனக் கூற வந்த திருமூலதேவ நாயனார், பிறப்பை அறுக்கும் தொழிலையுடைய அந்தணர், மூவேளையும் தங்கட்குரிய தவமாகிய நல்ல செயல்களை செய்வர். மகாவாக்கியப் பொருளாகிய பிரணவத்துள் ஒடுங்கி இன்புறுவதோடு, காயத்திரி மந்திரத்தின் துணையுடன் மாயையை வென்று பிரம்ம சொரூபம் பெற்று நிற்பர் எனக் கூறுகின்றார்.

நீத்தார் பெருமையைக் கூறிய வள்ளுவர்,”அந்தணர் என்பவர் அறவோர்” எனக் கூறியதால், அடுத்த அதிகாரத்தில் “அறன் வலியுறுத்தல்” என அறன் எனப்படுவது யாதென விளக்கி அறச்செயல்களை நாம் செய்ய வேண்டும் என்பதையும் அவற்றை யார் யாருக்குச் செய்ய வேண்டும், எனக் கூற வந்தவர்,

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (திருக்குறள்-43)

எனப் பாடினர். இதன் மூலம் பிதிரர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார். தான் என்ற ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படுகிற அறச் செயல்கள்ளைத் தவறாது செய்தல் சிறந்த அறமாகும் எனக் கூறுவர்.

இதற்கு உரை கூற வந்த பரிமேலழகர்,

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)
இந்த அறன் வலியுறுத்தலை நாட்டினை ஆளும் அரசர்க்கு வலியுறுத்திக் கூறும் திருமூலர், அரசனுக்குரிய குற்றம் எனப் பொருள்படும் “இராசதோடம்” எனும் தலைப்பில் பின் வருமா|று கூறுகிறார்.
“திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டுஞ்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே” (திருமந்திரம் 244)

மென்மையான மறுபிறவியில் கிடைக்கும் முத்தியும், இந்த பிறவியில் செல்வமும் வேண்டுமாயின் அரசர் எப்போதும் நாட்டில் அறத்தை நில நாட்ட வேண்டும். சிறப்புடைய கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் வாழும் மக்களின் நல்வினை தீவினைப் பயன் யாவும் சொல்லப்போனால் அரசனுக்கு நன்மையோடு தீமையிலும் ஆறில் ஒரு பங்கு உண்டாகும் எனலாம். எனவே அற நெறி ஆற்றலென்பது தான் அறநெறி வ்ழுவாது நிற்றலோடு தம் குடி மக்களையும் அறநெறியில் நிறுத்துவது ஆகும். குடிமக்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயன் அரசனையும் சேரும் என்பதால் அறநெறியில் மக்களை ஒழுகச் செய்யாது விடுதல் அரசனுக்குரிய குற்றமாகும் என்றார்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (16-Dec-16, 3:39 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 643

சிறந்த கட்டுரைகள்

மேலே