ஒவ்வொரு நினைவுகள்
ஒருநாளில்...
அன்று
விபரீதக் கனவுகண்டு
விழிகளில் சிக்குண்டு...
வடியும்
கண்ணீரில்
வகுப்பறை பிம்பங்கண்டேன்...
துளித்துளியாய் நினைவுகள்
தோள்சாயும் தோழனே...!
எத்தனை நினைவுகள்
இருதயம்
தாங்கித்தாங்கி
இரும்பாகிப் போனதோ..
மறந்தாயோ நீ...!
விருந்தாய் பலநினைவு
மருந்தாய் பலநினைவு...
சுமந்தே சுகங்கண்டோம்
மறந்தாயோ நீ..!
முதன்முதலாய் கல்லூரி
இருவருக்கும்
புதிதாக...
புகுந்தவீட்டுப் பெண்ணாக
புகுந்தது
நினைவிருக்கா...
ஓடான என்முகமும்
பாலான உன்முகமும்
பார்த்ததும் சிரித்தோமே
பங்காளியானோமே..
இருபெண்ணைத்
தேர்ந்தெடுத்து
இருவருமே காதலித்து
மருநாள் வரும்போது
மாப்பிள்ளையானோமே...!
என்ன உறவிதுவோ
இருவருமே புரியாமல்
பேருந்தின் படிதழுவி
பேருறை செய்தோமே...!
தோல்வியின்
துயரங்களும்
தோழிகளின் சில்மிசமும்
காரணமே இல்லாமல்
கலந்து சிரித்தோமே
மறந்தாயோ நீ...!
நம்
வகுப்பறை பிளவுபட்டு
வாடிநின்றபோது
துடித்த பெண்ணிதயம்
வெடித்ததை அறிவாயா..!
எத்தனை நினைவுகள்
தோழா...!
இமையினை நிறைத்தபடி
இருதயம் நனைத்தது...
தோழிவீட்டு
மரணச்செய்தி
மாரிபோல்
விழுந்தபோது
கேளிப்பேச்சை
நாம் மறந்து
கிடந்தது
நினைவிருக்கா..!
கதறியழுத அவளுடனே
நாம்
சிதறிப்போனோமே தோழா...!
உதறிய உறவெல்லாம்
சிதறிப்போய் கிடக்க
சிதறிய நம்உறவோ
சித்திரமாய் சொலிக்க..
உதிரத்தில் வேறுபட்டு
ஒன்றானோம்
சாதியால் கூறுபட்டு
சென்டானோம்...
சருகாய் உதிர்ந்த
நம்நினைவு
இன்று
மெழுகாய் உருகுதே தோழா...!
மீண்டும்ஓர்
பிறவி வேண்டும்
இறைவா...
என்தோழனின்
முகங்கான
என் தோழியின்
உணவிலே பசியாற...
அவ்வப்போது
அடிவாங்கி சிரிக்க...
அங்கமெல்லாம்
புன்னகை பதிக்க...
அழுகின்ற கண்ணுக்கு
ஆறுதல் கொடுக்க...
மீண்டும் ஒருமுறை
வகுப்பறை வேண்டும்
தருவாயா இறைவா...!
உன்னிடம்
ஒளிகாட்டும்
சொர்க்கம் தேவையில்லை..
வானவர்
வழிகாட்டும்
சொர்க்கத்தை விட
பூமியில் புதிதான
சொர்க்கத்தை உணர்ந்தோமே...!
எத்தனை இன்பங்கள்
இங்கு கண்டோம்...
இறைவா..!
மீண்டும்
மாணவனாய் பிறந்து
மாண்டு போகவேண்டும்...
தருவாயா இறைவா
இவ்வரம்...நீ
தருவாயா.