சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் கருத்து --ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது
திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். இவரது `ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது என்று 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில் விஷ்ணு புரம் விருது பெறவுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெறும் வண்ண தாசனை, அவரது இல்லத்தில் `தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
உங்களது முதல் எழுத்து அனுபவம் குறித்து..?
பள்ளியில் படிக்கும்போது தி.சு.ஆறுமுகம் என்ற தமிழாசிரியர் தமிழ் கற்றுக்கொடுத்தார். அவரது வகுப்பில் வைத்துத்தான் சீட்டுக் கவிதைகளை எழுதி அரங்கேற்றம் செய்தேன். 1962-ல் ‘ஒரு ஏழையின் கண்ணீர்’ என்கிற எனது முதல் சிறுகதை `புதுமை’ என்ற இதழில் வெளிவந்தது. ஒரு அச்சகத்தில் வேலை பார்ப்பவனின் கதை அது. அதன் பிரதிகூட இப்போது என்னிடம் இல்லை.
2000-ல் உங்களது தந்தை, திறனாய்வாளர் தி.க.சி.-க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. உங்களது எழுத்துக்கு அவர் அளித்த ஊக்கம்போன்று வேறு யாரேனும் ஊக்கமாக இருந்துள்ளார்களா?
எனது தந்தை முதல் காரணம். அவர் உருவாக்கிய எங்கள் வீட்டு நூலகம் என்னை அதிகம் வாசிக்க வைத்திருந்தது. எனது அண்ணன் கணபதி நல்ல படைப்பாளி. வண்ணதாசன் என்ற பெயர்கூட அண்ணனிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதாக நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் தந்தைக்கும், மகனுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்.
வண்ணதாசன், கல்யாண்ஜி என்கிற உங்கள் புனைப் பெயர்களைப் பற்றி?
வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதுகிறேன். வர்ணம் என்ற குமுதம் ஓவியர் மீது எனது அண்ணன் கணபதிக்கு ஒரு பெரிய ஈடுபாடு. வர்ணதாசனாக அவர் இருந்தார். எனக்கு வல்லிக்கண்ணன் மீது ஈடுபாடு. சுப்புரத்தினதாசன் என்பதை ஒரு கவிஞர் சுரதா என வைத்துக்கொண்ட மாதிரி, வல்லிக்கண்ணதாசனை ‘வண்ண தாசன்’ என மாற்றிக்கொண்டேன். ஆனால், இப்பெயர் என் அண்ணனிடம் இருந்து எடுத்துக் கொண்ட மாதிரிதான் ஞாபகம்.
எல்லா கதைகளிலும் நீங்களே ‘கதை சொல்லி’யாக இருக்கிறீர்களே?
வாழ்க்கையின் தளத்தில் இருந்து தான் எழுத முடியும். ஜெயகாந்தனால் குதிரை வண்டிக்காரனைப் பற்றி எழுத முடிகிறது. வண்ணநிலவனால் கடல்புரத்து மக்களைப் பற்றி எழுத முடிகிறது. நான் சுந்தரத்து சின்னம்மை பற்றி எழுதுகிறேன். நேரடிப் பங்கேற்பு அனுபவம் இல்லாதவரை அப் படைப்பாளியால் அதை எழுத முடியாது. பரமசிவன் என்கிற நண் பரை பற்றி எழுதும்போது, சிவன், சிவன் என்றே எழுதியிருப்பேன். சில நேரங்களில் குறியீடுகளாய் மாற்றி எழுதியுள்ளேன்.
உங்களது நட்பு வட்டாரம் குறித்து…?
மிகக் குறைந்த நண்பர்கள், சுருக்கமான நட்பு வட்டாரம். வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ர மாதித்யன். இப்படியான எங்க ளது நால்வரை குறித்தும் விக்ர மாதித்யன் எழுதியுள்ள 4 பேர் கட்டுரை நல்ல கட்டுரை. நண்பர்களும் எழுத்தாளர்களாய் அமைவது பெரிய விஷயம்.
நாவல் எழுத இதுவரை முயற்சிக்காதது ஏன்?
தடை ஒன்றும் இல்லை. இன்று நினைத்தாலும் எழுதி விடலாம். என்னுடைய 15 சிறுகதைகளை முன் பின்னாக எப்படி மாற்றிப்போட்டாலும் நாவல் வடிவம் வந்துவிடும். என்னுடைய சிறுகதைகளை நானே இப்படிச் செய்யமுடியும். இலங்கையிலும் பிறமொழி இலக்கியங்களிலும் இப்போக்கு நடைமுறைக்கு வந்து விட்டது. அதையே சுவாரசியமான நாவலாக்கிவிடலாம். தடையேதும் இல்லை.
சாகித்ய அகாடமி விருதுபெற்றுள்ள நிலையில் இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
அதிகம் வாசிக்க வேண்டும். படைப்பாளிகளாக இருந்து கொண் டும் இப்போதும் நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்கி றோம். படைப்பாளிகள் சிறந்த வாசகர்களாக இருக்க வேண்டும்.
Tamil