சிறுகதை - புல்லாங்குழல்

புல்லாங்குழல்



ரஞ்சித்திற்கு சிறு வயதிலிருந்தே புல்லாங்குழல் மீது ஒரு தனிப்பற்று வளர்ந்து விட்டிருந்தது.

நேரம் போவது தெரியாமல் ஏதாவது பாடல்களை அதிலிசைத்துக் கொண்டிருப்பான்.

படித்து முடித்தபின் நல்லதொரு வேலையில் சேர்ந்து, கிராமத்திலிருந்த நிலத்தை விற்றுவிட்டு, மாதாந்திரத் தவணையில் வங்கியொன்றில் கடன்வாங்கி ஒரு சிறிய வீடும் வேலைசெய்யும் இடத்திற்கு அருகில் வாங்கிவிட்டான். பெற்றோருடன் அங்கு வாழ்ந்திருக்க, ரஞ்சித்திற்கு திருமணமாகியது.

அவன் மனைவி ரம்யா படித்திருந்தாலும், வயதாகிய அவன் பெற்றோருக்கு பணிவிடை செய்வதை ஒரு பாக்கியமாகவே கருதி அவர்களுடன் அந்த சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தாள்.

பெற்றோர்கள் தன்னுடன் வாழ்வதால் அவனது இளமைக் கனவுகள் பல பாழாயின. எனவே, வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்ததால் பெற்றோர்களின் நிம்மதி குலைந்திருந்தது.

அவர்கள் வீட்டின் சற்று தொலைவில் ஒரு பூங்கா இருந்தது. அங்கு சென்று புல்லாங்குழல் ஊதி, மனத்திருப்தி யடைந்த பிறகு வீட்டிற்குள் வாங்கன்னு ரம்யா பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.

தன் கனவுகளுக்கு இடையூறாக இருப்பது பெற்றோர்கள் தான் என்றெண்ணி, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவதென்று முடிவு செய்தான். அதற்கு, ரம்யா சம்மதிக்கவில்லை. பிறகு, பெற்றோரையும், எதிர்த்து நின்ற ரம்யாவையும் எப்படியோ சம்மதிக்கவைத்து, தாய்தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான்.

ஆறுமாதங்கள் ஓடிய பின் ஒருநாள், அலுவலகத்திலிருந்து வேகமாகவே வீட்டிற்குத் திரும்பி வந்தான். அந்நேரம் ரம்யா உறங்கிக்கொண்டிருப்பாள் என்றெண்ணி, தன்னிடமிருந்த சாவியால் வீட்டின் கதவைத் திறந்து, நேராக படுக்கையறைக்குள் நுழையவும்,

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

படுக்கை யறைக்குள் நுழைந்த கணவன்
படுக்கைமீ தில்நான்கு கால்கள் தெரிய
எடுத்துத் தடியால் சரமாரித் தாக்க
உறங்கிய பெற்றோர் அலறி எழவும்
அறைக்குள் நுழைந்த மனைவியைப் பார்க்க
வலியில் துடித்த இருவர் மகனிடம்
ஏண்டா மடையா அடித்தாய்யென் றேவினவ
என்னபதில் சொல்வான் மகன்

அப்பொழுது கண்கலங்கி நின்ற ரம்யா, அப்பாவிற்கு உடல்நலம் பாதித்திருப்பதாக அம்மா சொன்னதால், இருவரையும் உங்களிடம் கேட்காமலேயே இங்கு வரவழைத்தேன். உங்களிடம் தெரிவித்தபின் அழைத்துவரலாமென்றால் நீங்கள் சம்மதிக்கவில்லையென்றால் என்ன செய்வதென்று அறியாமல் தான் அப்படி செய்துவிட்டேன். நீங்கள் இவ்வாறு நடந்துகொள்வீர்களென்று என்கனவிலும் கருத்தியிருக்கவில்லை. அது மிகவும் தப்பு என்று இப்பொழுது நினைத்து அழுகிறேன் என்றாள்.

தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு, பெற்றோரையே அடித்துவிட்டோமே என்று கண்கலங்கி, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நீங்கள் முதியோர் இல்லத்தில் வாழவேண்டாம். இங்கேயே எங்களுடன் இருந்துவிடுங்கள். இனி, ஒருநாளும் இந்தப் புல்லாங்குழல் நான் தொடமாட்டேன்.

உங்கள் நிம்மதியே எங்களிருவரின் லட்சியம் என்று கூறி, இத்தனை நாட்களாய் ஆறாம் விரலாய் ஆகிப்போன அந்த புல்லாங்குழலை வீசியெறிய, அருகில் இருந்த பூங்கா வாயிலில் சென்று வீழ்ந்தது.

பெற்றோர் தம் மெய்வலியையும் மறக்க, ரம்யா ரஞ்சித்தின் கன்னத்தில் வழிந்த நீரை தன் முந்தானையால் துடைத்தாள்.


மறுநாள், அலுவலகத்திற்குச் செல்லும் போது, வீசியெறிந்த புல்லாங்குழல் பூங்கா வாயிலில் வீழ்ந்திருக்க மார்கழி மாதப் பனித்துளிகள் தாங்கிய புல்லாங்குழல் அவனைப் பார்த்து இனிய பூபாள இராகம் இசைப்பதுபோல் உணர்ந்தான்.



- தர்மராஜன் வெங்கடாச்சலம்

எழுதியவர் : (25-Dec-16, 10:01 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 359

மேலே