மரணமே வா

சின்னச்சின்ன திரையில் என்சிரிப்புகளோ மறையும்!
வண்ணவண்ண கனவுகள் வான்மேகமாய் போகும்!
எண்ணிஎண்ணி பார்த்து என்விழியிரண்டும் தேயும்!
வந்துபோகும் வாழ்வோ அதுஎந்தநாளில் முடியும்?

பிறந்தவுடன் நானோ பிள்ளையாக இருந்தேன்!
வளர்ந்தவுடன் தானே பையனாக ஆனேன்!
வயதுதாண்டும் பொழுது கிழவனாக ஆவேன்!
என்ன இருந்துமென்ன பிணமாக போவேன்!

வாழ்வுகளும் தாழ்வுகளும் வந்துவந்து போக
ஏற்றங்களும் சரிவுகளும் கண்டுமனம் நோக
துன்பத்தையும் இன்பத்தையும் எந்தவிதம் ஏற்க?
இந்தவாழ்வை தாங்கிநிற்கும் மனிதஇனம் வாழ்க!

முடியும்முன் பனிமலரில் வசித்துவர வேண்டு்ம்
ஓசையே இல்லாத இடமொன்று வேண்டும்
கலவரங்கள் இல்லாத அமைதிமனம் வேண்டும்
இந்தவரம் வந்துவிட்டால் மரணமே போதும்!

கனவுகளில் மரணசுகம் வாசனையை வீச
அந்தசுகம் ஆவியிலே இன்பசுகம் ஏற்ற
இப்பொழுதே வேண்டுமென்று இருதயமும் அழுக
இந்தசுகம் தழுவவே கண்சாய்வேன் சாக!

ஔித்துகளோ கண்ணுக்குள் மரணவழி காட்டும்
அப்பொழுதே ஞானஔி மூளைக்குள் சுரக்கும்
ஆனந்தத்தேம்புதலில் மனம் ஜீவனையே கரைக்கும்
ஔித்துகளில் முடிந்தவரை ஏறி மனமிருக்கும்!

மரணத்தின் ரகசியங்கள் மாண்டவரே அறிவார்
வாழ்ந்தவரோ அதுயில்லை இதுயென்று சொல்வார்
சொர்க்கத்தை நரகத்தை யாரிங்கு பார்த்தார்?
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கடவுளையா பார்த்தார்?

ஆகாய சந்தைக்குள் நீங்களும் போங்கள்!
வாழ்வுதனை வென்றுவிட்டு மரணத்தில் விழுங்கள்!
உதவிதனை செய்துவிட்டு உயிர்விட்டு போங்கள்!
சொர்க்கமோ நரகமோ நிம்மதியாய் போங்கள்

எழுதியவர் : (27-Dec-16, 11:49 am)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 312

மேலே