மழையும் மனநிலையும்
"" மழையும்... மனநிலையும்""
மழைக்காலம் மனதினில் மலர்ந்ததால்,
விழிச்சன்னல்களில்
பனி படர்ந்தன.....
அவ்வப்போது
தூறலாய் இருந்த
உனது வெறுப்பு..
இன்று காட்டாற்றின்
வெள்ளமாய் எனை
மூழ்கடிக்க தொடங்கிவிட்டது .
கிள்ளியக் காம்பு சிலச்சொட்டுகள் பாலை உதிர்த்து,
தன் வலியைக் காட்டுவதுபோல்..
என் விழிகளும்
சிந்துகின்றன
சில துளிகளை...
நீயறியாதவாறு உடனே துடைக்கின்றேன்...
அழுவதுதான் உனக்குப் பிடிக்காதே...
அவ்வப்போது மழைத்துளியாய் என்னைச் சிலிர்க்க வைத்த உன் பிரிவின் தாபம்..
இன்று கனமழையாய்
கலங்கவைக்கின்றது
கணநேர இடைவெளி இல்லாமல்....
சிலகாலம்தான் என்றாலும்
சிலையாய் செதுக்கப்பட்ட உன் நினைவுகள்..
விலகிடாமல் வெந்தணலில் வெறும் மணலை வறுப்பதுபோல்
எனை ரணப்படுத்துகின்றது....
அழுவது யாருக்கும் தெரியக்கூடாதென,
அடைமழையில் நனைகின்றேன் அடம்பிடிக்கும் மனத்தினை ஆற்ற வழித்தெரியாமல்....
ஓயாது பெய்யும் மழைபோல்..
காயாமல் வலிக்கின்றது
மனக்காயங்கள்.
இதுவும் கடந்து போகுமென்று எவரோ சொன்னது மழைக்கு மட்டுமேயன்றி
மனத்தின் வேதனைக்கல்லவே....!!!
ஆக்கம்: மகேஸ்வரி பெரியசாமி