வெற்றிக் கொடிநடு
நெஞ்சே நீயொரு எரிமலை - நீ
நினைத்தால் ஆகாத தெதுமிலை
வேங்கை போல்எழ தடையிலை - நீ
விலக்கிடு உந்தன் குமுறலை
சோம்பலை நீக்கி எழுந்திடு - உன்
சோகத்தை துரத்தி சுடர்விடு
தோள்களை உயர்த்தி புறப்படு - நீ
தோல்விகள் வருகையில் உரப்படு
தீமையைக் கண்டால் சினப்படு - உன்
தேகத்தில் பலமுண்டு சிலிர்த்திடு
முனைப்பாய் நீயும் செயல்படு - உன்
மூளையில் திறனுண்டு முயன்றிடு
தடுக்கும் தடைகளை தகர்த்திடு - நீ
தன்மான சிங்கம் உணர்ந்திடு
நல்லோரைக் கண்டால் பணிந்திடு - நீ
நரிகளை நாட்டில் களையெடு
வாய்ப்புகள் வருகையில் தாவிடு - உன்
வெற்றிக்கு வியர்வைத் துளிவிடு
உழைப்புக்கு முதலிடம் கொடுத்திடு - உன்
உறவின் குறைகளை மறந்திடு
ஆபத்தில் உதவிட கைகொடு - உன்
அகத்தினில் தன்மான வேர்விடு
முகத்தினில் புன்னகை பூவிடு - மலை
முகட்டினில் வெற்றிக் கொடிநடு.
பாவலர். பாஸ்கரன்