என் தங்கை = என் உலகம்

பிறப்போடு பரிசாய் கிடைத்த
முதல் நட்பு அவள்..

தொப்புள் பிணைப்போடு பிறந்து வந்த பிஞ்சு உறவு அவள்..

குதூகல குறும்புகளின் குட்டி குற்றாலம் அவள்..

மங்காத மழலைப் புன்னகை தேசத்து மணிமகுடம் சூடா இளவரசி அவள்..

உயிர்களிடத்து உன்னத நேசம் வளர்க்கும் அன்பின் ஆலயம் அவள்..

கருவிழியிரண்டை கருவறையாக்கி கருணை கருவைச் சுமக்கும் தாய்மையின் தாயகம் அவள்..

கோடி மலர்களை ஜோடி சேர்த்து
வாடி நின்ற என் மனதைத் தேற்ற புன்னகைத் தேன் சிந்தும் பொன்னுடல் பொக்கிஷம் அவள்..

புரியா தவத்தின்
கேட்கா வரம் அவள்..

அழியா அன்பின்
அட்சயப்பாத்திரம் அவள்..

அணையா விளக்கின்
சுடரும் ஒளி அவள்..

அற்ப வாழ்வின்
மொத்த அர்த்தம் அவள்..

சொற்ப சொந்தங்களில்
சொர்க்க பந்தம் அவள்..

ஒற்றைக் கருவறையின்
இரண்டாம் சிசு அவள்..

மூன்றாம் பிறை என நான்முகன் படைத்த பஞ்சபூத உலகில் தோன்றிய இளவம் பஞ்சுத் தோல் போர்த்திய இளம் பிஞ்சென பிறந்தவள் அவள்..

நீங்கா நினைவின்
தூங்கா உறைவிடம் அவள்...

ஏங்கா நெஞ்சமும் உண்டோ தங்கை நிலவை வேண்டா உள்ளமும் உண்டோ...

என் தங்கத் தங்கையின் விழிகங்கையில் வழியும் சிறுதுளியும் அவள் கன்னக்குழித் தொடவும் விடமாட்டேன்..

இறப்போடும் உன்னுடன் கைக்கோர்த்து வருவேன் அங்கும் நின் முகிழ்ந்த முகில் முகம் கண்டு மோட்சம் பெற..

எழுதியவர் : ச.சதீஷ்குமார் (11-Jan-17, 9:59 am)
பார்வை : 190

மேலே